ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி... அதிக எடை!

அதிக நடைப்பயிற்சியின் பொழுது ஸமானன் எனும் வாயு வயிற்றுக்குள் அதிகம் பரவி ஜாடராக்னி எனப்படும் பசித் தீயைத் தூண்டிவிடச் செய்கிறது. அதனால் பசி, தாகம் அதிகப்படுகிறது

News image
Updated On :4 மே 2014, 3:23 am

என்னுடைய மகனுக்கு வயது 36. உயரம் 5.6 அங்குலம், எடை 98 கிலோ கிராம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப்பாடு, நீண்ட தூர நடைப்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் இன்னும் பசி அதிகமாகி, மேலும் அதிகமாகச் சாப்பிடுகிறான். என் மகனின் உடற்பருமனைக் குறைக்க ஆயுர்வேதத்தில் வழி உள்ளதா?

எஸ்.பாலாம்பாள் கணேசன், சாலிகிராமம்.

அதிக நடைப்பயிற்சியின் பொழுது ஸமானன் எனும் வாயு வயிற்றுக்குள் அதிகம் பரவி ஜாடராக்னி எனப்படும் பசித் தீயைத் தூண்டிவிடச் செய்கிறது. அதனால் பசி, தாகம் அதிகப்படுகிறது. மரத்தின் பொந்தில் உள்ள நெருப்பு, காற்றுடன் சேர்ந்து வளர்ந்து மரத்தையே எரிப்பதுபோல், வயிற்றுக்குள் உள்ள ஜாடராக்னியும் வாயுவுடன் சேர்ந்து வளர்ந்து உடல் பருமனுள்ள மனிதனை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.

காற்றின் உதவிகொண்டு கொழுந்துவிட்டெரியும் ஒரு குடிசையை மணல் மற்றும் தண்ணீர் விட்டு அணைப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதே போன்றதொரு நிலை வயிற்றினுள் ஏற்பட்டால் நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட உணவினால் மட்டுமே குணம் பெறலாம். ஆனால் இதிலுள்ள கஷ்டமென்னவென்றால் இந்த இருவகை பஞ்ச மஹாபூதங்கள் உடலில் ஊட்டத்தை ஏற்படுத்தும் தன்மையுடையவை என்பதால் மகனின் உடல் மேலும் பெருக்கக் கூடும். அதனால் உண்ணும் உணவு இதே ஆதிக்ய பூதங்களுடையதாக இருந்து ஸமானவாயு  ஜாடராக்னியை குறைத்து உடலையும் இளைக்கச் செய்யக் கூடியவையாக இருந்தால் எத்தனை நன்மை தரும்? அப்படியொரு உணவு இருக்கிறதா? என்றால் அரிதான வகைகள் இருப்பதாக ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது.

யவை என்ற வாற்கோதுமை உடல் பருமன் மற்றும் சர்க்கரை உபாதையில் மிகவும் சிலாக்கியமான உணவு. ஜவ் என்ற பெயரில் வடநாட்டில் வழங்கும் இந்த தானியம் அங்கு ஏராளமாய் பயிராகிறது. கேரளத்தில் மிகவும் குறைந்த அளவில் பயிராகிறது. தமிழ்நாட்டில் பயிரிடுவதில்லை. அரிசி, கோதுமை கலப்பின்றி தனி யவையே மிக நல்ல குணம் தருகிறது. சற்று தாமதித்து ஜீரணமாகக் கூடியது. குடலில் வறட்சியை ஏற்படுத்தக் கூடியது. உடல் வலுவைத் தரும். நீரிழிவு, கொழுப்பு அடைப்பு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். மேலும் இது நெய்ப்பு இல்லாதது. குளுமை. இனிப்புச் சுவை, மலமிளக்கி, விந்துவை வளர்க்கக் கூடியது. தாதுக்களுக்கு உறுதியைச் செய்யும். சிறுநீர் உபாதையைக் கண்டிக்கும். நீங்கள் வடநாட்டிலிருந்து யவை தானியத்தை வரவழைத்து உபயோகிப்பதில் சிரமமேதுமில்லை.

இதேபோன்று கம்பு, திணை, கேழ்வரகு போன்றவையும் பாசிப்பயறு, மசூர் டால் போன்ற பயறு வகைகளும் நல்லதே. கேழ்வரகை முளை கட்டி குத்திப் புடைத்து பின் இதன் மாவை கஞ்சி, களி, கூழ், தோசை, அடை முதலியவற்றில் உணவாக்கிக் கொள்ளலாம். அதுபோல திணை கொழுப்பு, ஊளைச் சதை சேரவிடாது. சிறுநீரை அதிகம் வெளியேற்றி தசைகளை இறுகச் செய்யும். இதனை சாதமாக்கிச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிச் சாப்பிட வீக்கம், நீர்தேக்கம் வடியும். லேசாக வறுத்து மாவாக்கித் தேனுடன் சாப்பிட களைப்பு நீங்கும். கம்பு தானியத்தை சாதமாகவோ கூழாகவோ மோர் சேர்த்துச் சாப்பிட்டு வர உடல் கொழுப்பை அதிகப்படுத்தாமல் குடல் எரிவு, கொதிப்பை அகற்றும்.

முட்டை வடிவிலுள்ள பார்லியை சீமை யவை என்பார்கள். குணத்தில் யவையை ஒத்தது. இதன் முழு அரிசியைக் கஞ்சியாக்கி அதன் தெளிவைப் பருக சிறுநீரை அதிக அளவில் பெருக்கி வெளியேற்றும். தாகத்தை அடக்கும். நாவறட்சியைப் போக்கும். தொடர்ந்து உணவாக்கிக் கொள்ள உடல் இளைக்கும்.

தேன் கலந்த நீர், தெளிந்த மோர் போன்றவை உணவிற்குப் பிறகு பயன்படுத்த உடல் இளைக்கப் பயன்படும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனப்படும் த்ரிபலாசூரணத்தைத் தேனில் கலந்து இரவில் படுக்கும் முன் சாப்பிடுவதால் பசியை மட்டுப்படுத்தி கொழுப்பையும் குறைக்கப் பயன்படும். முன்குறிப்பிட்ட யவை தானியத்தை நெல்லிக்காய் சூரணத்துடன் சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சியைச் செய்வதால் அதிகப் பருமனை குறைக்கும் ஒரு சிறந்த உபாயமாகும்.

கவலைப்படுதல்,  உடற்பயிற்சி, வாந்தி பேதிக்குக் கொடுத்து உடலைச் சுத்தம் செய்தல், குறைவாகத் தூங்குதல் போன்றவற்றை உடலுக்கு ஏற்றவாறு கடைபிடித்தலும், வறட்சியளிக்கக் கூடிய ஏலாதி சூரணத்தை உடலில் பூசி நீராடச் செய்வதன் மூலமாகவும் உடலை நம்மால் இளைக்கச் செய்ய முடியும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.