/

நாட்டு நடப்பு...

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம் செய்வதற்காக போயிங் 7770 300 இ.ஆர். ரகத்தைச் சேர்ந்த இரு தனி விமானங்கள் 2018-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

News image
போயிங் 7770 300 இ.ஆர். ரகத்தைச் சேர்ந்த தனி விமானம்
Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

கோட்டாறு கோலப்பன்

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம் செய்வதற்காக, ரூ.8,400 கோடி மதிப்புள்ள 'போயிங் 7770 300 இ.ஆர்.' ரகத்தைச் சேர்ந்த இரு தனி விமானங்கள் 2018-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 'ஏர் இந்தியா ஒன்' என்று அழைக்கப்படும் இந்த விமானங்களில் தலைவர்களுடன் செல்லும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களுடைய பதவி அந்தஸ்துக்கேற்ப அட்டைகள் வழங்கப்பட்டிருக்கும்.

மத்திய அரசின் இணைச் செயலாளர், அதற்கு மேற்பட்ட அந்தஸ்தில் உள்ள அலுவலர்கள், சிறப்புப் பாதுகாப்புப் படையினருக்கு பர்பிள் நிற அடையாள அட்டையும், இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறைந்த அலுவலர்களுக்கு இளஞ்சிவப்பு நிற அடையாள அட்டையும், சிறப்புப் பாதுகாப்புப் படை அல்லாத பிற பாதுகாப்பு அலுவலர்கள், சமையல் கலைஞர்கள், உணவுப் பரிமாறுவோருக்கு சிவப்பு நிற அட்டையும், பத்திரிகையாளர்களுக்கு மஞ்சள் நிற அட்டையும், வழங்கப்படும். இந்த அட்டைகளை பயணத்தின்போது, கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

தீபகற்ப இந்தியாவின் கிழக்கு அரணாகத் திகழ்வது கிழக்கு மலைத் தொடர். பொதுவாகவே அதிகம் கவனம் பெறாதது இந்த மலைத் தொடர். சர்வதேச அளவில் பிரபலமான இமயமலைத் தொடரைவிட புவியியல் அடிப்படையில் மிகவும் பழமையானது என்பதுதான் ஆச்சரியம். ஒடிஸா, தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் ஊடே காணப்படும் கிழக்கு மலைத் தொடர் நீலகிரிக்கு அருகேயுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கு மலைத் தொடருடன் கிட்டத்தட்ட இணைகிறது.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவிரி போன்ற நதிகள் பாய்வதன் காரணமாக, மேற்கு மலைத் தொடரைப் போன்று தொடர்ச்சியாக இல்லாமல், இந்த மலைத் தொடர் அதிக இடைவெளிகளைக் கொண்டுள்ளது. கிழக்கு மலைத் தொடரின் மொத்த நீளம் 1,750 கி.மீ. ஆகும். இந்த மலைத் தொடரின் பெரும்பகுதி ஆந்திரத்தில் இருக்கிறது. தென்மேற்கு எல்லையாக, கர்நாடகத்தின் சாம்ராஜ் நகருக்கு அருகேயுள்ள பிலிகிரிரங்கன் மலையும், தெற்கு எல்லையாக, தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

விபத்துகளில் அடிபடும் யானைகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகளைக் குணப்படுத்த ஆக்ராவுக்கு அருகே யானை மருத்துவமனை இயங்கிவருகிறது. உத்தரப் பிரதேச வனத் துறையுடன்இணைந்துச் செயல்படும் இந்த மருத்துவமனை இந்தியாவின் முதல் யானைகள் மருத்துவமனையாகும். ஒயர்லெஸ் எக்ஸ்ரே, லேசர் சிகிச்சை, அல்ட்ரா சோனாகிராபி, ஹைட்ரோதெரபி என பல வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேகாலயாவின் பசுமையான மலைப் பகுதியில் அமைந்துள்ள மாவ்லின்னாங் கிராமம் 'ஆசியாவின் தூய்மையான கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் அத்தனை அம்சங்களுடன் இயற்கைமாறா பொலிவுடன் திகழ்கிறது. அருவிகள், வேர் பாலங்கள், பசுமைத் தோட்டங்களால் சூழப்பட்டு அமைதியான சூழலை உணர வைக்கிறது. வேர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இயற்கைப் பாதைகளில் செல்வது புதுமையான பயண அனுபவத்தை வழங்கும்.

செவன் சிஸ்டர்ஸ் பால்ஸ்

செவன் சிஸ்டர்ஸ் பால்ஸ்

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க 'வாட்டர் மெட்ரோ' என்ற சேவையை கேரள நதிநீர் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து அருகேயுள்ள ஊர்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்ல நவீன மின்சாரப் படகுகள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, 72 படகுகள் ஏ.சி.வசதிகளுடன் இயக்கப்பட்டுள்ளன.

அழகிய அந்தமானின் தலைநகரம் போர்ட்பிளேயரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள பேரன் தீவில் எரிமலை உள்ளது. பல ஆண்டுகளாக அமைதி காத்த இந்த எரிமலை 2005-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி முதல் புகைவிடத் தொடங்கியது.

நான்கு நாள்களில் வேகமெடுத்து, மே 31-இல் பாறைத் துகள்களும், குழம்பும் புகையோடு கலந்து வரத் தொடங்கியது. அப்போது அதன் சீற்றம் 90 அடியாக இருந்தது. இந்திய புவியியல் விஞ்ஞானிகள் அந்தமான் எரிமலையைத் தொடர்ந்து, ஆராய்ந்து வருகின்றனர்.

2004 டிசம்பர் 26-இல் சுனாமியை கிளப்பிய சுமத்ரா நிலநடுக்கமும், அப்போது அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களும்தான் எரிமலை பொங்குவதற்கான தூண்டுதலை அளித்திருக்கலாம் என்கிறார்கள்.

'பூகம்பத்தைவிட எரிமலைகள் எவ்வளவோ மேல். ஏனெனில், இவை முன்னெச்சரிக்கை செய்யாமல் நடுஇரவில் வந்து நடுங்கச் செய்வதில்லை' என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நாட்டில் பல இடங்களில் எண்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

மேகாலயாவில் உள்ள 'செவன் சிஸ்டர்ஸ் பால்ஸ்' எனும் நீர்வீழ்ச்சி , கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்ஸ்மாய் கிராமத்தில் அமைந்துள்ளது. ஏழு பிரிவுகளாகப் பிரிந்து விழுவதால், ஏழு சகோதரிகளின் நீர்வீழ்ச்சி எனப்படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமை சூழ்ந்த அழகுடன் இருக்கும். மழைக்காலங்களில் கூடுதல் பொலிவுடன் இருக்கும்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள 'ஜீரோ பாயிண்ட்' என்ற பகுதி தாங் பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு அப்பால், சாலைகள் எதுவும் இல்லை. பொதுமக்கள் நடமாட்டம் இருக்கிறது. அதனால் இது 'ஜீரோ பாயிண்ட்' என்று அழைக்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் உள்ள 'சதாரா மகாராஷ்டிரா', பண்டிய கால மராட்டிய அரசின் முதல் தலைநகரம் என்ற சிறப்புண்டு. இந்த நகரம் ஏழு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளதால், இந்தப் பெயர். புணே, மும்பையில் உள்ளவர்களின் பொழுதுபோக்கு இடமாக இந்தப் பகுதி இருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் உள்ள 'பஞ்சாக்கனி' , ஐந்து கிராமங்களுக்கு நடுவே இருக்கிறது. இது மலைவாசஸ்தலமாக மாறுவதற்கு முன்பு டேகர், கோதாவரி, அம்ப்ரஸ், கிங்கர், தைகாட் ஆகிய ஐந்து கிராமங்களால் சூழப்பட்ட இடமாக இருந்தது. புணேவில் இருந்து 108 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.