மேற்குறிப்பிட்ட குணங்களைக் குறைத்து, அதற்கு எதிரான குணங்களை மூளைப்பகுதியில் ஏற்படும் அளவிற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் செய்தால், அவருடைய பாதிப்புகளனைத்தும் பெருமளவில் குறைய வாய்ப்பிருக்கின்றன. மூளைப்பகுதியை வலுப்படுத்துவதற்கு மூக்கின் உள்ளே விடப்படும் மூலிகை நெய்மருந்துகளால் மட்டுமே சாத்தியம் என்பதால், அவர் இரண்டு சொட்டு க்ஷீரபலா101 எனும் நெய்மருந்தை லேசாக உருக்கி, காலை இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக விட்டுக் கொள்வது நல்லது. கண் நரம்புகளின் பாதுகாப்பிற்காக ஒன்றிரண்டு சொட்டுகள் நயனாம்ருதம் எனும் மருந்தை இரவு படுக்கும் முன் கண்களில் விட்டுக் கொள்ளலாம். காதினுடைய கேட்கும் திறன் வலுப்பட வசாலசுனாதி எனும் தைல மருந்தை இதமான சூட்டில் நான்கு சொட்டுகள் காலை, இரவு சாப்பிடுவதற்கு முன் காதினுள் விட்டுக் கொள்ளலாம். மறுநாள் காலை ஒரு பஞ்சினால் காதைத் துடைத்துவிட்டு மறுபடியும் இந்த எண்ணெய் சிகிச்சையைத் தொடரலாம். கார்ப்பாஸாஸ்த்யாதி எனும் தைல மருந்தை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கி பின் மண்டை, கழுத்து மற்றும் மேல்புற முதுகுத் தண்டுவடப்பகுதிகளில் இதமாகத் தடவி மூலிகை இலைகளாகிய நொச்சி, ஆமணக்கு, புங்கை, எருக்கு, கல்யாணமுருங்கை, கற்பூர இலை, யூகலிப்டஸ் ஆகியவற்றை பந்து போல ஒரு துணியினுள் நறுக்கி சுருட்டிக் கொண்டு லேசாகச் சூடாக்கி, எண்ணெய் தடவிய பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே. திங்கள், புதன், சனிக்கிழமைகளில் க்ஷீரபலா எனும் தைலத்தை வெதுவெதுப்பாக தலையில் தடவி அரை,முக்கால் மணிநேரம் ஊறிய பிறகு ஆறிய,வெந்நீரில் குளிப்பது மிகவும் உசிதமானது.