பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 156

அது யார் பரிசளித்த நாய்க்குட்டியாக இருக்கும் என்று யோசித்தபடி நான் சீதாராம் கேசரியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 11:21 am

கி. வைத்தியநாதன்

அது யார் பரிசளித்த நாய்க்குட்டியாக இருக்கும் என்று யோசித்தபடி நான் சீதாராம் கேசரியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று அந்த நாய்க்குட்டிக்கு எப்படித் தெரியுமோ, அது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அதிக நேரம் என்னை யோசிக்க வைக்கவில்லை அவர்.

'இது ஜெயலலிதாஜி எனக்கு அன்பளிப்பாகத் தந்த நாய்க்குட்டி. அவரது வீட்டில் நாய் குட்டி போட்டபோது, இந்த நாய்க்குட்டியை ஒருவர் மூலம் விமானத்தில் எனக்கு அனுப்பி வைத்தார்.'
சொல்லும்போதே அவரது முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

வழக்குகளிலிருந்து ராஜீவ் குடும்பத்தையும், நரசிம்ம ராவையும், தனது காங்கிரஸ் கட்சிக்காரர்களையும் காப்பாற்ற முடியாமல் போனாலும் போகலாம், ஆனால் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சீதாராம் கேசரி,  நிச்சயமாக ஜெயலலிதாவைக் காப்பாற்றுவார் என்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 


நான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதுபோல இருந்தது அவரது அடுத்த கேள்வி.
'சசிகலாவையும் அவரது உறவினர்களையும் கைது செய்வதுபோல, ஜெயலலிதாவையும் கருணாநிதி கைது செய்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?'

'அப்படித்தான் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஜி.கே. மூப்பனாரும், ஐக்கிய முன்னணி அரசில் அமைச்சர்களாக இருக்கும் ப. சிதம்பரமும், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனும்கூட, ஜெயலலிதா விரைவில் கைது செய்யப்படுவார் என்று நிருபர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.'
சீதாராம் கேசரி அதற்கு எந்த பதிலும் தரவில்லை. நாய்க்குட்டியை கீழே இறக்கிவிட்டார்.

'இப்போது காங்கிரஸ், ஆட்சியை இழந்து கேலிப் பொருளாக நிற்பதற்கு அவர்கள்தான் காரணம். ஜெயலலிதாஜி மீதான மூப்பனார் - சிதம்பரம் இருவரின் தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக அவர்கள் கட்சியை உடைத்துவிட்டார்கள். மூப்பனார் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், கருணாநிதி முதல்வராகி இருக்கமாட்டார், தேவே கெளடா பிரதமராகவும் வாய்ப்பில்லை.'


'அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறீர்கள்? ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவருக்கு எதிராக  ரஜினிகாந்த் அறிக்கைகளை வெளியிட்டார். காங்கிரஸ் பிளவுபடாமல் இருந்திருந்தாலும், திமுக ஜெயித்திருக்கும்.'


'உங்களுக்கு அரசியல் தெரியாது. அதிமுக - காங்கிரஸ் கூட்டணி இருந்திருந்தால் திமுகவால் ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் பிளவுபட்டதும், அதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் காங்கிரஸூக்கு ஆங்காங்கே பின்னடைவு ஏற்பட்டது. அதுதான் உண்மை.'


நான் அவரிடம் விவாதத்தில் ஈடுபடத் தயாராக இருக்கவில்லை. பேச்சைத் திசைதிருப்ப முனைந்தேன்.
'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து குமரி அனந்தன் நீக்கப்பட போகிறாரா? புதிய தலைவர் நியமனம் எப்போது?'


'இப்போது அதற்கென்ன அவசரம்? ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்தால் மூப்பனாரேகூட அவரது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் இணையமாட்டார் என்று என்ன நிச்சயம்?'
'உங்களுக்கு அப்படியெல்லாம்கூட நம்பிக்கை இருக்கிறதா? மூப்பனார் மீண்டும் காங்கிரஸில் சேர்வார் என்று நீங்கள் ஒருவர்தான் சொல்கிறீர்கள்.'


'காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களால் வேறு கட்சியில் சேரவோ, தனிக்கட்சி நடத்தவோ முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் மீண்டும் காங்கிரஸூக்கே வந்து விடுவார்கள்.'


காங்கிரஸ் கட்சியைப் பற்றி, லாலு பிரசாத் யாதவின் ஆட்சியில் பிகார் மாநிலம் ஊழல் மாநிலமாக மாறிவிட்டது பற்றி, ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்திருந்த கட்சிகளின் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் பற்றி என்று அடுத்த பத்து நிமிடங்களுக்கு அவர் ஹிந்தியில் பிரசங்கமே நடத்திவிட்டார். அவர் சொல்வதில் பாதிக்கு மேல் எனக்குப் புரியவில்லை. நான் இடைமறித்து விளக்கம் கேட்கவும் இல்லை.


'காங்கிரஸ் தலைவராகி இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று நான் கேட்டபோது, அவர் நெகிழ்ந்து விட்டார். 


'சாதாரண சேவாதளத் தொண்டனாக இருந்த என்னால் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக முடிந்திருக்கிறது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. நான் கனவில்கூட நினைக்காதது. இதற்கு நான் இந்திராஜிக்கும், ராஜீவ்ஜிக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.'


'நாளைக்கே சோனியா காந்தியோ, அவரது குழந்தைகளோ கட்சித் தலைமைக்கு வருவதாகச் சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்?'


அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

Story image

'அவர்கள்தான் வரப்போவதில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்களே... நீங்கள் ஏன் தேவையில்லாமல் அவர்களுக்கு ஆசை காட்டுகிறீர்கள்? அவர்கள் வரும்போது நான் பதில் சொல்கிறேன். இப்போது நாம் இதோடு முடித்துக் கொள்வோம்...'


எனது பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல், அவர் எழுந்து உள்ளே போய்விட்டார். வந்ததற்கு அவரது பேட்டியும், சோனியா காந்தி அரசியலுக்கு வருவது குறித்து அவரது கருத்தும் கிடைத்தது. நான் கிளம்பிவிட்டேன்.


சீதாராம் கேசரியின் வீட்டு வராந்தாவைக் கடந்து நான் வெளியே போக இருந்தபோது, என்னை யாரோ கூப்பிடுவது கேட்டுத் திரும்பினேன். கேசரியின் உதவியாளர் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தார் தாரிக் அன்வர்.


1980-இல் முதன் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தில்லிக்கு அவர் வந்தது முதல் அவருடன் எனக்குத் தொடர்பு இருந்து வருகிறது. சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தில் பிறந்தவர் அவர். இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவராக இருந்தவர். மக்களவை அல்லது மாநிலங்களவை உறுப்பினராக முப்பது ஆண்டுகள் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். 


பிகார் மாநில காங்கிரஸ் தலைவராகவும் சில ஆண்டுகள் இருந்த தாரிக் அன்வர்போல, பழகுவதற்கு நல்ல நண்பரைப் பார்க்க முடியாது. ஊடகங்களில் இருக்கும் பலரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களை தனது நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டிருப்பார்.


இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி என்று நேரு குடும்பத்துடன் மிக நெருக்கமாகவும், அவர்களது நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த தாரிக் அன்வரின் வளர்ச்சிக்கு சீதாராம் கேசரியும் ஒரு காரணம். கேசரியின் வீட்டில் சந்திக்கும்போது அவர் மக்களவை உறுப்பினராக இருந்தார்.


'இன்று மாலையில் அக்பர் ரோடு அலுவலகத்தில் என்னை சந்தியுங்கள். உங்களிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். செய்தி என்பதைவிட உதவி என்று வைத்துக் கொள்ளுங்கள்' என்றபடி எனக்கு கைகுலுக்கி விடை கொடுத்தார் தாரிக் அன்வர்.


மாலையில் அக்பர் ரோடு அலுவலகத்துக்கு நான் போனபோது, அங்கே தலைவர் சீதாராம் கேசரி அறையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகச் சொன்னார்கள். பிரணாப் முகர்ஜி, கருணாகரன், மாதவ்சிங் சோலங்கி, அகமது படேல், குலாம் நபி ஆஸாத், ஆர்.கே. தாவன் என்று முக்கியமான தலைவர்களுடன் தாரிக் அன்வரும் அந்தக் கூட்டத்தில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். 


'சாகர் ரத்னா' உணவு விடுதியிலும், அந்தத் தலைமை அலுவலகத்தின் பின்னால் உள்ள அறைகளில் செயல்படும் சில தலைவர்களின் அறைகளிலுமாக நேரத்தைக் கடத்தினேன்.
இரவு சுமார் 7.30 மணிக்குத்தான் அந்தக் கூட்டம் கலைந்தது. புதிதாக காரியக் கமிட்டி அமைப்பது குறித்து சீதாராம் கேசரி அவர்களுடன் விவாதிக்கக் கூடும் என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பு. நான் தாரிக் அன்வரின் வருகைக்காகப் பொறுமையாகக் காத்திருந்தேன். ஒருவேளை அவர் மறந்துவிட்டாரோ என்றுகூட எனக்கு நினைக்கத் தோன்றியது.


கூட்டம் முடிந்து தலைவர்கள் ஒவ்வொருவராகக் கிளம்புகிறார்கள் என்கிற தகவல் கிடைத்ததும், அலுவலக முகப்புக்கு நகர்ந்தேன். மூத்த தலைவர்கள் போனதும், அலுவலகத்துக்குள் நுழைந்தேன். தாரிக் அன்வர், தலைவர் சீதாராம் கேசரியின் அறையில் இருப்பதாகத் தெரிவித்தார் கே.கே. திவாரி. உள்ளே போவதா இல்லை, வெளியே காத்திருப்பதா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வெளியே வந்துவிட்டார்.


அங்கிருந்த இன்னொரு அறைக்கு என்னைத் தனியாக அழைத்துச் சென்றார் தாரிக் அன்வர். மெல்லப் பேசத் தொடங்கினார். நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார் அவர்.
'மூப்பனார்ஜி அவரது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் காங்கிரஸூடன் இணைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?'
'எனக்குத் தெரிந்து இல்லை...'


'நீங்கள் சோ ராமசாமிக்கு நெருக்கம்தானே, அவர் சொன்னால் மூப்பனார்ஜி கேட்கமாட்டாரா?'

Story image

'கேட்பவராக இருக்கலாம். ஆனால், அவர் சொல்லமாட்டார். இதுபோன்ற அரசியல் சமரசங்களில் எல்லாம் தலையிடுபவர் அல்ல சோ ராமசாமி. எதற்காக இப்போது இப்படியொரு திடீர் யோசனை...'


'கேசரிஜி தலைவரானதைத் தொடர்ந்து கட்சி பலப்படுகிறது என்கிற தோற்றம் ஏற்பட வேண்டும். நரசிம்ம ராவ்ஜி மீது வழக்குகள் தொடரப்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தமாகா - காங்கிரஸ் இணைப்பு உதவும் என்பது எனது கருத்து. இது பற்றி நான் இன்னும் கேசரிஜியிடம் கூடப் பேசவில்லை. உங்கள் கருத்தைத் தெரிந்துகொண்டு பேசலாம் என்று நினைக்கிறேன்.'

'போகாத ஊருக்கு நீங்கள் வழி தேடுகிறீர்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மாநிலத்தில் பலப்படுத்துவது, தேசிய அளவில் காங்கிரஸூடன் இணைந்து செயல்படுவது என்பதுதான் மூப்பனார்ஜியின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.'
'முயற்சி செய்து பாருங்கள். தேசிய சக்திகள் ஒன்றுபடுவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். யாரிடமாவது பேச வேண்டும் என்றால் சொல்லுங்கள், நான் பேசத் தயார்.'
அக்பர் ரோடு அலுவலகத்தில் இருந்து நான் கிளம்பும்போது நன்றாக இருட்டிவிட்டது. பொடி நடையாக இந்தியா கேட் வந்து, அங்கிருந்து ஆட்டோ பிடித்து கரோல்பாகில் நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்தபோது இரவு மணி பத்து.


அடுத்த நாள் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள சுநேரிபாக் சாலையில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் கே. கருணாகரனை சந்திக்கச் சென்றேன். அவர் வெளியே போயிருப்பதாகச் சொன்னார்கள்.


வரவேற்பறையில் காத்திருப்போம் என்று நினைத்து உள்ளே நுழைந்தேன் அங்கே எஸ்.எம். கிருஷ்ணாவும், பி. உபேந்திராவும் உட்கார்ந்திருந்தனர். இரண்டு பேருமே கருணாகரனை சந்திக்க வந்திருப்பது தெரிந்தது. நன்றாகத் தெரிந்தவன் என்பதால், நான் வந்ததில் அவர்களுக்கு பிரச்னை எதுவும் இருக்கவில்லை. மாறாக, எஸ்.எம். கிருஷ்ணா மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 


எஸ்.எம். கிருஷ்ணா மாநிலங்களவை உறுப்பினராகவும், பி. உபேந்திரா மக்களவை உறுப்பினராகவும் இருந்தனர். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருந்தார் உபேந்திரா. நான் போய் அமர்ந்ததும், அவர்களிடம் வைத்த வேண்டுகோள், இதுதான் - 

'ஏதாவது புதிய செய்தி இருந்தால் சொல்லுங்கள்...'
சிரித்தபடியே எஸ்.எம். கிருஷ்ணா சொன்னார் - 'எனக்குக் கிடைத்த அதிகாரபூர்வத் தகவலின்படி மாதவ்சிங் சோலங்கியும், அகமது படேலும் காரியக் கமிட்டியில் இருந்து பதவி விலகி இருக்கிறார்கள்.'

'எதற்காக ராஜிநாமா செய்கிறார்கள்? சீதாராம் கேசரி தலைவரானதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்களா? அப்படியானால் காங்கிரஸில் பிளவு ஏற்படுமா?'


நான் பேசிக் கொண்டே போனேன். அவர்கள் இருவரும் எந்த பதிலும் சொல்லவில்லை.


(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.