ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 206

ஜோகிந்தர் சிங்கிற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

News image
பிரணாப் முகர்ஜி
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:04 am

கி. வைத்தியநாதன்

ஜோகிந்தர் சிங்கிற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அரசின் மறைமுக உதவியோடு இலங்கைக்குச் செல்லவும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கவும் நான் விரும்பவில்லை. அதே நேரத்தில், அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமானால் அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்றும் எனக்குள் இருந்த பத்திரிகையாளன் கேள்வி எழுப்பினான்.

யோசித்து பதிலளிக்கிறேன் என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றேன். ஒரு அதிகாரியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங். அந்த அதிகாரி எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்து தருவார் என்று என்னிடம் தெரிவித்தார். அன்று இரவு முழுவதும் ஜோகிந்தர் சிங்குக்கும் சிபிஐ அதிகாரிக்கும் நான் என்ன பதில் சொல்வது என்று தெரியாத குழப்பத்தில் தவித்தேன்.

இக்கட்டான பிரச்னைகள் எனக்கு வரும்போது அதற்கு விடைதேடி நான் செல்கின்ற இடங்கள் மூன்று. முதலாவது முன்னாள் பிரதமர் சந்திரசேகர்ஜி; அடுத்தது பிரணாப் முகர்ஜி; மூன்றாவது, அப்போது வெளியுறவுத் துறைக்கு அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால். அரசுமுறை பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்ததால் அவரை சந்திப்பது என்பதும், அறிவுரை கேட்பதும் இயலாது.

காலை சுமார் 10 மணிக்கு கிரேட்டர் கைலாஷில் இருந்த பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குச் சென்றேன். வழக்கமாக தொலைபேசியில் அவர் இருப்பதை உறுதிசெய்துவிட்டுதான் நான் போவது வழக்கம். அன்று வழக்கத்துக்கு மாறாக முன் அனுமதி பெறாமலேயே அவரை சந்திக்கச் சென்றேன்.

என்னுடைய அதிருஷ்டம் அவர் வீட்டில் இருந்தார். அவரை சந்திக்க பார்வையாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. உள்ளே தனது அலுவலக அறையில் அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று உதவியாளர் தெரிவித்தார். அப்போது அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாததால் நான் காத்திருந்தேன்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலான காத்திருப்புக்குப் பிறகு, அவரது அறையில் இருந்து அழைப்பு மணி அடிக்கப்பட்டது. நான் காத்திருப்பதைத் தெரிவிக்கும்படி உதவியாளரிடம் சொல்லி அனுப்பினேன்.

சில நிமிடங்களில் அழைத்தார். வழக்கம் போல 'கம்.. கம்..' என்று மகிழ்ச்சியுடன் என்னை அவர் வரவேற்றபோது, நீண்ட நாள் இடைவெளி கலைந்ததுபோல இருந்தது.

அவரது மேஜைக்கு முன்னால் அமர்ந்த என்னிடம் அவர் கேட்ட முதல் கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது.

'விடுதலைப் புலிகள் பிரச்னை தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது என்று தோன்றுகிறதே, என்ன நடக்கிறது?'

'அப்படியெல்லாம் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிடவில்லை. அவர்களுக்கு ஆதரவும் பெருகிவிடவில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இலங்கை வாழ் தமிழர்களின் நலன் குறித்த கவலை இல்லாமல் இல்லை. திமுகவும், முதல்வர் கருணாநிதியும் மீண்டும் ஒருமுறை ஈழப் பிரச்னையில் சிக்கிக்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் எனது கருத்து.'

'நேற்று பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசியதையெல்லாம் நான் படித்தேன். பாமக போன்ற கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், தமிழ் ஈழத்தை வலியுறுத்தியும் பேசுவது திமுகவின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்று அவர் நிச்சயமாக அஞ்சுவார். மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றிருப்பதால் அவரால் முன்புபோல, வெளிப்படையான விடுதலைப் புலிகள் ஆதரவு நிலையை எடுக்க முடியாது.'

'முதல்வர் கருணாநிதியே அதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார். வை.கோபாலசாமி பிரிந்துவிட்ட நிலையில் திமுக தீவிரமான இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைபாட்டை எடுக்காது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.'

'இளைஞர்கள் மத்தியில் என்றால், பரவலாகவா அல்லது குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமா?'

'திராவிடர் கழகம், மதிமுக, பாமக போன்றவற்றில் இருக்கும் இளைஞர்கள் பிரபாகரனைத் தலைமைப் பண்புக்கு முன்னுதாரணமாக நினைக்கிறார்கள்' என்று சொல்லி நிறுத்தினேன்.

பிரணாப் முகர்ஜி சாவகாசமாக தனது பைப்பில் புகையிலையை நிரப்பி, பற்ற வைத்து, புகையை உறிஞ்சினார். சிறிது நேரம் ஏதோ யோசித்தபடி இருந்தார். நான் இடைமறிக்க விரும்பவில்லை. மூன்று, நான்கு நிமிடங்களுக்குப் பிறகு என்னை அவர் ஏறெடுத்துப் பார்த்தபோது நான் மெதுவாக பேசத் தொடங்கினேன்.

'நான் உங்களிடம் யோசனை கேட்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். நான் என்ன கேட்க நினைத்து வந்தேனோ, அதே விஷயம் குறித்து நீங்கள் பிரஸ்தாபித்தது என்னை ஆச்சரியப்படுத்துகிறது...'

'என்ன பிரச்னை, என்னிடம் என்ன யோசனை கேட்க வந்தாய்?'

நான் போஃபர்ஸ் ஆவணங்கள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக சிபிஐ அலுவலக நிருபர்கள் கூட்டத்துக்கு போனதில் தொடங்கி, இயக்குநர் ஜோகிந்தர் சிங்கை சந்தித்தது, அவர் என்னைத் தனியாக அழைத்துப் பேசியது, என்னிடம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டது என்று அனைத்தையுமே தெரிவித்தேன்.

'ஜோகிந்தர் சிங்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா, கூடாதா என்று நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' என்று நான் சொன்னபோது, பிரணாப்தா புன்னகைத்தார்.

'அவர்கள் சொன்னதையெல்லாம் நீ அப்படியே நம்பி இலங்கைக்குப் போய் பிரபாகரனை சந்திக்க நினைப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவர்கள் உன்னை ஆழம்பார்க்கிறார்கள். பிரபாகரனுடன் தொடர்பில் இருக்கும்

உனது நண்பர்கள் யார் யார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அடுத்தகட்டமாக உன்னை பலியாடாக அனுப்பினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்..' என்று சொல்லி நிறுத்தினார் பிரணாப் முகர்ஜி.

எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. இப்படியெல்லாம் நான் நினைக்கவே இல்லை. அவரது அனுபவமும், அரசியல் நுட்பமும் எத்தகையது என்பதை அப்போது உணர்ந்தேன். அவரே மேலும் பேசினார்.

'விடுதலைப் புலிகளை நீ சாதாரணமாக எடைபோட்டு விடாதே. இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில், முன்னாள் பிரதமரையே அத்தனை பாதுகாப்புகளையும் மீறி அவர்களால் படுகொலை செய்ய முடிந்தது என்றால், எந்த அளவுக்கு அந்த அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜோகிந்தர் சிங்கும், இந்திய அரசும்

உனக்குப் பின்னால் இருக்கிறது என்கிற சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும், நீ பிரபாகரனையே சந்திக்கும் அளவுக்கு நெருங்கினாலும் உயிரோடு திரும்ப மாட்டாய்..'

'அப்படியானால் நான் சந்திக்க விரும்பவில்லை என்று சொல்லி விடுகிறேன்.'

'சொல்லிவிடுகிறேன் அல்ல. மிகவும் அழுத்தமாகவும், தீர்மானமாகவும் அப்படியொரு ரிஸ்கை எடுக்க நான் தயாராக இல்லை என்று சொல்லிவிடு. ஒருவேளை உன்னை மீண்டும் தனியாக அழைத்து வற்புறுத்தவோ அல்லது யாருடைய ஆலோசனையைக் கேட்டு இப்படி முடிவெடுத்தாய் என்று கேட்டாலோ, தைரியமாக எனது பெயரை நீ ஜோகிந்தர் சிங்கிடம் தெரிவிக்கலாம். அவர் என்னைத் தொடர்பு கொண்டால் நான் பேசிக் கொள்கிறேன்.'

இப்படி பக்கபலமாக எனக்கு பிரணாப் முகர்ஜி இருக்கிறார் என்கிற தைரியம் நிஜமாக நெகிழ வைத்தது. அவர் இருக்கும் நிலைக்கு என்னைப்

போன்ற சாதாரணமான ஒரு பத்திரிகையாளருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் நாற்காலியில் இருந்து எழுந்து அவரது காலைத்தொட்டபோது எனது கண்கள் கலங்கிவிட்டன.

அவர் புன்னகைத்தபடியே முதுகில் தட்டினார். 'இதிலெல்லாம் சிக்கிக்கொள்ளக் கூடாது' என்று தெரிவித்தார். நான் மீண்டும் நாற்காலிக்குச் சென்று அமர்ந்தேன்.

அதற்குப் பிறகு தமிழ்நாடு அரசியல், ஜெயலலிதாவின் வழக்குகள், சுப்பிரமணியம் சுவாமியின் செயல்பாடுகள் என்று பல விஷயங்கள் குறித்து பேசினோம். என்னிடம் பல தகவல்களைக் கேட்டறிந்தார்.

கிளம்புவதற்கு முன்னால் நான் அவரிடம் ஒரு கேள்வி எழுப்பினேன்- 'தேவே கெளடா தலைமையிலான இந்த ஐக்கிய முன்னணி எத்தனை காலம் ஆட்சியில் தொடரும்?'

பிரணாப் முகர்ஜி கடகடவென்று சிரித்துவிட்டார். பிறகு சொன்னார் -

'அதிகபட்சம் போனால் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்தால் அதிசயம். கிடைத்த அதிகாரத்தையும், ஆட்சியையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை அந்தக் கூட்டணியில் இருக்கும் எந்தவொரு கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியில் பங்கு கேட்காமல் காங்கிரஸ் ஆதரிக்கிறது எனும்போது தேவையில்லாமல் காங்கிரஸை சீண்டுவானேன்..'

'பிரதமர் தேவே கெளடாவுக்கு அது தெரியாதா?'

'எனக்குத் தெரியாது. அவரை யார் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கள் காங்கிரஸ் கட்சியிலுமே சிலர் பின்னணியில் இருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.'

எனது அடுத்த கேள்விக்கு இடமளிக்காமல் அவர் எழுந்துவிட்டார். நானும் அதற்கு மேல் அங்கு இருக்கவில்லை.

அடுத்த இரண்டு நாள்கள் சிபிஐ அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் என்று நான் காத்திருந்தேன். யாரும் அழைக்கவில்லை. ஒருவேளை பிரணாப் முகர்ஜியே ஜோகிந்தர் சிங்கிடம் தொந்தரவு செய்யக் கூடாது என்று

சொன்னாரோ என்னவோ எனக்குத் தெரியாது.

சோனியா காந்தியோ, அவருக்கு நெருக்கமானவர்களோ போஃபர்ஸ் ஆவணங்கள் குறித்து அக்கறை காட்டாமல் இருந்தாலும் காங்கிரஸில் பலரும் அதை விமர்சிக்கத் தொடங்கினார்கள். சுவிட்சர்லாந்திலிருந்து ஆவணங்கள் கொண்டுவரப்பட்டதை மிகப் பெரிய அளவில் சிபிஐ ஏன் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் தலைவர்களின் கேள்வி.

சீதாராம் கேசரி தனக்கெதிராக சிபிஐ விசாரணை நடத்தியது குறித்துப் பேசவில்லை என்றாலும், காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் ஐக்கிய முன்னணி அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க மறைமுகமாக ஆதரித்தார் என்று சொல்லலாம். இன்னொருபுறம், ஐக்கிய முன்னணி ஆட்சியில் காங்கிரஸ் பங்குபெற வேண்டும் என்றும், வெளிப்படையாக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்க முற்பட்டிருந்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார்.

பிரதமர் தேவே கெளடாவுக்கும், ஐக்கிய முன்னணி அரசு அமைவதற்கும் உறுதுணையாக இருந்தவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ். ஆனால், அவர் மீதான வழக்குகளைத் தீவிரப்படுத்தி, ஊழல் குற்றச்சாட்டுகள் மீது காவல் துறை விசாரணைக்கு வழிகோல முற்பட்டது மத்திய அரசு. காங்கிரஸில் இருந்த நரசிம்ம ராவ் ஆதரவாளர்களை தேவே கெளடா அரசின் நடவடிக்கைகள் ஆத்திரப்படுத்தியது.

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து மேலும் சில ஆவணங்களை சுவிட்சர்லாந்து அரசிடம் கேட்டுப் பெற இயலவில்லை என்று சிபிஐ சொல்லிக்கொண்டிருந்தது. அப்போது பிரதமர் தேவே கெளடா வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்கிற செய்தியும் வெளியானது. அவர் பயணம் மேற்கொள்ள இருந்த நாடுகளில் முக்கியமானது சுவிட்சர்லாந்து!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.