96 வயதில் நான்காம் வகுப்பு!
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்திருப்பவர் கார்த்தியாயினியம்மா.


கல்வி கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்திருப்பவர் கார்த்தியாயினியம்மா. இவருக்கு வயது 96 . கேரளத்தின் "அறிவொளி' இயக்கமான "அக்ஷரலக்ஷம்' நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டு , கேரள கல்வியறிவு தேர்வில் நான்காம் வகுப்பில் 98 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்து தேர்வாகியுள்ளார் "வாவ்' சூப்பர் பாட்டி கார்த்தியாயினியம்மா.
""எனது பேரக் குழந்தைகள் அபர்ணா, அஞ்சனாவின் உதவியோடு, பாடங்களை தினமும் படித்தேன்... எழுதிப் பார்த்தேன்.. அதனால் பாடத்தை சரி வர புரிந்து கொள்ள முடிந்தது. இப்போது என்னால் தாய் மொழியான மலையாளம் படிக்க, எழுத முடியும். அத்துடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போடவும் தெரியும்'' என்று பெருமையுடன் கூறுகிறார் கார்த்தியாயினியம்மா.
இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் வாழும் கேரளத்தில் நூறு சதவீதம் பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கேரளா அரசால் தொடங்கப்பட்டதுதான் "அக்ஷரலக்ஷம்' என்ற திட்டம். இந்தத் திட்டத்தில் படிப்பறிவில்லாத முதியோர்களும் சேர்ந்து கல்வியறிவைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தின் ஒரு பயனாளிதான் ஆலப்புழை மாவட்டத்தின் செப்பாடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தியாயினியம்மா.
"அக்ஷரலக்ஷம்' திட்டத்தில் சேர்ந்து படிப்பவர்களில் வயதில் மூத்தவரும் கார்த்தியாயினியம்மாதான்!
""இந்தத் திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்''என்கிறார் 96 வயது சாதனைப் பாட்டி.
""மலையாளத்தில் படிக்க எழுத வரும் எனக்கு ஆங்கிலமும் படிக்கணும். ஏன்னா பேரக்குழந்தைகள் ஆங்கிலவழி பள்ளியில் படிக்கின்றனர்.
வர்களுடன் உரையாட எனக்கும் கொஞ்சம் ஆங்கில அறிவு வேண்டுமே... ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எனது லட்சியங்களில் ஒன்று. நான் சிறுமியாக இருந்த போது பெண்களை பள்ளிக்கு படிக்க அனுப்ப மாட்டார்கள். அதனால் நான் மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்கியதில்லை. எனது மகள் அம்மணிக்கு 51 வயதாகிறது. அம்மணி பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது பாதியில் படிப்பை நிறுத்த வேண்டி வந்தது. 49 ஆம் வயதில் இந்தத் திட்டம் மூலம் படித்து பத்தாம் வகுப்பு தேறினாள். "படிக்க வயது வரம்பு எதுவும் இல்லை.. அம்மா நீ படி..' என்று மகள் அம்மணி தந்த உந்துதல், உற்சாகத்தில்தான் நான் வகுப்புகளில் சேர்ந்தேன். படிப்பதைச் சவாலாக ஏற்றுக் கொண்டு படித்து உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியை எனக்கு அபார ஞாபக சக்தி என்று பாராட்டினார். நான் நான்காம் வகுப்பு தேர்வு பெற்றத்தைக் கேள்விப்பட்டதும் நடிகை மஞ்சு வாரியர் என்னைப் பார்க்க வந்தார். பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். முண்டு எனப்படும் சேலையையும் பரிசளித்தார். நான் தொடர்ந்து படிக்க உதவுவதாகவும் மஞ்சு வாரியர் உறுதி தந்துள்ளார். கேரளத்தின் கல்வி அமைச்சர் என்னைப் பாராட்ட வந்த போது மடிக்கணினி ஒன்றினை அன்பளிப்பாகத் தந்தார். அவர் முன்னிலையில் எனது பெயரை தட்டச்சு செய்து காண்பித்தேன். எனது பெயரை மடிக்கணினியின் திரையில் பார்க்க ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது..'' என்கிறார் கார்த்தியாயினியம்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...