வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது, நமக்கு, இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள். நாம் உடனே 'இந்தி மாலும் நை' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம். அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். தெரிகிறது. நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். ஆனாலும் நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். "நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?'' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச் செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்க்கு) ஏன் இந்தப் பற்று இல்லை?
நம்முடைய காட்சி ஊடகங்களில், இசை, நாட்டியம், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சியின் வருணனையாளர்- அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள் - இப்படி யாராக இருப்பினும் தமிழில் பேசுகிறார்களா? தமிழில் தொடங்குவார்கள். பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால்கூட ஏற்றுக் கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாக உடையவரும் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டுமென்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள். இருப்பதைக் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம். 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் கேட்டிருக்கிறோம். 'டடடா டடடா டட்டாடடா' பாட்டும் நாம் அறிவோம். 'மேலே பறக்கும் ராக்கெட்டு, மின்னல் பூச்சி ஜாக்கெட்டு' என்றும் நம் காதுகளில் தேள் கொட்டியுள்ளது. இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது:
'யூ வான்ட் டு சீல்மை கிஸ்
பாய் யூ கான்ட் டச் திஸ்
எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக்
சூப்பர் சானிக்
சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்'
இப்படிப் போகிறது தமிழ்ப் படப் பாட்டு. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?
'பூஜ்ஜியம் என்னோடு
பூவாசம் இன்றோடு
மின்மினிகள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு'
ஏனிந்தக் கலப்படம்? இது ஒரு சோறுதான். பானைச் சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால்தான் மானியம் கிட்டும் என்றார்கள். தமிழ்ப் பத்திரிகைகள் பல தம் தமிழ்ப் பெயரோடு ஆங்கிலத்தையும் இணைத்துக் கொள்வது ஏன்?
'ஃகாபி வித்...', 'இன்டர்வியூ', 'ஹிட்சாங்ஸ்', 'ஓல்டு ஈஸ் கோல்டு' இப்படிப் பல தலைப்புகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவை தவிர பிறமொழித் தொடர்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, 'கன்னாபின்னா' என்று தமிழில் வந்து கொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? தமிழன்... தமிழன் என்று பேசுவது வீண் பேச்சு. தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும், சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! 'நாம் தமிழர்' என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?
இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழிவெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள்; சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை - உலக நாடுகளில் - இல்லை, இல்லவே இல்லை.
நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது; மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தானும் கெட்டுப் போகிறதே தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளதே!
காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகின்ற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது.
'ஓகே, ஓகே', 'வெரி நைஸ்', 'ஒன்டர்புல்', 'சூப்பர்', 'தாங்யூ சோ மச்', 'ஃபென்டாஸ்டிக் ', 'ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன. உலகம் போகிற போக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?
(தமிழ் வளரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திராவிடத்துக்கும், தமிழ் தேசியத்துக்குமே போட்டி! - சீமான் பேச்சு

இது தெரியுமா? தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்வது ஏன்?

இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

