/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் சகோதரியின் பேத்தி பத்தாம் வகுப்பில் சேர இருக்கிறாள். அவள் இன்னமும் பெரிய மனுஷி ஆகவில்லை.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:09 pm

எஸ். சுவாமிநாதன்

என் சகோதரியின் பேத்தி பத்தாம் வகுப்பில் சேர இருக்கிறாள். அவள் இன்னமும் பெரிய மனுஷி ஆகவில்லை. இது எல்லாருடைய மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. ஆயுர்வேதத்தில் தக்க மருந்து வகைகளை தெரிவிக்க வேண்டுகிறேன். ரெடிமேட் மருந்தாக இருப்பின் மிக்க நலம்.

- கே.ஆர்.தெட்சிணாமூர்த்தி, மதுரை.

உடலில் ஏற்படக்கூடிய ரசாயன மாற்றங்களைப் பருவம் எய்துகையில் ஒரு பெண் சீராகப் பெறாத பட்சத்தில் அவள் பூப்பெய்தும் காலமானது தள்ளிப் போகிறது. ரசாயன மாற்றங்களை சரி வர ஏற்படுத்தித் தரும் வேலையை பசியின் மூலமே பெற முடியும். அதனால் அடிப்படை ஆரோக்கியம் என்பது வயிற்றைச் சார்ந்த பாசகம் எனும் பித்தத்தின் செயல்பாட்டினைச் சீராக்கி, அதற்கு அளிக்கப்படும் உணவினுடைய சாரத்தை உள்போஷணைக்காக சக்தியாக மாற்றும் திறனை அது பெற வேண்டியது அவசியமாகும். அதனால் இக்காலத்திய வைத்தியமுறைகளில் செலுத்தப்படும் ஹார்மோன் தெரப்பிகளால் பெரிய லாபம் ஏதும் கிடைத்திட வாய்ப்பில்லை. மேலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.

பாசக பித்தத்தை சீராகப் பெறுவதற்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவுவகைகள் அனைத்தும் திட்டமிட்டு தரப்பட வேண்டியது. பசி குறைவாக இருக்கும் பெண்ணாக இருந்தால் காலையில் பயற்றம்கஞ்சி, புழுங்கலரிசிக்கஞ்சி அல்லது பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, முழுஉளுந்து, பச்சரிசி போன்றவை சேர்த்துக் காய்ச்சப்பட்ட கஞ்சி வகைகளுடன் அஷ்டசூர்ணம் எனும் ஆயுர்வேத மருந்து அரை ஸ்பூன் கலந்து இந்துகாந்தம் எனும் நெய்மருந்தை ஒரு ஸ்பூன் (5 மில்லி லிட்டர்) அளவில் சேர்த்து, வெதுவெதுப்பாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பசித்தீயைத் தூண்டுவதற்கானதொரு உகந்த உணவாகும். கஞ்சியினுடைய சத்து அனைத்தும் இந்த மருந்துகளின் வாயிலாக பாசகபித்தம் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டு தாதுக்களுக்கு அனுப்பி வைப்பதால் சத்து அனைத்தும் உடலில் நன்றாகச் சேரும். மதிய உணவாக சூடான சாதத்துடன் கருவேப்பிலைத் துவையல் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு அதன்மேல் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்த ரசம் சாதம், அதற்கு மேலாக கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர், மோரை விட்டுப் பிசைந்த அன்னம், நார்த்தங்காய் வற்றலுடன் சாப்பிடப்பட வேண்டும். மாலையில் வீட்டிற்கு வந்த பிறகு புட்டு எனப்படும் அரிசியும் வெல்லமும் கலந்த பணியாரம் சாப்பிடுவதும், இரவில் கோதுமையைச் சார்ந்த உணவு வகைகளாகிய கோதுமை ரவை உப்புமா, சப்பாத்தி, நன்கு வேக வைத்த கறிகாய் கூட்டுகளுடன் சாப்பிட உடல் வனப்பைக் கூட்டும். இரவில் படுக்கும் முன் சூடான பசும்பாலில் பேரீச்சம்பழம் கலந்து சாப்பிடுவதும் இரத்த விருத்திக்கு பெருமளவில் உதவும்.

பத்தாம் வகுப்பு படிப்பதால் மனதளவில் அதிகமான பாட சம்பந்தமாக பளு அதிகரிக்கக் கூடும். பள்ளியிலும், வீட்டிலும் டியூஷன் வகுப்பிலும் ஏற்படும் இந்த மனஅழுத்தமானது உடலையும் பாதிக்கக்கூடும் என்பதால், வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் அவருக்கு நல்ல அனுசரணையாகவும், அன்பாகவும் பழகவேண்டும். வாரம் இருமுறை அதாவது செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணெய்யைச் சூடாக்கி தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். மிகப்பெரிய மாற்றங்களை உடலளவிலும், மனதளவிலும் இவை அனைத்தும் ஏற்படுத்தித் தரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதனால் சுரப்பிகளின் மேம்பாடு அதிகரிக்கக் கூடும்.

பசியை மேம்படுத்தித் தரும் மேற்குறிப்பிட்ட உணவுகளால் உடல் சத்து அதிகரிக்கும் தறுவாயில், தாதுக்களில் உள்ள கொளுந்துவிட்டு எரியும் நெருப்புகளில் எவ்வகையான கடினமாக உணவின் வரவும் செரித்துவிடும் தன்மையானது வளர்ந்துவிடும் பட்சத்தில், ஆயுர்வேத மூலிகை மருந்தாகிய பலசர்ப்பிஸ் எனப்படும் நெய்மருந்து பதினைந்து மி.லி. அளவில் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தாடிமாதி க்ருதம் எனப்படும் நெய் மருந்தை தாது மற்றும் இரத்தவிருத்திக்காக பத்து மி.லி. அளவில் எடுத்து சூடான சாதத்துடன் கலந்து மதியம் மற்றும் இரவுவேளைகளில் முதல் கவளத்தைச் சாப்பிடலாம். குமார்யஸவம் மற்றும் லோஹாஸவம் ஆகியவற்றை பதினைந்து மி.லி. வீதம் கலந்து மொத்தம் 30 மி.லி. காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டால் உடல் போஷணை பெறுவதோடு பெண்ணிற்கே உரிய ஹார்மோன் சுரப்பிகளைச் சீராக்கி அனைத்தும் தூண்டப்பட்டு பூப்பெய்துவதற்கான காலமானது விரைவில் கனிந்துவிடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.