ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 203

பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கூட சிலர் விசாரணைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவோ, உதவவோ தயாராக இல்லை என்று நீதிபதி ஜெயின் குறிப்பிட்ட அந்த நபர் யாராக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன்.

News image
பிரணாப் முகர்ஜி
Updated On :27 ஜூலை 2024, 6:30 pm

கி. வைத்தியநாதன்

பலமுறை வேண்டுகோள் விடுத்தும்கூட சிலர் விசாரணைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவோ, உதவவோ தயாராக இல்லை என்று நீதிபதி ஜெயின் குறிப்பிட்ட அந்த நபர் யாராக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன். என்னுடைய சந்தேகத்தை வாழப்பாடி கூ.ராமமூர்த்திதான் தீர்த்து வைத்தார்.

ஆரம்பத்தில் இருந்தே ஜெயின் கமிஷனின் விசாரணை அழைப்புகளை புறந்தள்ளி, சாட்சி கூற வராதவர்களில் முக்கியமானவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அவர் ஒத்துழைக்காமல் இருப்பதற்கான எந்தவித காரணமும் இல்லாத நிலையில், ஏன் சாட்சி சொல்ல வரவில்லையென்று தெரியவில்லை... ஒருவேளை இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றது குறித்த கேள்விகளை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம்.

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா மதுரைக்கும், பிரதமர் தேவே கெளடா சென்னைக்கும் செல்ல இருக் கிறார்கள் என்பதால் தனது தில்லி பயணத்தை இரண்டு நாள்களில் முடித்துக் கொண்டு சென்னைக்குக் கிளம்பி விட்டார் முதல்வர் கருணாநிதி. அவர் கிளம்புவதற்கு முன்னால் நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார் என்று எல்லோருமே எதிர்பார்த்தோம். நிருபர்களை சென்னையில் சந்தித்துக் கொள் கிறேன் என்று கூறிவிட்டார் அவர்.

தில்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என்பதுதான் நிஜம். அதனால் முதல்வர் கருணாநிதி கடும் மன வருத்தத்தில் இருந்தார். நடுவர் மன்றம் தீர்வு தராது என்கிற முடிவுக்கு வரவும் முடியாமல், உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்தது நிலைமை.

போதாக்குறைக்கு மேகதாதுவில் அணைக் கட்டுவோம் என்கிற கர்நாடக அரசின் புதிய அறிவிப்பு அரசியல் ரீதியாகத் தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது.'நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்த பிறகுதான், காவிரி நதிநீர் தொடர்பான ஏனைய பிரச்னைகள் குறித்து பேச முடியும்' என்பது முதல்வர் கருணாநிதி எடுத்திருந்த தீர்மானமான முடிவு.

அப்படிப்பட்ட நிலையில்தான், முதல்வர் பத்திரிகையாளர்களிடம் எதுவுமே கூறாமல் சென்னை திரும்பத் தயாரானார். அவரை வழியனுப்ப தமிழ்நாடு இல்லத்தில் திமுக எம்.பி.க்களும், வேறு சில முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதி விமான நிலையத்துக்கு கிளம்பிப் போனதும், நான் கன்னாட் ப்ளேசில் இருந்த எனது'நியூஸ்க்ரைப்' அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். முதல்வரின் தில்லி பயணம் குறித்த கட்டுரை ஒன்றை தட்டச்சு செய்து பிழை திருத்திக்கொண்டிருந்தேன். அப்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அவரது பத்திரிகைத் தொடர்புச் செயலாளர் என்னை தொலைபேசியில் அழைத்தார்.

திருச்சிக்கு குடியரசுத் தலைவர் செல்லும் சிறப்பு விமானத்தில் சில பத்திரிகையாளர்களும் அவருடன் செல்ல இருந்தனர். அந்தக் குழுவில் நானும் இணைந்துகொள்ள விருப்பமா என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

குடியரசுத் தலைவர் திருச்சி செல்கிறார் என்றால், பிரதமர் சென்னைக்கு விஜயம் செய்ய இருந்தார். அதனால், அந்த வாய்ப்பை நழுவவிட எனக்கு மனமில்லை.

குடியரசுத் தலைவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கு சென்றபோது அவருடன் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கிருந்து அவர் திருவையாறு செல்ல இருந்தார். சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 150ஆவது ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்க இருந்தார் அவர். திருச்சியில் இருந்து குடியரசுத் தலைவர் கிளம்புவதற்கு முன்பே நான் அனுமதிபெற்று அந்தக் குழுவில் இருந்து விலகிக்கொண்டேன்.

நேராகத் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் சென்று, சென்னை செல்லும் ரயிலில் கிளம்பிவிட்டேன். அடுத்த நாள் காலையில் பிரதமரின் சென்னை விஜயம் என்பதால், அது முக்கியமானதாக எனக்குத் தோன்றியது. எனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

பிரதமர் தேவே கெளடாவுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ராலும், மத்திய மனித வளத் துறை அமைச்சர் எஸ்.ஆர். பொம்மையும் சென்னை வந்திருந்தனர். மூன்று பேருமே ஜனதா தளத்தின் முக்கியமான தலைவர்கள் என்பது மட்டுமல்ல, ஐக்கிய முன்னணி உருவானதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்.

சென்னை ஆளுநர் மாளிகையில் பிரதமரைச் சந்திக்க முதல்வர் கருணாநிதி நேரம் கேட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதனால், உடனடியாக நான் ஆளுநர் மாளிகைக்குச் சென்றேன்.

காங்கிரஸ் கட்சியில் நிலவிய சூழல், அந்தக் கட்சியில் பிளவு ஏற்படக் கூடும் என்கிற வதந்தியைக் கிளப்பியிருந்தது. சற்று கால தாமதமாகத்தான் முதல்வர் கருணாநிதியும், முரசொலி மாறனும் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர்.

ஆளுநர் மாளிகையில் பிரதமர் தேவே கெளடாவை சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. அவருடன் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனும் இருந்தார். பிரதமருடன் ஐ.கே.குஜ்ராலும், எஸ்.ஆர்.பொம்மையும் இருந்தனர். அவர்கள் அரசியல் நிகழ்வுகளை விவாதிப்பதில் வியப்பொன்றுமில்லை.

ஆனால், அவர்களுடன் ஆளுநர் கிருஷ்ணகாந்தும் இருந்தார் என்பதுதான் என்னை ஆச்சரியப்படுத்தியது.

பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் மாநிலத் தலைநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குவது மரபு. அப்படி தங்கும்போது, ஆளுநர்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசுவார்கள். அதுதவிர, விருந்தினர்களின் தனிப்பட்ட சந்திப்புகளில் ஆளுநர்கள் கலந்துகொள்வதில்லை. அன்றைய பிரதமர்முதல்வர் சந்திப்பின்போது, ஆளுநர் கிருஷ்ணகாந்தும் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

ஆளுநர் கிருஷ்ணகாந்துக்கு காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. முன்னாள் பிரதமர் சந்திரசேகர், கிருஷ்ணகாந்த், மோகன் தாரியா உள்ளிட்டவர்கள், 1970களில்'இளம் துருக்கியர்கள்' என்று காங்கிரஸில் அறியப்பட்டவர்கள். இந்திரா காந்தியால் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதையும், மன்னர் மானிய ஒழிப்பையும் ஆதரித்தவர்கள்.

பின்னாளில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் கட்சியில் குரல் எழுப்பியவர்கள். அதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

கிருஷ்ணகாந்தின் காங்கிரஸ் தொடர்பு காரணமாக, அவரையும் தங்களது கலந்தாலோசனையில் பிரதமர் தேவே கெளடா சேர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அது மரபு மீறல் என்பதில் சந்தேகமே இல்லை.

காங்கிரஸில் இரண்டு பிரிவுகள் தோன்றியிருந்தன. ஒரு பிரிவினர், ஐக்கிய முன்னணியில் இணைந்து ஆட்சியில் பங்குபெற வேண்டுமென்று விரும்பினார்கள். அதுமட்டுமல்ல, அந்த ஆட்சி காங்கிரஸின் தலைமையில் அமைய வேண்டும் என்பதுதான் அந்தப் பிரிவினரின் கோரிக்கை. அதை வெளிப்படையாக ஆதரிக்காமல், மறைமுகமாக அந்தப் பிரிவினருக்கு ஊக்கம் அளித்து வந்தார் கட்சியின் இடைக்காலத் தலைவர் சீதாராம் கேசரி.

பிரணாப் முகர்ஜி, வி.என்.காட்கில், கே.கருணாகரன் உள்ளிட்ட தலைவர்கள் எந்தவித நிலைப்பாடும் எடுக்காமல் மெளனம் காத்தனர். ஆனால் அவர்கள் தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியை கவிழ்ப்பதிலோ, அந்த ஆட்சியில் பங்குபெறுவதிலோ விருப்பம் காட்டவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்படடு ஐக்கிய முன்னணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என்பதே அவர்களது கருத்து.

அப்படி கவிழ்ந்தால் தேர்தல் நடைபெற்று மீண்டும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்படும் என்றும், அப்போது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும் அபிப்ராயப்

பட்டனர் மூத்த தலைவர்கள். அவர்களிடம் காணப்பட்ட பொறுமை, அடுத்தக்கட்ட தலைவர்களிடம் இருக்கவில்லை.

குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுடன் தமிழகத்துக்கு வந்த நான், மீண்டும் அவருடன் தில்லி திரும்பவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கிவிட்டேன். அதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கு திடீரென்று தீவிரமடையத் தொடங்கியது. வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பரத் திருமணம் குறித்த விசாரணை முழு மூச்சில் முன்னெடுக்கப்பட்டது. அதுகுறித்த செய்திகளை

எனது'நியூஸ்க்ரைப்' சார்ந்த தினசரிகளுக்கு அனுப்ப வேண்டி இருந்தது.

லஞ்ச ஒழிப்பு துறையினர் சிவாஜி கணேசனின்'அன்னை இல்லம்' வீட்டிற்கு செல்ல இருக்கிறார்கள் என்கிற செய்தி பரவியது. சென்னை தி.நகர் போக் ரோடில் (செவாலியே சிவாஜி கணேசன் சாலை) இருந்த நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு நான் செல்வதற்குள், அந்தப் பகுதி முழுவதும் பொதுமக்களும், தொண்டர்களும் கூடியிருந்தனர். பலத்த காவல் போடப்பட்டிருந்தது.

சிவாஜி மனமொடிந்து விட்டார்; சிவாஜியையும் அவரது குடும்பத்தினரையும் வேண்டுமென்றே கருணாநிதியும், திமுகவும் பழி வாங்குகிறது; ஜெயலலிதாவுக்கு எதிராக சிவாஜி கணேசன் வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தப்படுகிறார். இப்படியெல்லாம் போக் ரோடின் இருபுறங்களிலும் கூடி நின்றவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் என்.நல்லம நாயுடு தலைமையில் 7 பேர் கொண்ட குழு, சிவாஜியின் வீட்டில் விசாரணை நடத்தியது. சிவாஜி கணேசன், அவரது மூத்த மகன் ராம் குமார், மகள் சாந்தி, சுதாகரனின் மனைவி சத்திய லட்சுமி ஆகியோரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன என்று தெரிகிறது. முக்கியமாக, சுதாகரன் சத்திய லட்சுமி திருமணச் செலவு பற்றி விசாரிக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

போக் ரோடில், அன்னை இல்லத்துக்கு எதிரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியே வரும்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைக் கேட்பதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். நாங்கள் என்றால் பத்திரிகை நிருபர்கள்.

அப்போது சுதாகரன் குறித்த ஓர் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட இருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு, நாங்கள் ஏன் அங்கே காத்திருக்கப் போகிறோம்?

அதிமுக தலைமையகத்துக்கு விரைந்தபோது, ஜெயலலிதாவின் அறிக்கை நகல் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதை வாங்கிப் படித்தபோது சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன்.

'எப்போது சுதாகரன் என் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாரோ, அன்றைய தினத்தில் இருந்து அவருக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது, நாங்கள் சந்தித்துக் கொண்டதும் இல்லை. தொலைபேசி மூலம் அவருடன் நான் பேசியதும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும், சுதாகரனை அதிமுகவில் இணைத்துக் கொள்ளவோ, அவர் கட்சியில் ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்க மாட்டேன்.'' என்பதுதான் அந்த அறிக்கை தெரிவிக்கும் செய்தி.

நான் அலுவலகம் திரும்பும்போது, ஆங்காங்கே உள்ள பெட்டிக் கடைகளில் தொங்கிய போஸ்டர்கள் என்னை வியப்படைய வைத்தன. விஷயம்

வேறொன்றுமில்லை. போஃபர்ஸ் தொடர்பான ஆவணங்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன என்பதுதான் எனக்குக் கிடைத்த தகவல்.

தில்லி பரபரப்பாக இருக்கும் அந்த நேரத்தில் சென்னையில் இருந்து என்ன பயன் என்கிற கேள்வி எனக்குள்ளே எழுந்தது. அன்று இரவே நான் தில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தேன்.

குடியரசுத் தலைவருடன் சிறப்பு விமானத்தில் தமிழகத்துக்கு வந்துவிட்டு, இப்போது ரயிலில் உட்கார்ந்தபடி பயணித்து தில்லி செல்வதை நினைத்தபோது சிரிப்பு வந்தது.

போஃபர்ஸ் ஆவணங்கள் கிடைத்த நிலையில், அடுத்தது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நான் தில்லி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.