கோடை வாசஸ்தலங்கள்: நீலகிரி எந்நாளும் தேனிலவு
கோடை வந்தவுடன் உதகை நினைவும் வருவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக தேனிலவு செல்லும் நடுத்தர வருவாய்க் குடும்பத்தினருக்கு உதகைதான் சொர்க்கம். பல நாள்களுக்குத் தங்கியிருக்க வசதி இல்லாதபோதும், ஒரு நாளாகி


கோடை வந்தவுடன் உதகை நினைவும் வருவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக தேனிலவு செல்லும் நடுத்தர வருவாய்க் குடும்பத்தினருக்கு உதகைதான் சொர்க்கம். பல நாள்களுக்குத் தங்கியிருக்க வசதி இல்லாதபோதும், ஒரு நாளாகிலும் காலையில் வந்து மாலை வரை சுற்றுப் பார்த்துச் செல்வார்கள்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி, மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் பகுதியில் நீலகிரி மலை அமைந்துள்ளது.
இந்தியாவின் முதல் பல்லுயிர்பெருக்க மண்டலம் நீலகிரியே. பரந்து விரிந்த பசுமையான இயற்கை புல்வெளிகள், அடர்ந்த இயற்கைச் சோலைகள், ஆங்காங்கே தென்படும் சிற்றருவிகள், சலசலத்து ஓடும் ஓடைகள், ஏரிகள், பசும்போர்வை போர்த்தினாற் போல தோற்றமளிக்கும் தேயிலைத் தோட்டங்கள், உள்ளத்தை கவரும் காட்சிமுனைகள், எண்ணற்ற வன உயிரினங்கள், பறவைகள், தலைக்கு மேல் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்கள், அடர்ந்த பனி மூட்டம் இப்படி நீலகிரியின் அழகைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
உதகைக்கு வருவோர், உதகை, குன்னூர், கோத்தகிரி என மூன்று இடங்களையும் பார்ப்பதே வழக்கமாக உள்ளது.
இதில் உதகையில் அனைவரின கவனத்தையும் கவர்வது அரசினர் தாவரவியல் பூங்காவாகும். கடந்த 1897ம் ஆண்டில் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்கா இடம் பெறாத தமிழ்த் திரைப்படங்களே இல்லை எனலாம். ஒரு கனவுக்காட்சிக்கும் வெளிநாடு செல்லும் இன்றைய திரையுலக நடைமுறை ஏற்படாத அக்காலத்தில், தமிழ் திரையுலகம் உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதியில்தான் தங்கள் கனவுக் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கும் வந்தது.
இந்த தாவரவியல் பூங்காவிலுள்ள பரந்த புல்வெளியும், எண்ணற்ற மலர் ரகங்களும், மரங்களும் இயற்கையின் படைப்பை பிரமிப்புடன் வெளிப்படுத்துபவை. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இப்பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தின் 3வது வாரத்தில் நடைபெறும் மலர்க் கண்காட்சி உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20ம், சிறியவர்களுக்கு ரூ.10ம் ஆகும்.
இதையடுத்து அரசினர் ரோஜா பூங்கா அனைவரையும் கவரும் அம்சமாகும். இந்தியாவிலேயே அதிக ரோஜா ரகங்களைக் கொண்டுள்ள இந்தப் பூங்காவில் தற்போது சுமார் 4,000 வகை ரோஜா மலர்கள் உள்ளன. இதன் காரணமாகவே சர்வதேச ரோஜா சங்கத்தால் இப்பூங்காவுக்கு கார்டன் ஆப் எக்சலென்ஸ் என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. இப்பூங்காவும் நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இங்கும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவுக்கட்டணமும் தாவரவியல் பூங்காவைப் போலவே வசூலிக்கப்படுகிறது.
இவை இரண்டையடுத்து, உதகையிலுள்ள படகு இல்லம் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 1824ம் ஆண்டில் ஜான் சலிவனால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை ஏரியில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படகுச் சவாரி செய்யலாம். தேனிலவுத் தம்பதிகளுக்கென தனியாக ஒரு படகு இல்லமும் உள்ளது.
அதேபோல, நீலகிரியின் உயரமான சிகரம் தொட்டபெட்டா. உதகையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,623 மீட்டர் உயரத்தில் இருக்கும் தொட்டபெட்டாவில் உள்ள காட்சிமேடையில் நின்று பார்த்தால், உதகை நகரின் அழகையும், தொலைதூரத்திலுள்ள பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம். மாலையில் சூரியன் மறையும் அழகை இங்கிருந்து பார்க்கும் சுகமே தனி.
இதைத் தவிர, உதகையில் மரங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள மரங்களின் பூங்கா, படகு இல்லத்தின் மறுகரையில் அமைந் துள்ளது. இங்கு அனுமதி இலவசமாகும்.
உதகையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அவலாஞ்சி எமரால்டு ஏரியின் கரையில் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் பறவைகள் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிரவுட் எனப்படும் மீன் பிரசித்தி பெற்றதாகும். 100 விழுக்காடு தூய்மையான தண்ணீரில் மட்டுமே வாழக்கூடிய டிரவுட் மீன்கள் இங்கு மட்டுமே உள்ளன.
உதகையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பைக்காரா. இங்குள்ள படகு இல்லமும், வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல விழும் நீர்வீழ்ச்சியும் பல்வேறு திரைப்படங்களில் நாம் பார்த்தவையே. அதேபோல,
உதகையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்குருத்தி தேசிய பூங்காவும், முக்குருத்தி மலைச்சிகரமும் அற்புதமான இடங்கள். தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு இங்கு மட்டுமே உள்ளன. மலை ஏறும் சாகசக்காரர்களுக்கு முக்குருத்தி சிகரத்தில் ஏறுவது சவாலானது. இந்த மலைச்சிகரத்திலிருந்து 360 டிகிரியிலும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
அதேபோல, உதகையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அப்பர்பவானி. இங்கிருந்து அமைதிப் பள்ளத்தாக்கிற்குச் செல்லலாம். அடர்ந்த இயற்கை சோலைகளும், வன உயிரினங்களும் நிறைந்திருக்கும் அமைதி தவழும் இப்பகுதி இயற்கை ஆர்வலர்களைச் சுண்டி இழுக்கும் என்பது உறுதி.
உதகையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள குன்னூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சிம்ஸ் பார்க். இங்கு அமைந்துள்ள அபூர்வ மர வகைகள் பிரமிப்பூட்டுபவை. இங்குள்ள ருத்திராட்ச மரமும், குயின்ஸ்லாந்தின் பைன் மரமும் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. உதகையிலிருந்து மைசூர் செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 13வது கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கல்லட்டி நீர்வீழ்ச்சி. உயர்ந்த மலைச்சிகரங்களுக்கு மத்தியில் ஓடிவரும் தண்ணீரின் அழகைக் காண்பதே அலாதியானது. அத்துடன் குன்னூரிலிருந்து 7வது கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சியும், குந்தா சாலையில் அமைந்துள்ள காட்டேரி நீர்வீழ்ச்சியும், கோத்தகிரியிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சியும், முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் கூடலூரிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மாயார் நீர்வீழ்ச்சியும் மலை ராணியின் மகுடங்களில் சூட்டப்பட்டுள்ள வைரக்கற்களாகும்.
கோத்தகிரியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கொடநாடு காட்சிமுனை. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடத்தை இங்கிருந்தே பார்க்கலாம். இங்கிருந்து தெரியும் தெங்குமரஹாடா கிராமம் அன்னக்கிளி திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இப்போதும் பிடிக்கும். இங்கிருந்து தெரியும் இயற்கை காட்சிகளும், ரங்கசாமி சிகரமும் பிரமிப்பானவை. இச்சிகரத்தில்தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய ரக டகோடோ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது .
குன்னூரிலிருந்து 12வது கி.மீட்டரில் அமைந்துள்ள டால்பின் நோஸ் காட்சி முனை டால்பினின் மூக்கைப்போல பாறைகளைக் கொண்டிருக்கிறது. இதுவும், குன்னூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள லேம்ப்ஸ் ராக் காட்சி முனையும் குன்னூரின் இயற்கை பிரதேசங்களாகும்.
நீலகிரிக்கு சுற்றுலா என்று வந்து விட்டால் மலை ரயிலில் பயணம் செய்யாமல் இருக்க முடியுமா யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்துகுன்னூருக்கு வருவதற்குள் 20க்கும் மேற்பட்ட குகைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட பாலங்களையும் கடந்த ஊர்ந்து வருவது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் இன்னமும் கவரும் அம்சங்களாகும். இதன் தண்டவாளங்களுக்கு நடுவிலுள்ள பல் சக்கர அமைப்பு டார்ஜிலிங் மலைரயிலில் மட்டுமே உள்ளது.
கோடை சீசன் என்றாலே ஏப்ரல், மே மாதங்களில் உதகைக்கு செல்லலாம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால், இப்போது நீலகிரியில் ஆண்டு முழுதுமே சீசன் என்றாகிவிட்டது. அதனால் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகவே திகழ்கிறது நீலகிரி.
கோவை வந்துவிட்டால் போதும். அங்கிருந்து நிறைய பேருந்துகள், டாக்ஸிகள் உதகை குன்னூர் கோத்தகிரிக்கு செல்கின்றனர். கோடை விடுமுறைக் காலங்களில் தங்கும் விடுதிகளின் கட்டணம் அதிகமாக இருந்தாலும், சாதாரண நாள்களில் கட்டணமும் சாதாரணமாக மாறிவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...