நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கி. வைத்தியநாதன்

அந்த நேரத்தில் ராஜேஷ் பைலட்டிடமிருந்து தொலைபேசி வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும், தில்லியில் ஜனவரி மாதக் கடும் குளிரில், அவர் விழித்து கொண்டிருப்பதும், என்னை அழைப்பதும், நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அழைப்பை எடுத்ததும் அவர் பேசத் தொடங்கினார்.

'நீங்கள் என்னை அழைத்திருந்ததாகக் குறிப்பு வைத்திருந்தார்கள். உடனடியாகக் கூப்பிட முடியவில்லை. எதற்காக அழைத்திருந்தீர்கள் என்று எனக்குத் தெரியும். அந்த முடிவை எடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.'

'நீங்கள் போட்டியில் இருந்து விலகியதையும் நம்ப முடியவில்லை. நரசிம்ம ராவ்ஜி முதல் நபராக சீதாராம் கேசரியை வாழ்த்தியதையும் நான் எதிர்பார்க்கவில்லை...'

'அவர் அப்படி ஒரு முடிவை எடுக்க இருக்கிறார் என்று தெரிந்ததால்தான், நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன். நான் தனி நபராக இருந்து இனியும் போராடுவதில் அர்த்தமில்லை என்று தோன்றிவிட்டது. என்னைப் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வற்புறுத்தியவர் யார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்...'

'யார் அது ?'

'பிரணாப் முகர்ஜி...'

'பிரணாப்தாவா? அவரா உங்களை போட்டியிலிருந்து விலகும்படி சொன்னார். நம்பவே முடியவில்லையே...'

'சீதாராம் கேசரியை நரசிம்ம ராவ் ஆதரிக்க முற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் இருப்பதாகவும், அதே காரணத்துக்காக நானும் சீதாராம் கேசரி போட்டியின்றி நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட வழிகோல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நான் பிடிவாதம் பிடித்தபோது, அவர் சில அறிவுரைகளைக்கூறி வற்புறுத்தினார்.'

'நரசிம்ம ராவ்ஜி விலகிக் கொள்வதற்கு என்ன காரணம் என்று தெரிவித்தாரா?'

'இல்லை. ஆனால், நான் ஏன் விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு அறிவுரை கூறினார். 'உனக்கு வயது இருக்கிறது. வீண் பிடிவாதம் பிடிக்காதே. எல்லோருமாகச் சேர்ந்து உன்னை ஓரங்கட்டி விடுவார்கள். எதிர்காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தை வழிநடத்த நம்பிக்கை தரும் இளைஞர்களில் ஒருவராக இருக்கிறாய். உன்னைக் கட்சி இழந்துவிடக் கூடாது. உன் நன்மைக்காகச் சொல்கிறேன். போட்டியில் இருந்து விலகி, கேசரி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நீ

வழிகோல வேண்டும். நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று எதிர்காலத்தில் நீ புரிந்துகொள்வாய்' என்பதுதான் பிரணாப் முகர்ஜி எனக்குத் தந்த அறிவுரை...'

'காரணமில்லாமல் பிரணாப்தா அப்படி உங்களை வற்புறுத்தி இருக்க மாட்டார். இதற்கு ஏதோ பின்னணி இருக்கக் கூடும்.'

'எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால், என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப் போட்டியிட வைத்துத் தோற்கடிப்பதன் மூலம், கேசரியின் பலம் அதிகரிக்கும் என்பதை ஏன் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்?'

'நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் பின் வாங்குகிறார்கள் என்றால், அதற்கு நிச்சயமாக ஏதோ ஒரு காரணமோ, பின்னணியோ இருக்கும். நான் அடுத்தமுறை தில்லிக்கு வரும்போது நிச்சயமாகப் பிரணாப்தாவை சந்தித்து இதன் பின்னணி என்ன என்று கேட்டுச் சொல்கிறேன்.'

அதற்குப் பிறகும் பத்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்தது. அதனால் அவரை சமாதானப்படுத்தும் விதத்தில் நான் பேசிக் கொண்டிருந்தேன். இணைப்பைத் துண்டிப்பதற்கு முன்னால் ராஜேஷ் பைலட் சொன்ன வார்த்தைகள் இவை- 'தூக்கம் பிடிக்கவில்லை. யாரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் என்று தோன்றியது. சட்டென உங்கள் நினைவு வந்தது. இதையெல்லாம் நான் வேறு யாரிடம் சொல்ல முடியும்?'

எவ்வளவு பெரிய அரசியல்வாதி. எவ்வளவு செல்வாக்குள்ள குஜ்ஜார் இனத்தவரின் தலைவர். துணிச்சலுக்குப் பெயர்போன காங்கிரஸ்காரர். அவர் என்னையும் ஒரு நண்பராக நினைத்து, நள்ளிரவில் மனக்குமுறல்களைப் பகிர்ந்து கொண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் நான் உணர்ச்சி வசப்படுகிறேன்.

நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சீதாராம் கேசரி, மக்களவை காங்கிரஸ் தலைவராக சரத் பவார் இருப்பார் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி எல்லா நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.

'ஐக்கிய முன்னணி அரசுக்குக் காங்கிரஸ் அளித்துவரும் ஆதரவு தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அதேநேரத்தில், பிரதமர் தேவே கௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் நடவடிக்கைகளைக் காங்கிரஸ் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும்' என்று சீதாராம் கேசரி கூறியிருந்தது, ஐக்கிய முன்னணி வட்டாரங்களில் கடுமையான விமர்சனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. நாடாளுமன்றக் கட்சித் தலைவராகிவிட்ட நிலையில், சீதாராம் கேசரியின் பார்வை பிரதமர் பதவி மீது விழுந்திருக்கிறது என்கிற ஐயப்பாடு வலுவாக எழுந்தது.

வாழப்பாடி ராமமூர்த்தியை சந்திக்க சாஸ்திரி நகரிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ரங்கராஜன் குமாரமங்கலம் இருந்தார். அவர் காங்கிரஸில் மீண்டும் இணையவில்லை. எந்தவித முடிவும் எடுக்காமல் இருந்த நேரம் அது.

'சீதாராம் கேசரி என்ன சொல்கிறார்? தேவே கௌடா ஆட்சியைக் கவிழ்ப்பாரா, மாட்டாரா?' என்கிற என் கேள்விக்கு ரங்கராஜன் குமாரமங்கலம் எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

'ஏன் அத்துடன் நிறுத்திவிட்டீர்கள்? சீதாராம் கேசரி பிரதமராவாரா, மாட்டாரா என்று கேட்கலாம். இல்லையென்றால், காங்கிரஸ் தேவே கௌடா அமைச்சரவையில் சேருமா என்று கேட்கலாம். இவையெல்லாமே ஊகம்தான். சீதாராம் கேசரி என்ன செய்வார் என்று அவருக்கே தெரியுமா என்பது எனக்கு சந்தேகம்தான்.'

வாழப்பாடி ராமமூர்த்தியின் கருத்து வேறுவிதமாக இருந்தது.

'காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவதையும், காங்கிரஸ் அமைச்சரவையில் சேர்வதையும் தமாகாவும், திமுகவும் விரும்பாது. அப்படி நடந்தால், ப.சிதம்பரமும், 'முரசொலி' மாறனும் இப்போது வகிப்பதுபோல முக்கியமான அமைச்சரவைப் பொறுப்புகளை வகிக்க முடியாது. இவர்களைவிட அனுபவசாலிகளும், மூத்த தலைவர்களும் காங்கிரஸில் இருக்கிறார்கள்...'

வாழப்பாடி ராமமூர்த்தியின் கருத்தை ரங்கராஜன் குமாரமங்கலமும் வழிமொழிந்தார். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில், தேவே கௌடா ஆட்சி அதிக நாள் தாக்குப்பிடிக்காது என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரிந்தது. அது மட்டுமல்ல, விரைவிலேயே ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சியில் இணையக் கூடும் என்கிற சந்தேகமும் அன்றைய சந்திப்பில் எழுந்தது.

நரசிம்ம ராவ், பிரணாப் முகர்ஜி, ஜகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும், திடீரென்று தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சீதாராம் கேசரி போட்டியின்றி நாடாளுமன்றக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட ஆதரவு தெரிவித்தது ஏன்? இந்தக் கேள்வி குறித்து நாங்கள் நீண்ட நேரம் விவாதித்தோம். விடைதான் கிடைத்தபாடில்லை.

கர்நாடக முதல்வர் ஜெ.ஹெச்.பாட்டீல் தலைமையிலான குழு, காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்திருந்தது. கர்நாடக முதல்வருக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் தாஜ் ஹோட்டலில் மிகச் சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது. அதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 'முரசொலி' மாறனும் இணைந்து கொண்டார்.

முதல்வர் ஜெ.ஹெச்.பாட்டீல் குழுவில் அப்போது கர்நாடக துணை முதல்வராக இருந்த, இப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இருந்தார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழக, கர்நாடக முதல்வர்கள் இருவருமே தீவிரமாக இருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் எத்தகைய முடிவும் எட்டப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம், துணை முதல்வர் சித்தராமையாவின் பிடிவாதம்தான் என்று கூறப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து தெரிந்துகொள்ள நானும் சென்றிருந்தேன். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. முடிவில், பேச்சுவார்த்தையைக் கைவிட்டு நடுவர்மன்றத்தை நாடுவது என்று தமிழகம் முடிவெடுத்தது. கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தார்.

'காவிரி நடுவர் மன்றத்துக்குத் தலைவர் இல்லாமல் இருந்ததால், பேச்சுவார்த்தை நடத்தும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்போது நடுவர்மன்றத்துக்குத் தலைவர் நியமிக்கப்பட்டுவிட்டதால், பிரச்னையை நடுவர்மன்றத்துக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.'

'அப்படியானால் பேச்சுவார்த்தை இனிமேல் கிடையாதா?'

'நடுவர் மன்றத்துக்குச் செல்வது என்று தீர்மானித்து விட்டதால், பேச்சுவார்த்தைக்கு இனிமேல் இடமில்லை...'

'கர்நாடகம் தனது நிலையில் இருந்து மாறாததுதான் உங்களது இந்த முடிவுக்குக் காரணமா?'

'ஆமாம்.'

எல்லோரும் கலைந்து சென்றுவிட்டனர்.

கர்நாடக முதல்வர் ஜெ.ஹெச்.பாட்டீல் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நான் சென்றேன். அவர் ஏதாவது சொல்லக் கூடும் என்று நான் எதிர்பார்த்தேன். அங்கே போனபோது, முதல்வர் பாட்டீல், துணை முதல்வர் சித்தராமையா,

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் நாகே கௌடா, சட்ட அமைச்சர் நானையா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். காத்திருந்தேன்.

அந்த நட்சத்திர விடுதியின் லாபியில் அமர்ந்து அன்றைய தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். துணை முதல்வர் சித்தராமையா, நீர்வளத் துறை அமைச்சர் நாகே கௌடா, சட்ட அமைச்சர் நானையா மூவரும் சில அதிகாரிகள் புடைசூழ வந்து கொண்டிருந்தனர். அவர்கள் விமான நிலையத்துக்குக் கிளம்புகிறார்கள் என்பது தெரிந்தது.

நான் 'வணக்கம்' சொல்லி அவர்களை நெருங்கினேன். அந்த இடத்தில் என்னைச் சந்திக்க விரும்பவில்லை என்பதைத் துணை முதல்வர் சித்தராமையாவின் முகம் தெரிவித்தது. நாகே கௌடா சிரித்தபடியே கை குலுக்கினார்.

'இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்' என்று ஆங்கிலத்தில் வினவினார்.

துணை முதல்வர் சித்தராமையாவும் மற்றவர்களும் நகர்ந்து விட்டனர்.

'பேச்சுவார்த்தை ஏன் வெற்றி பெறவில்லை?'

'நடுவர்மன்றத்துக்குச் செல்லப் போவதாகவும், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் உங்கள் சி.எம். கூறிவிட்டார். நாங்கள் நடுவர் மன்றத்தை புறக்கணிப்பது என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.'

'என்ன சொல்லி நீங்கள் பிரிந்திருக்கிறீர்கள்?'

' 'நமஸ்தே' சொல்லி பிரிந்துவிட்டோம். விரைவில் 'வணக்கம்' சொல்லி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது...'

'முதல்வர் உங்களுடன் வரவில்லையா?'

'வருகிறார். யாரோ ஒரு முக்கியமான நபரைச் சந்திக்க இருப்பதாகவும், எங்களை முதலில் விமான நிலையம் போகும்படியும் சொல்லி இருக்கிறார். வருகிறேன்...' என்றபடி நகர்ந்தார் நாகே கௌடா.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, முதல்வரும், அவரது உதவியாளர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் கிளம்பினார்கள். அவரை நெருங்குவதற்கு முன்னர் வெளியே சென்று விட்டார் முதல்வர் பாட்டீல். அவர்கள் காரில் கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் லிஃப்டிலிருந்து இறங்கி வந்தார் அந்த முக்கியமான நபர்.

அவரை அங்கே பார்த்ததில் எனக்கு ஒரே அதிர்ச்சி. இவர் எதற்காக இங்கே? இவர் ஏன் கர்நாடக முதல்வரைச் சந்திக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுடன் திகைத்துப் போய் அமர்ந்து கொண்டிருந்தேன் நான்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.