/

கோலிவுட் ஸ்டூடியோ!

சூர்யா 44: அந்தமானில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கல்!

News image
Updated On :13 ஜூலை 2024, 2:33 pm

டெல்டா அசோக்

சூர்யா 44;

அந்தமானில் அனல் பறக்கும் காட்சி!

சூர்யாவின் பிறந்த நாள் இந்த மாதம் வருவதையொட்டி, ரசிகர்களுக்காக ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் "சூர்யா 44' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

தவிர விக்ரமுக்கு "தங்கலான்' மேக்கிங் வீடியோ வெளியானதைப் போன்று சூர்யாவுக்கு "கங்குவா' மேக்கிங் வீடியோவும் வெளிவரக் காத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஷூட்டிங், அந்தமானில் ஜூன் 2-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்துக்கு முன்னரே சூர்யாவுக்கு என இந்தக் கதையை ரெடி செய்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். அந்தமானில் சூர்யா பூஜா ஹெக்டே காம்பினேஷனில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

தவிர, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ சூர்யாவின் உழைப்பைப் பார்த்து ஆச்சரியமானதுடன், "கங்குவா'வை காணவும் ஆவலாக இருப்பதாக பிரமிப்புடன் சொல்லியிருக்கிறார். ஏகப்பட்ட ஃபைட்டர்களுடன் சூர்யா மோதும் காட்சிகளில் அனல் பறக்கும் என்கிறார்கள். இந்த ஸ்டண்ட் மாஸ்டர் இதற்கு முன் முருகதாஸின் "துப்பாக்கி', அட்லியின் "ஜவான்' ஆகிய படங்களில் பணிபுரிந்தவர்.

சூர்யாவின் போர்ஷன் 5ஆம் தேதியோடு முடிவடைகிறது. மற்றவர்களின் போர்ஷன் இன்னும் சில நாள்கள் நீடிக்கிறது. இந்த ஷெட்யூலோடு சென்னை திரும்பும் டீம், சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் உதகைக்குச் செல்கிறது.

ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் பதில் !

மயோசைட்டிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்துகொண்ட நடிகை சமந்தா, நீண்ட ஓய்வுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த "குஷி' படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து, ஆங்கில வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தவர். சிறிது காலத்துக்கு எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

தற்போது, ஓய்விலிருந்து திரும்பி வந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் "ஐஎம்டிபி'யின் 100 பிரபலங்கள் பட்டியலில்

13 - ஆவது இடத்தைப் பிடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பதிவிடுவது, புகைப்படங்களைப் பகிர்வது என்று ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா. அந்த வகையில் தற்போது ஆரோக்கியம் தொடர்பான காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், "இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் பொருள்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா?' என்று சமந்தாவிடம் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த அவர், "இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்குத் தெரியாமல் செய்த தவறுகள். உண்மை தெரிந்த பிறகு அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். இப்போது விழிப்புணர்வுடன் இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

சீறிப் பாயும் ரஜினி லோகேஷ் கூட்டணி!

ரஜினிகாந்தின் 170-ஆவது படமாக "வேட்டையன்' படத்தில், அவருடன் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் அமிதாப் பச்சன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து ரஜினி, லோகேஷ் கனகராஜுடன் கமிட் ஆன "கூலி'யில் நடிக்கிறார். லோகேஷின் ஆஸ்தான அனிருத், அன்பறிவ் கூட்டணி இதிலும் உண்டு. படத்தின் டைட்டில் டீசரே செம வைரலானது. அதில் ஆர்.எக்ஸ். 100 பைக் சத்தத்துடன் கொள்ளையர்களின் கூடாரத்துக்கு வரும் ரஜினி, ஷட்டரை உடைத்து என்ட்ரி கொடுத்திருப்பார்.

ரஜினியின் புகழ்பெற்ற, "சோறு உண்டு, சுகம் உண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு போடா' என்ற வசனமும் இடம்பெற்றது பேசப்பட்டது.

இந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் கமிட்டானாலும், பாலிவுட் வில்லன் ஒருவரும் இணையலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

ரஜினியுடன் முதன்முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார். தமிழில் "லாபம்' படத்துக்குப் பின்னர், தெலுங்கு பக்கம் போன ஸ்ருதி, தனது இரண்டாவது இன்னிங்ஸை லோகேஷின் படத்தில் தொடங்குகிறார். இதர நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது. இயக்குநர் லோகேஷ், விஜய்யின் "லியோ'வில் காஷ்மீரில் பிரமாண்ட அரங்கம் அமைத்துப் படப்பிடிப்பை நடத்தியிருந்தார். அது போல "கூலி' படத்துக்காகவும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. சென்னையிலும், ஹைதராபாத்திலும் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த வாரத்தில் இருந்து முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது எனத் தகவல்.

அன்பறிவின் அதிரடி ஆக்ஷனில் அட்டகாசமான ஃபைட் சீனோடு படப்பிடிப்பு தொடங்கும் என்ற பேச்சும் இருக்கிறது. ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையில் எண்ணூர் பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு சீறிப்பாயும் என்கிறார்கள். படத்தை அடுத்தாண்டு பொங்கல் விருந்தாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.