திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பாரம்பரியம்: சப்பாத்தியிலும் சர்க்கரைச் சத்து!

நவீனத் தொழில்நுட்பமும், அறிவியலும் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் இந்த 21-ம் நூற்றாண்டில் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிலும் மனிதர்களிடையே வேகமான மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பண்டைய உணவு முறை

Updated On :26 செப்டம்பர் 2012, 12:46 pm

நவீனத் தொழில்நுட்பமும், அறிவியலும் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் இந்த 21-ம் நூற்றாண்டில் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிலும் மனிதர்களிடையே வேகமான மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பண்டைய உணவு முறைகள் மனிதனின் உடல் நலத்துக்கும் உளநலத்துக்கும் பயன்தரும் வகையில் அமைந்ததுபோய், நோய்களின் இருப்பிடமாக மாற்றும் பல்வேறு பாதகங்களை தற்கால உணவு வகைகள் செய்கின்றனவே என்று கூக்குரலிடும் அளவுக்கு அவற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற சூழலிலும், தமிழரின் பழம்பெரும் உணவு முறைகளையும், உணவுகளையும் மீட்டெடுக்கும் வகையில் ஆங்காங்கே சிலர் சத்தமில்லாமல் களப் பணியாற்றி வரத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் மதுரையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.

மதுரை பாண்டியன் ஹோட்டல் எதிர்புறம் செல்லும் ரேஸ்கோர்ஸ் சாலையில் பாரம்பரிய தமிழர் உணவு தானியங்களைச் சமைத்து வழங்கும் "குறுந்தானியகம்' நடத்திவரும் வேளாண்மைப் பட்டதாரியான இவர், நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

"எனது பூர்வீகம் கரூர் மாவட்டமாகும். வேளாண்மைக் கல்லூரியில் படிப்பதற்காக 1981-ம் ஆண்டில் மதுரைக்கு வந்தேன். அப்போது, மதுரை கீழ்ப்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் உணவு சாப்பிடச் செல்வது வழக்கம். அங்கு, மதுரை மாவட்டத்தின் சுற்றுப்புறக் கிராமத்தினர் தானியங்களையும், பழங்களையும் மொத்த வியாபாரிகளிடம் விற்க வருவதுண்டு. விடிய விடிய, இந்த வியாபாரம் நடைபெறும்.

அங்கு வரும் கிராமவாசிகள் பலரும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதை அறிந்தேன். அதற்குக் காரணம், கிராமப்புற மக்கள் அக்காலத்தில் அரிசி சோற்றைவிட கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய வகை உணவுகளையே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாதம், இட்லி, தோசை உள்ளிட்ட பதார்த்தங்களை அதிகம் உட்கொள்ளத் தொடங்கிவிட்டோம். இதனால், இன்றைக்கு உலகளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்கன் டயாபடிக் அசோசியேஷன் ஆய்வின்படி, உலக இனங்களிலேயே இந்தியர்களிடம்தான் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. பொறித்த உணவுகள், சப்பாத்தி ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.

சப்பாத்தி தயாரிக்கப் பயன்படும் கோதுமையில் 3 சதவீதம் நார்ச்சத்துதான் உள்ளது. 76 சதவீதம் சர்க்கரை சத்து உண்டு. அரிசியில் சர்க்கரைச் சத்து 78 சதவீதம் உள்ளது. அதாவது 2 சதவீதம் மட்டுமே கோதுமையைவிட அரிசியில் சர்க்கரைச் சத்து கூடுதலாக உள்ளது.

ஆனால், குறுந்தானியமான வரகு அரசியில் 65 சதவீதம்தான் சர்க்கரை சத்து உள்ளது. 13 சதவீதம் அரிசியை விட மிகக் குறைந்த அளவு சர்க்கரை சத்து வரகு அரிசியில் உள்ளது. ஆனால், நம் பக்கத்தில் விளையும் வரகு அரிசிக்கு நாம் தகுந்த முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் கவலை தரும் விஷயமாகும்.

எனக்கு குறுந்தானியத்தின் மீது இருந்த பற்றால், அதன் பலன் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண்மைப் பட்டம் பெற்று அரசு வேலைக்கோ, தனியார் வேலைக்கோ செல்ல வேலைக்குச் செல்லவிரும்பாமல், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, இரும்புச் சோளம், நாட்டுச் சோளம், கம்பு, கேப்பை ஆகிய குறுந்தானிய வகைகளைப் பயன்படுத்தி பல்வேறு பதார்த்தங்கள் செய்து நானும், எனது மனைவி ராணியும் விற்கத் தொடங்கினோம்.

மேலும், ஆங்கில நாளிதழ்களில் குறுந்தானிய உணவை வீடுகளுக்கே சென்று "டோர் டெலிவரி' செய்வதாக விளம்பரம் கொடுத்தோம். இதற்கு மருத்துவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. வாரத்துக்கு ரூ.100 மட்டுமே வசூலித்துக்கொண்டு காலை உணவாக வரகு அரிசி சாதம், வரகு அரிசி அடை, கேப்படை ரொட்டி, திணை அடை என பல்வேறு குறுந்தானிய உணவுகளை தயாரித்து அளித்தோம். ஆரம்பத்தில் 30 மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்தோம். அவர்களுக்கு எங்களது உணவு வகைகள் பிடித்துப் போகவே அவர்களது நண்பர்கள், உறவினர்களைப் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, 1991-ம் ஆண்டில் மதுரை மீனாட்சிபுரத்தில் "நோர்வெல்' எனும் பெயரில் முழு நேர குறுந்தானிய உணவகத்தை ஆரம்பித்தேன். நல்ல விற்பனையும், வருவாயும் கிடைத்தது. இந்த நிலையில், மதுரை சமூக அறிவியல் கல்லூரி நிர்வாகி கேப்டன் டி.வி.பி.ராஜா அளித்த இட உதவி மூலம் தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் இந்த குறுந்தானியகத்தை நடத்தி வருகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குறுந்தானிய உணவுகளைத் தயாரித்து வழங்குகிறோம்.

காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கடை திறந்திருக்கும். கேழ்வரகு தோசை, தேன்திணை லட்டு, முடக்காத்தான் தோசை, வரகு அரிசி வெண்பொங்கல்,

வரகு அரிசி வெள்ளை அப்பம், செட்டிநாட்டு உணவு வகைகள், கேப்பைப் புட்டு, பிரண்டை குழம்பு, பிரண்டை சட்னி, சீரகச் சோறு, காய்கறி சாதம்,

திரிகடுகம் காப்பி என 40-க்கும் மேற்பட்ட குறுந்தானிய உணவு வகைகளை

வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்து தருகிறோம்.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில்புரிவோர், கல்லூரி மாணவர்கள் என வாடிக்கையாளர்களும் அதிகளவில் வருகின்றனர். வெளிமாவட்டங்களில் குறுந்தானிய உணவு வகைகளை விரும்புவோரிடமிருந்து அதிகளவில் விசாரணைகள் எனக்கு வருவதால் சென்னை உள்பட தமிழகத்தில் 300 இடங்களில் இந்த உணவு வகைகள் கிடைப்பதற்கான ஏஜென்டுகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

இன்றைக்கு நாம் டீ, காபிக்கு தரும் முக்கியத்துவத்தை கூட நமது பாரம்பரிய உணவு முறைகளுக்குத் தருவதில்லை. அதை வெறுப்பாகவும் பார்க்கிறோம். அதுதான் வேதனையாக உள்ளது. ஒரு ரூபாய்க்கு இஞ்சி வாங்கி அதை நீரில் தட்டிப் போட்டு 4 பேர் குடிக்கலாம். இதன்மூலம் உடலில் கொழுப்புச் சத்து கரைவதுடன், வாயுத் தொல்லையும் வராது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இன்றைக்கும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆரம்பப் பள்ளிகள் அளவிலேகூட மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுடன் அந்நாட்டின் பாரம்பரிய உணவு முறைகள் கற்றுத் தரப்படுகின்றன. ஆனால், நாமோ அமெரிக்க, ஐரோப்பிய உணவு முறைகளை விரும்பிச் சாப்பிடுகிறோம். அவர்கள்கூட நம்நாட்டு வரகையும், சாமையையும் கொண்டு பல்வேறு சத்தான உணவைத் தயாரித்து உண்கின்றனர். நாமோ அவர்கள் ஒதுக்கியதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும் என்பதுதான் என் ஆசை.

எனக்கு அனிமேஷன் தொழில்நுட்பம் தெரியும். இதனால் அனிமேஷன் மூலம் குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியம் மூலம் குறுந்தானியத்தை எடுத்துச் சொல்வது குறித்து திட்டமிட்டு வருகிறேன்'' என்கிறார் குறுந்தானிய ஆர்வலரான கோபாலகிருஷ்ணன்.

படங்கள்: ஆர்.சிவக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.