எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிரபலமும் புகழும் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 46

அறையும் இறையும் ஊருணியும் - பிழையற்ற தமிழ் அறியும் முயற்சியாக ஒரு தொடர்...

News image
தமிழ் அறிவோம்- Pandia rajan
Updated On :27 நவம்பர் 2024, 12:51 pm

கவிக்கோ ஞானச்செல்வன்

கதிர்வீச்சு பகுதியில் (19.6.2011) பெங்களூரு நாகராசன் என்பவர் 'வேட்டி' எனும் சொல் பொருளை மறுத்து எழுதியுள்ளார்.

எல்லாத் துணிகளும் தறியில் நீளமாகத்தான் நெய்யப்படுகின்றன என்ற அவரது கருத்தே தவறு. விசைத்தறிகளில், இன்றைய துணி ஆலைகளில் அப்படிச் செய்யப்படலாம். கைத்தறியில் அதுவும் பழங்காலத்தில் நான்கு முழ வேட்டிகள் நான்கை ஒன்றாக நெய்து பின் வெட்டி எடுப்பார்கள். நான்கு கொண்டது ஒரு மடி. புடைவை ஒவ்வொன்றாகத்தான் கைத்தறியில் நெசவு செய்தனர். புடை என்பது பக்கம்; புடைவை உடலின் எல்லாப் பக்கமும் சுற்றிக் கட்டப்படுவது. சிறிதாகத் துண்டித்து எடுத்து துண்டு ஆக்கினர் என்றோம். "வேஷ்ட' வேட்டி என்றாயிற்று எனில் துண்டு எப்படி வந்தது என்று அவர் ஏன் எழுதவில்லை?

ஜவுளி வர்த்தகம் என்பதை அறுவை வணிகம் என்பர் தமிழறிஞர். அறுவை (அறுக்கப்படுதல்) ஜவுளியின் தமிழ்ப் பெயர். வேட்டி, துண்டு, அறுவை எல்லாம் முன்னரே அறிஞர்கள் கண்டு சொல்லியவை. எமது புதிய கருத்துகள் அல்ல.

பிரபலமானவர்களின் முகவரி என்று புத்தகம் வெளியிடுகிறார்கள். பிரபல நடிகர், பிரபல தொழில் மேதை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தப் பிரபலம் தமிழா? இல்லை! பிரபலமானவரை, புகழ்பெற்றவர் என்று சொல்லலாம். மிக உயர்ந்த புகழ் உடையவராயின் "மீப்புகழ்' என்னும் அடைமொழி சேர்த்தல் போதுமானது. (மீ - மேலான)

பிரமுகர் என்ற சொல்லும் நம் பயன்பாட்டில் உள்ளது. தனித் தமிழில் பேசும் இயல்புடையவரும் பிரமுகர் என்றுரைப்பது கேட்டுள்ளோம். பிரமுகர் எனும் சொல்லும் வட சொல்லே. ஓர் உயர்ந்த இடத்தை, மதிப்பை மக்களிடம் பெற்றிருப்பவரையே பிரமுகர் என்போம். மேன்மையர் என்று தனித் தமிழில் சொல்லலாமே! (சில பிரமுகர் மேன்மையர் எனும் சொல்லுக்குப் பொருந்தாதவராய் இருக்கலாம்; இருக்கட்டுமே. நடக்க முடியாத ஒருவர்க்கு நடராசன் என்று பெயர் இல்லையா?)

தமிழில் பெயர்கள் அமைந்த வகை வியப்பூட்டுவதாக இருக்கிறது. அடுதலுக்கு (அடுதல் - சமைத்தல்) உரியது அடுப்பு. பாம்புகள் ஒன்றோடொன்று தழுவிக் கொண்டு அணைத்து இன்புறும் என்பர். அன்புடன் தழுவி வாழ்தல் என்பதை நம் தமிழ் அரவணைத்தல் என்று சுட்டுகிறது (அரவு - பாம்பு).

ஒருவர் உயரத்தில் சரி பாதியாக இருப்பது இடுப்புப் பகுதியாகும். ஆதலின் இடுப்பை அரை என்றனர் (அரைஞாண் - இடுப்புக் கயிறு).

அறுத்தல் எனும் சொல்லிலிருந்து ஆறு எண்ணம் சொல் வந்தது. நிலத்தை அறுத்துக் கொண்டு நீர் ஓடுவது ஆறு எனப்பட்டது. அப்படி ஓடும் ஆறு ஒரு வழியை உண்டாக்கிவிடும். அதனால் ஆறு என்பதற்கு வழி (பாதை) என்ற பொருளும் உண்டு (ஆற்றுப்படை - வழிப்படுத்துதல்).

வீட்டில் பல பகுதிகள் உண்டு. அப்படிப் பகுதிபகுதியாக அறுக்கப்பட்ட (பிரிக்கப்பட்ட காரணத்தால்) அறை என்னும் சொல் வந்தது (சமையலறை, படுக்கையறை).

பெரிய கட்டையைப் பிளப்பதற்கு இடையில் திணித்து அடிக்கப்படுவது ஆப்பு. ஆழ்+பு என்பது ஆப்பு ஆயிற்று.

எல்லாப் பொருளிலும் இடத்திலும் தங்கி (உறைந்து) இருப்பவன் இறைவன் (இறை - தங்குதல்).

உயிருக்கு உடைபோல் அமைந்திருப்பதால் உடம்பு. உள்ளுதலுக்கு இடமாக இருப்பதால் உள்ளம். (உள்ளுதல் - நினைத்தல்). மக்களால் உண்ணப்படும் நீரையுடையது ஊருணி (ஊர் + உணி)

எள்+நெய் - எண்ணெய் ஆயிற்று. இக்காலத்தில் பொருள் மாறி எண்ணெய் பலவகைப் பொதுப் பெயர் ஆகிவிட்டது.

ஏர்த் தொழிலுக்கு (உழவுக்கு) உதவுவது எருது. ஒத்து இருக்கும் வகையில் அமைவது ஒத்திகை (நாடக ஒத்திகை)

கோள் - கொள்ளுதல் என்னும் பொருளது. இதற்கு வலிமை என்றொரு பொருளும் உண்டு. வீட்டில் வளரும் நாய் அறிவோம். கோள் + நாய் - கோணாய் என்பது ஓநாய் என மருகியது; இது காட்டில் இருப்பதாம்.

கடப்பதற்கு அரியது என்னும் பொருளுடையது கடல். சாலையின், வீதியின் கடைசியில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது கடை (விற்பனை அகங்கள்). யானை, கரிய நிறமுடையதாக இருப்பதால் அதற்குக் கரி என்ற பெயர் உண்டு. எல்லாவற்றையும் காணும் இடமாக இருப்பதால் கண் (கண் - இடம்).

(தமிழ் வளரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.