ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: புண்ணை ஆற்றக் கூடிய சிகிச்சைகள்!


என் வயது 53 பருமனான உடல் வாகு, எனக்கு கடந்த 6 வருடங்களாக வெரிகோஸ் (பச்சை நரம்பு சுற்றுதல்) இரண்டு கால்களிலும் உள்ளது. காலில் சிறு புண் ஏற்பட்டு வலி தாங்கமுடியவில்லை. பிறகு 2010 இல் இரு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறுபடியும் புண் ஏற்பட்டு நீண்டகாலம் அதனால் அவதிப்பட்டு சரி செய்தேன். 2012-ல் விலை உயர்ந்த ஊசி போட்டுக்கொண்டேன். அதனால் காலில் கொப்புளம் ஏற்பட்டு நீண்ட காலம் அவதிப்பட்டு சரிசெய்தேன். தற்சமயம் இரு கால்களிலும் மறுபடியும் புண் ஏற்பட்டு அதிக வலி உள்ளது. வலி மாத்திரை அதிகமாக எடுக்கிறேன். இது மிகவும் பயமாக உள்ளது. தயவு செய்து இது எதனால் வருகிறது? இதற்கு தங்களின் மருத்துவமுறையில் எப்படி குணப்படுத்தலாம்? நான் கடைப்பிடிக்க வேண்டி உணவு முறை என்ன? என்பதனை தயவு செய்து கூறவும்.
எஸ். மகேஸ்வரி, டி.வி.எஸ் நகர், கோவை.
உடலில் புண் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து அந்த புண்ணானது ஆறி மறுபடியும் அதே இடத்தில் புண் ஏற்படும் நபர்கள் எந்தக் காரணம் கொண்டும் பகலில் படுத்து உறங்கக் கூடாது என்று ஸூஸ்ருதர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார். பகலில் படுத்து உறங்குவதால் உடலில் கனம் கூடுகிறது. மேலும், அரிப்பு, வீக்கம், வலி, சிவப்பு நிறம் மற்றும் புண்ணிலிருந்து துர்நீர் வெளியாகும் என்றும் குறிப்பிடுகிறார். அரிப்பும், கனமும் கபத்தினாலும், வீக்கமும், வலியும் வாதத்தினாலும், சிவப்பு வண்ணம் பித்தத்தினாலும், துர்நீர் இரத்தம் கெடுவதாலும் ஏற்படுவதால், பகல் தூக்கத்தை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். படுக்கையிலிருந்து எழுவது, அமர்ந்துகொள்வது, நடப்பது, உரக்கப் பேசுவது போன்றவை மிகவும் கருத்துடனும், கவனத்துடனும் கடைப்பிடிக்க வேண்டியவை. புதிதாக அறுவடைசெய்த நெல், தானியங்கள், உளுந்து, எள்ளு, கொண்டைகடலை, கொள்ளு, அவரைக்காய், பச்சைக் கீரைகள், புளி, உப்பு, காரம், வெல்லம், மாவுப் பண்டங்கள், கருவாடு மற்றும் உலர்ந்த காய்கறிகள், ஆட்டு மாமிசம், செம்மறி ஆட்டு மாமிசம், நீர்வாழ் பிராணிகளின் மாமிசம், எண்ணெய் கொழுப்பு, குளிர்ந்த நீர், எள்ளுப்பொடி சாதம், பாயசம், தயிர், பால், மோர் ஆகியவை புண் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை.
காற்று, வெப்பம், புழுதி, புகை, பனி போன்றவை அதிகமுள்ள இடங்களில் இருப்பதை புண் உள்ளவர்கள் தவிர்த்தல் நலம். மேலும் அதிகமாய் உண்பது, செரிக்காத உணவுகளை உண்பது, முன் உண்ட உணவு செரிக்காதபோது மேலே உண்பது, விருப்பமில்லாதவற்றை உண்பது, கேட்பது, பார்ப்பது போன்றவற்றையும், பொறாமை, கோபம், பயம், வருத்தம், கவலை, இரவில் கண்விழித்தல், நேரம் தவறிய உறக்கம் மற்றும் உணவு, நேரத்தில் உண்ணாதிருத்தல், வெகு நேரம் பேசுதல், உடற்பயிற்சி செய்தல், நடத்தல், குளிர் காற்று போன்றவற்றையும் தவிர்க்க வேண்டுமென்பது ஸூஸ்ருதரின் கூற்றாகும்.
கடுகு, வேப்பிலை, பசு நெய் மற்றும் இந்துப்பு ஆகியவற்றை போட்டு அதிலிருந்து வெளிப்படும் புகையைத் தினமும் இருவேளைகளில் பத்து நாட்களுக்கு புண் ஏற்பட்டுள்ள இடத்தில் காண்பித்து வர, அந்தப் பகுதியில் கிருமித் தொற்று ஏதும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், அப்பகுதியில் துர்நீர் வெளிப்படுவது, துர்நாற்றம் போன்றவையும் இந்தப் புகை சிகிச்சையின் மூலமாக தவிர்த்துக் கொள்ளலாம்.
பழைய அரிசியைச் சாதமாக வடித்து சிறிது நெய் தாளிதத்துடன் முயல், மாடு போன்ற மாமிச உணவு வகைகளுடன் சாப்பிடுவது புண்ணிலிருந்து விடுபடுவதற்கானதொரு நல்ல வழியாகும். சிறுகீரை, சிறுகுறிஞ்சான் கீரை, ஊசிப்பாலை, சக்ரவர்த்திகீரை, சிறுமுள்ளங்கி, சுண்டைக்காய், புடலங்காய், பாகற்காய் போன்றவை சாப்பிட நல்லது. மாதுளம்பழம், நெல்லிக்காய், நெய்யில் வறுத்த இந்துப்பை பச்சைப்பயறுடன் சூப்பாக செய்து சாப்பிடுதல், ராகி மாவு, தினை மாவு, பயத்தம் பருப்பு, துவரம்பருப்பு வேக வைத்த நீர் போன்றவையும் சாப்பிடுவதற்கு உகந்தவை. காய்ச்சிய நீரைக் குடிப்பது என்றுமே நல்லதாகும். எளிதில் செரிக்கக் கூடிய பசியைத் தூண்டிவிடக்கூடிய எவ்வகை உணவும் புண் ஆறச் செய்வதற்கு உதவிடக் கூடியவை.
ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் குடலைச் சுத்தப்படுத்தும் வாந்தி மற்றும் பேதிமுறைகள், பட்டினி இருத்தல், உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றிடக்கூடிய உணவு முறைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடிய அட்டைப்பூச்சியை வைத்து கடிக்கச் செய்யும் சிகிச்சை போன்றவை புண்ணை ஆற்றக் கூடிய சிகிச்சைகளாகக் கூறப்படுகின்றன. மேலும், சரக்கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்தி, இத்தி, துளசி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருங்காலிக்கட்டை, ஏழிலைப்பாலைப்பட்டை, புங்கம்பட்டை, வெட்பாலைப்பட்டை போன்றவற்றால் தயாரிக்கப்படும் கஷாய நீரைக் கொண்டு புண்ணைக் கழுவிவிடுதல், இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தைலங்களால் புண் மீது பூசுதல் போன்றவை நல்ல குணம் தரக்கூடிய சிகிச்சை முறைகளாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...