ஆணுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறுவதற்கு கல்வி ஒரு கருவியாக இருந்து வருகிறது. எனினும், கல்வி அறிவைப் பெறாத கிராமப்புற பெண்களும் சிறந்த தொழில்முனைவோராக இன்றைக்குப் பல்வேறு தளங்களில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்களுக்கு ஊன்றுகோலாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்து அதன் மூலம் சுயதொழில் தொடங்கியது மட்டுமின்றி பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகவும், ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் இருந்து வருகிறார் மதுரை சாமநத்தம் கிராமம், வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த எஸ்.சுசீலா.
வாழ்க்கையில் தனக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டதற்கும், முன்னேறியதற்கும் மகளிர் குழு ஓர் ஆதாரமாக இருந்ததாகக் கூறுகிறார் இவர். மதுரையில் நடைபெற்ற கைவினைப் பொருள் கண்காட்சியில் சணல் பை விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவரிடம் பேசினோம்.
""நான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனது கணவர் லாரி டிரைவராக உள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் நடைபெற்றபோது எனது குடும்ப வருமானத்திற்காக பெண்களுக்கான ஆடைகளைத் தைத்துக் கொடுத்து வருமானம் ஈட்டி வந்தேன்.
மதுரை முறைசாரா மையத்தினர் 1992-ம் ஆண்டு எங்கள் பகுதியைத் தத்தெடுத்து சமூகப் பணிகளை மேற்கொண்டபோது, நான் அப்பகுதியின் தலைவியாக நியமிக்கப்பட்டேன்.
நானும் சில பெண்களும் சேர்ந்து 1997-ல் "துளசி மகளிர் குழு'வைத் தொடங்கினோம். முதல்முறையாக ரூ.10 ஆயிரம் கடன் தந்தனர். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தியதால் 2001-ம் ஆண்டில் மகளிர் திட்டம் மூலம் ரூ.10 ஆயிரம் தள்ளுபடியுடன் ரூ.25 ஆயிரம் கடன் தந்தனர். அதன் மூலம் சிறிய தொழில் தொடங்கினோம்.
இந்நிலையில், மகளிர் திட்டம் மூலம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற தொழில்முனைவோர் பயிற்சியில் நான் கலந்துகொண்டு, சணல் பைகள் தயாரிப்பது, நகைப் பெட்டி தயாரிப்பது, போட்டோ ஃபிரேம் செய்வது தொடர்பாக பயிற்சி பெற்றேன்.
இதைத் தொடர்ந்து எங்கள் மகளிர் குழுவினர் மூலம் சணல் பைகள் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம். எங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் பாசி மாலை கோத்து என்னிடம் அளிப்பர். அதை நான் நேரடியாக கடைகளுக்குச் சென்று விற்பேன்.
சணல் மூலம் தயாரிக்கப்பட்ட டிûஸன் பேக்குகளை வெளியூர் கடைகளில் விற்று வந்த நிலையில், நாகப்பட்டினத்தில் என்னிடம் சரக்கு வாங்கியிருந்தவர்களில் சிலரது கடைகள் சுனாமி பேரலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அவர்களால் பணத்தைத் தர முடியவில்லை. இதனால், எனக்கு ரூ.80 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. அக்கடனை அடைக்க முடியாமல் நான் மிகுந்த சிரமப்பட்டேன்.
அப்போது, எனது மகளிர் குழுவில் உள்ள மற்றவர்கள் அதற்கு உதவி செய்தனர். இதன் பிறகு தொடர்ந்து ஸ்டால்கள் நடத்தியதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு எனது கடனை அடைத்தேன்.
2003-ம் ஆண்டில் முதன்முதலாக மகளிர் திட்டம் மூலம் எனக்கு கைவினைப் பொருள் கண்காட்சியில் ஸ்டால் போடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு, கேவிஐசி, சிப்போ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகளில் தொடர்ந்து ஸ்டால் அமைத்து சணல் பை உள்ளிட்ட கைவினைத் தயாரிப்புகளை விற்று வருகிறேன். இதன் மூலம் கணிசமாக வருவாய் கிடைத்து வருகிறது.
நான் மட்டுமின்றி எனது குழுவினரும் அவர்களது ஓய்வு நேரத்தில் சிறிய வேலைகளைச் செய்வதன் மூலம் வருவாய் ஈட்ட முடிகிறது. இந்த வருவாய் மூலம் எனது மகள், மகனுக்குத் திருமணம் நடத்தியிருக்கிறேன்.
இக்கண்காட்சி மூலம் தில்லி, ஹரியானா, ஹைதராபாத், கோவா, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
அமைச்சர்கள், அதிகாரிகள் ஸ்டால்களுக்கு வந்து பாராட்டிச் செல்லும்போது மனத்துக்கு உற்சாகம் கிடைக்கிறது. பலதரப்பு மக்களையும் ஸ்டால்கள் மூலம் சந்திக்கவும், பேசவும் வாய்ப்பு உருவாகிறது. எழுதப் படிக்கத் தெரியாத நான் பல மாநிலங்களுக்கும் சென்று வர முடிகிறது என்றால் அதற்கு மகளிர் குழுதான் அடிப்படைக் காரணம்.
இந்தச் சணல் பைகள் தயாரிப்புக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருப்பது போன்று நம் பகுதியில் இல்லை. இதனால், பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக் கிட்டவில்லை. தமிழக அரசு கைவினை பஜார் போன்ற கண்காட்சிகளை நடத்துவதற்கு அதிக நாள்களை அனுமதித்து வருவதால் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடிகிறது.
எங்களது குழுவில் உள்ள பெண்கள் சிலர் வங்கியில் கடன் பெற்று பலசரக்குக் கடையும் நடத்தி வருகின்றனர். எங்கள் பகுதியில் மகளிர் குழு மூலம் சாராயத்தை ஒழிக்கும் பணியையும் மேற்கொண்டோம். பெண் சிசுக் கொலை தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு நாடகம் மூலம் பிரசாரமும் மேற்கொண்டு வருகிறோம். நான் வசிக்கும் சாமநத்தம் ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினராக, போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறேன்.
சிறந்த மகளிர் குழுவுக்கான மணிமேகலை விருது எங்கள் மகளிர் குழுவுக்குக் கிடைத்துள்ளது. தன்னம்பிக்கை பெண், சிறந்த பெண் விற்பனையாளர், சிறந்த ஒருங்கிணைப்பாளர் ஆகியவற்றுக்கான பாராட்டுச் சான்றுகளும் பெற்றுள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை மகளிர் குழுதான் கிராம மகளிர் முன்னேற்றத்தின் ஆதாரம் என்பேன். கல்வியறிவு இல்லாவிட்டாலும் இக்குழுவில் இணைவதன் மூலம் சமுதாயத்தில் ஒரு தொழில்முனைவோராக வரும் வாய்ப்புக் கிடைக்கும். எங்கள் பகுதியில் ஆரம்பிக்கப்படும் மகளிர் குழுவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மகளிரைச் சேர்க்க மிகவும் ஆர்வம் காட்டுகிறோம்.
ஆனால், மகளிர் குழுவில் இணைவதன் மூலம் கிடைக்கும் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு என்னவோ கிராமப்புற மகளிரிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை'' என்கிறார் சுசீலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - விருச்சிகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


