குறிகள் பற்றித் தொடருவோம்...
எழுதிவரும்போது இடையில் சில பகுதிகளை விட்டுவிட்டு எழுதுவதைக் காட்ட (.....) தொடர் விடுபாட்டுக் குறியிடல் வேண்டும்.
ஒரு சொல் அல்லது பகுதிக்கு விளக்கம் கீழே தரப்பட்டிருந்தால் அச்சொல்லோடு * உடுக்குறி இடல் வேண்டும். ஒரு கருத்தை மீண்டும் எழுதும்போது அல்லது ஒருவர் பெயரே மீண்டும் வரும் போது மேற்படிக் ('') குறியிடல் வேண்டும்.
ஒரு வாக்கியத்தில் அமைந்த சொற்களுக்கு இடையே - விளக்கம் தரும் வகையில் வேறொரு சொல் இடைப்பட வரும்போது இடைப்பிறவரல் குறி (-......-) இடல் வேண்டும்.
(எ-டு) நீ எப்போதும் வெற்றி பெறுவாய் - நேர்மையாக நடந்தால் - என்பதை மறவாதே.
ஒரு சொல்லுக்கு விளக்கம் தர வேறொரு சொல் எழுதப்பட்டால் சிறுகோடு (-) இடப்படுதல் வேண்டும்.
(எ-டு) அந்தக் காட்சி அளவிடற்கரிய வியப்பை - ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
அது அவன் மனதில் பசுமையாக - அழுத்தமாகப் பதிந்துவிட்டது.
அடைப்புக்குள் எழுதப்படும் செய்திகளுக்குப் பிறைக்குறி இட வேண்டும். சில இடங்களில் அடைப்புக் குறிக்கும் மேல் பகர அடைப்பு [ ] வருதலும் உண்டு.
விளிப்பெயர்களில் காற்புள்ளிதான் இட வேண்டும். உணர்ச்சிக்குறிகளைப் போட்டு எழுதுதல் பிழை. இராமா, முருகா, நண்பா, அண்ணா என்பதுபோல் வர வேண்டும். இராமா! முருகா! நண்பா! அண்ணா! என்றெழுதிட வேண்டா.
மாற்றமும் மகிழ்ச்சியும்
நமது செய்தி ஏடுகளில் பல்லாண்டுகளாக எழுதப்பட்ட கருப்பு எனும் சொல் இப்போது கறுப்பு எனச் சரியாக எழுதப்படுகிறது. இயக்குனர் எனும் தவறான சொல்லும் இயக்குநர் என்று சரியாக எழுதப்படுகிறது. தொலைக்காட்சி எழுத்துகளிலும் இம்மாற்றம் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. இன்னும் மேலாக, "உங்களைப் பாதுகாப்பது மிகவும் இடரான வேலையாகிவிடும்'' என்ற வாக்கியத்தைப் பார்த்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
'கஷ்டமான வேலையாகிவிடும்' என்பதுதான் நடைமுறையில் இருந்தது. வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது என்பதைப் பார்த்தபோதும் மகிழ்ச்சியே. பதட்டம் என்றே எழுதிவந்தார்கள். மாற்றம் வரவேற்கத்தக்கது. வன்முறை நிகழ்வுகளால் (சம்பவங்களால்) என்று எழுதியிருப்பின் இன்னும் சிறப்புடைத்தாகும்.
'குழந்தையின்மைக்குக் காரணிகள் என்ன?' ஏதோ ஒரு விளம்பரத்தில் படித்ததாக நினைவு. எவை என்னும் பன்மைச் சொல்லைப் பொதுவாகப் பலரும் மறந்துவிட்டோம். 'விலைவாசி உயர்வுக்குக் காரணங்கள் என்ன?' 'ஊழல் பெருகிவிட்டதன் அடிப்படைகள் என்ன?' என்றே பலகாலும் கேட்க நேர்கிறது. பன்மையில் 'கள்' ஈறு பெற்று வரும்போது எவை எனச் சொல்ல வேண்டும் என்பதை மறக்கலாமா? அடிப்படை என்ன? என்றால் போதுமே. அடிப்படைகள் என்று தேவையின்றிக் 'கள்' விகுதி ஏன்?
ஓர் ஐயமும் விளக்கமும்
செய்தி ஏடுகளில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது என்று எழுதுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஆர்ப்பு என்றால் ஒலித்தல் (ஒலி). ஆட்டம் என்பது ஆடுவது. கறுப்புக் கொடிக்கும் ஒலித்து ஆடுவதற்கும் என்ன தொடர்பு? இவ்வாக்கியம் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றிருந்தால் சரியாயிருக்கும். ஆர்ப்பாட்டம் என்பதும் தொடர் முழக்கம் (கோஷம் போடுதல்) என்பதையே குறிக்கிறது போலும்! எப்படியோ நம்மவர்க்கு இத்தொடர் நன்கு பழகிவிட்டது.
புறமும் புரமும்
நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொன்னால் நன்கறிவோம். கிராமியப் பாடல்கள் என்றும் சொல்வதுண்டு. அண்மையில் ஒரு பாட நூலில் நாட்டுப்புரப் பாடல்கள் என்று அச்சிட்டிருப்பதாக அறிகிறோம். நாட்டுப்புரம் என்பதே சரி என்றும் வாதிடுகிறார்களாம் சிலர். புறம் என்பது தூய தமிழ்ச் சொல்; புறநானூறு நாமறிவோம். புறஞ்சேரி இறுத்த காதை சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நாளில் புறநகர் என்று சொல்லுகிறோமே அதுவே புறஞ்சேரி எனப்பட்டது.
(தமிழ் வளரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இருந்தமிழே உன்னால் இருந்தேன்...
தமிழை உலக அரங்கில் முன்வைக்கும் முயற்சி
அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

ஜீவாவின் சுவாசம் தமிழ்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

