டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிவப்பு அணுக்கள் குறைந்தால்...!

எனக்கு வயது 27. போதுமான செந்நிற ஜீவ அணுக்கள் ரத்தத்தில் இல்லாமையால் மயக்கம் ஏற்படுகிறது. முகமும் கண்களும் வெளுத்திருக்கிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:27 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 27. போதுமான செந்நிற ஜீவ அணுக்கள் ரத்தத்தில் இல்லாமையால் மயக்கம் ஏற்படுகிறது. முகமும் கண்களும் வெளுத்திருக்கிறது. வாயின் உட்புறம், உதடுகளின் உட்புறத்திலும் புண்கள் ஏற்பட்டு அவஸ்தையாக இருக்கிறது. இதுஎதனால்? எப்படிக் குணப்படுத்துவது?

லட்சுமி, மதுரை.

ரத்தத்தில் செந்நிற ஜீவ அணுக்களின் குறைவால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் போதுமான அளவு பிராண வாயுவின் வரவு குறைவதால் மயக்கம் ஏற்படலாம். மேலும், தாமாகவே இயங்கிக் கொண்டிருக்கும் பல உறுப்புகளிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவை வெளிப்படுத்த முடியாமையால், அது சிறிது சிறிதாக உடலிலேயே தங்கிவிட நேர்வதால், இந்த வாயுவின் விஷத்தன்மையினாலும் மயக்கம் ஏற்படலாம்.

நீங்கள் குறிப்பிடுவது போல, முகமும் கண்களும் வெளுத்திருத்தல், தாடைகள் சுரந்து கொண்டதுபோல ஊதியும், உதடுகள் புண் போல வெளுத்தும், நாக்குள் மேலும் அதிகம் வெளுத்துமிருக்கும். வாயின் உட்புறம், நாக்கு, உதடுகளின் உட்புறத்திலும் புண்கள் உண்டாகி உபத்திரம் தரும். வயிற்றில் எரிச்சல், மலச்சிக்கல், பசிமந்தம் அல்லது கூடுதல், சிலசமயம் செரித்தும் செரிக்காமலும் நொப்பும் நுரையுமாக மலம் அதிகம் போவதும் செய்யும்.

சிலருக்கு வாந்தி ஏற்படும். கண் இமைகளைத்திறந்து பார்த்தால் வெள்ளைவெளேர் என்றிருக்கும். வயிறு வீங்கி, மார்க்கூடுகட்டி குச்சிக்காலும் குச்சிக்கையுமாகயிருக்கும், புறங்கை, புறங்கால்களில் வீக்கமும், கேசங்கள் உதிர்ந்து அடர்த்தி குறைவாகிவிடும்.

அன்னபேதி ஸிந்தூரம் என்ற மருந்து தங்களுக்குஉதவிடலாம். ஒரு நெல் மணி அளவு எடுத்து தினம் இரண்டு வேளை தேனில் குழைத்து உணவிற்கு முன் சாப்பிட்டு வர, ரத்தம் விருத்தியாகும். ரத்தக் குறைவினால் உண்டாகும் தலை சுற்றல் மயக்கம் தீரும். இதே அளவில் இம்மருந்தை இரண்டு சிட்டிகை திப்பிலி சூர்ணத்துடன் கலந்து மேற்குறிப்பட்டபடி உபயோகிக்க, நல்ல பசி உண்டாகி, ரத்த விருத்தி ஏற்படும். திப்பிலிக்குப் பதிலாக அதே அளவில் சுக்குப்பொடியுடன் கூட்டி அவ்வாறே சாப்பிட, பசி எடுக்கும்; செரித்தும் செரிக்காமலும் அடிக்கடி மலம் போவது நிற்கும். ரத்தமும் விருத்தியாகும்.

மண்டூரபஸ்மம் எனும் மருந்தை அன்னபேதி ஸிந்தூரம் போலவே பயன்படுத்தினால் ரத்தம் வெகு சீக்கிரம் உற்பத்தியாகி, பசி எடுத்து, உணவு செரித்து, உடம்பு புஷ்டியாகி, தலைசுற்றலும் மயக்கமும் நிற்கும். கைகால்களில் சிறுவீக்கம் ஏற்பட்டிருப்பின் அதுவும் வடியும். தாராளமாகச் சிறுநீர் பிரிந்து வெளியாகும்.

மஞ்சள் கரிசிலாங்கண்ணியின் கீரையை உலர்த்தி, இடித்துச் சூரணம் செய்து அதில் வேளைக்கு இரண்டு அல்லது மூன்று சிட்டிகை வீதம் தினம் 2 வேளை, தேனிலோ, நெய்யிலோ குழைத்துச் சாப்பிட்டு வர, ரத்தமும் புஷ்டியும் பெருகும். வெந்நீரிலும் சாப்பிடலாம்.

திராக்ஷôதி லேஹியத்தில் ஒரு சுண்டைக்காய் முதல் நெல்லிக்காய் அளவு வரை எடுத்து, தினம் இரண்டுவேளை சாப்பிட்டு வர, ரத்தம் வெகு விரைவில் விருத்தியாகும். இத்துடன் அன்னபேதி அல்லது மண்டூரபஸ்மத்தை நெல்லளவு கூட்டிச் சாப்பிட, பசி நன்றாய் எடுத்து, உணவு செரித்து, உடம்பில் ஒட்டி, புஷ்டியுமுண்டாகும். எட்டு நாளைக்கு ஒரு தரம் ஓமமிட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று மட்டும் மேற்குறிப்பிட்டலேஹியத்தை நிறுத்தி விடவும்.

சூடான வீர்யம் கொண்ட பொருட்களை முழு அளவில் நிறுத்தி, கூடவே புளியும் மிளகாயும் உணவில் முடிந்த வரை நீக்க வேண்டும். புளிக்குப் பதிலாக நெல்லிமுள்ளி அல்லது புளித்த மாதுளையையும், காரத்திற்காக மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம். எளிதில் செரிக்கக் கூடிய உணவை அளவோடு சாப்பிட வேண்டும். பால் சாப்பிட விரும்புவர்கள், வெள்ளாட்டுப்பால் கிடைத்தால், மிகவும் நல்லது. கிராமங்களில் மட்டுமே, அதுவும் சில இடங்களில் மட்டுமே இன்று இது சாத்தியமாக உள்ளது.

தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்தை சுமார் 10 மி.லி. காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு, மேலே சிறிது வெந்நீர் அருந்த, நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் குறைய வாய்ப்பிருக்கிறது. சுமார் 21 நாட்கள் சாப்பிடலாம். அதன் பிறகு பேதி மருந்துகளைக் கொடுத்து குடலைச் சுத்தம் செய்த பிறகு வாஸா குடூச்யாதி கஷாயம் தேனுடன் சாப்பிடுவதையும், மண்டூர வடகம் எனும் மாத்திரையைப் பொடித்து, மோர் சாதத்துடன் சாப்பிடுவதையும் சில மாதங்கள் பழக வேண்டும். இவற்றின் வாயிலாக, சிவப்பு அணுக்களின் வளர்ச்சியை படிப்படியாக வளர்த்து நிரந்தரமாக உடலில் உற்பத்திக் கேந்திரங்களைத் தூண்டிவிடலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.