இது புதுசு: கட்டிக் கரும்பை...வெட்டிக் குவிக்க!
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் இப்போது பல்வேறு காரணங்களால் குறைந்து வருகின்றன. விவசாயக் கூலி வேலை செய்பவர்கள், அருகிலுள்ள நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுவிடுகிறார்கள். இதனால் விவசாய வேலைகளுக்கு ஆட


கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் இப்போது பல்வேறு காரணங்களால் குறைந்து வருகின்றன. விவசாயக் கூலி வேலை செய்பவர்கள், அருகிலுள்ள நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுவிடுகிறார்கள். இதனால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி விடுகிறது.
விவசாயத்தையே நம்பியிருக்கும் விவசாயிகள் என்ன செய்வார்கள்? அதிலும் கரும்பு, நெல் போன்றவற்றை உரிய காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். காலம் தாழ்த்தினால் பலனில்லை. வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கரும்பை அறுவடை செய்வதற்கு ஒரு புதிய இயந்திரம் வந்திருக்கிறது. ஒரு மணி நேரத்தில் 25 டன் கரும்பை அடியோடு வெட்டி, தோகை தனியாக கரும்பு தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடுகிறது. இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் போல.
இந்த இயந்திரத்தை விநியோகம் செய்யும் கோவையைச் சேர்ந்த எல்சிடி அக்ரோ மெஷின்ஸ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதன் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அனந்தசயனத்தைச் சந்தித்துப் பேசினோம்.
""விவசாயத் தொழிலுக்கு வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள இக்காலத்தில், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் சந்தித்து வரும் பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. பயிரிட்ட கரும்பை உரிய நேரத்தில் அறுவடை செய்து ஆலைகளுக்கு அனுப்பாவிட்டால், பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன், சர்க்கரை உற்பத்தியும் குறைய நேரிடும். இப்பிரச்னையைக் கருத்தில் கொண்டு சீனாவின் ஹான்சன் கம்பெனியுடன் நாங்கள் கைகோர்த்து இந்த கரும்பு அறுவடை இயந்திரத்தை தயாரித்து வாங்கியுள்ளோம்.
கடந்த பல ஆண்டுகளாக நான் ஹான்சன் கம்பெனிக்கு நேரடியாகச் சென்று பல மாடல்களில் கரும்பு அறுவடை இயந்திரத்தை உருவாக்க ஐடியா கொடுத்தேன். துவக்கத்தில் 80 ஹெச்பி, 90 ஹெச்பி, 180 ஹெச்பி, 215 ஹெச்பி என்று பல மாடல்களில் இந்த இயத்திரத்தை வடிவமைத்துத் தந்தது ஹான்சன் கம்பெனி. அவை எதுவுமே எனக்கு திருப்தியைத் தரவில்லை. இறுதியாக நம் இந்திய சூழ்நிலைக்கு ஏற்றபடி 260 ஹெச்பி திறன் கொண்ட இந்த கரும்பு அறுவடை இயந்திரத்தை உருவாக்கித் தந்தார்கள். இதில் எனக்கு முழு திருப்தி ஏற்படவே, இந்த இயந்திரத்தை அவர்களைச் செய்து தரச் சொல்லி இறக்குமதி செய்தேன். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இதற்கான வெள்ளோட்டத்தை நடத்தினோம்.
இயந்திரத்தின் செயல்பாடுகளை நேரடியாகப் பார்த்த சர்க்கரை ஆலைகளும், கரும்பு விவசாயிகளும் எங்கள் முயற்சியை பெரிதும் பாராட்டினர். இப்போது ஆர்டர்கள் குவிந்து வருகின்றன...'' என்னும் அனந்தசயனம், விவசாயம் தொடர்பான கருவிகள், இயந்திரங்கள் தயாரிப்பில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.
1914-ம் ஆண்டு முதல் இவரது தாத்தா வி.கிருஷ்ணசாமி நாயுடு, தந்தையார் கே.ராமசாமி நாயுடு போன்றோர் விவசாயத்துக்குத் தேவையான கதிர் அடிக்கும் கருவி, மஞ்சள் பாலீஷ் செய்யும் கருவி, சோளம் அடிக்கும் கருவி, நிலக்கடலையிலிருந்து ஓட்டைப் பிரித்தெடுக்கும் கருவி, தோட்டத் துறைக்கான கருவிகள் போன்ற பலவிதமான விவசாயக் கருவிகளின் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து அனந்தசயனம் இத் தொழிற்சாலையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, நவீன காலத்துக்கேற்ப விவசாயக் கருவிகளைத் தயாரித்தளித்து வருகிறார்.
கரும்பு அறுவடைக்கென தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய இயந்திரத்துக்கு "எல்சிடி-ஹெச்எஸ்இசட்-2600' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் விலை ரூ.1.6 கோடி. விற்பனைக்குப் பிறகு சிறந்த சேவையை அளிக்க நாடு முழுவதிலும் விநியோகஸ்தர்களையும் நியமிக்க உள்ளது.
இரண்டு பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ள கரும்பு அறுவடை இயந்திரத்தை வயலுக்குள் ஓட்டிச் சென்றவுடன், இயந்திரத்தின் முன் பகுதி, அறுவடைக்குத் தயாராகியுள்ள கரும்புப் பயிரை மேய்ந்து பயிரை அழகாக வெட்டி எடுக்கிறது. பின்னர் இந்திரத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள "புளோயர்', பச்சை மற்றும் உலர்ந்த தோகைகளை தனியாகப் பிரித்தெடுத்து சுத்தப்படுத்தி, தூய்மையான கரும்பை இயந்திரத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள "கேன் கார்டுக்குள்' தூக்கி வீசுகிறது. ஒரே சீராக, வெகு நேர்த்தியாக நடைபெறும் இப் பணியைப் பார்ப்பதே சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஒரு மணி நேரத்தில் 25 டன் கரும்பை, தோகை நீக்கி, சுத்தப்படுத்தி முழுக் கரும்பாக வெட்டிக் கொடுக்கும் திறன் கொண்டது இந்த இயந்திரம்.
""இதுவரை கரும்பு வயல்களில் உபயோகிக்கப்பட்டு வந்த இயந்திரங்களைப் பார்த்திருக்கிறேன். அவை கரும்பை முழுவதுமாக சுத்தப்படுத்தித் தராமல், இரண்டு துண்டுகளாக வெட்டி சுத்தப்படுத்தித் தரும். இப்படி வெட்டிய கரும்பை 6 மணி நேரத்துக்குள் ஆலைக்குக் கொண்டு செல்லாவிட்டால் கஹன்ஸ்ரீர்ய்ர்ள்ஸ்ரீர்ஸ்ரீ என்ற பாக்டீரியா தாக்கிவிடும். அதிலிருந்து கிடைக்கும் சாறு, சர்க்கரையாக உருவாகாது. இதனால் சர்க்கரை உற்பத்தியும் கணிசமாகக் குறையும். ஆனால் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த இயந்திரத்தின் மூலம் நிலத்தடி மட்டத்திலிருந்தே முழுக் கரும்பையும் வெட்டியெடுத்து சுத்தப்படுத்தி சர்க்கரை ஆலைகளுக்குத் தேவையான பக்குவத்தில் கரும்பை தயார்படுத்திக் கொடுக்க முடிகிறது. முழு கரும்பையும் வெட்டும் இயந்திரம் உலகத்திலேயே இது மட்டுமே'' என்று விவரிக்கிறார் அனந்தசயனம்.
டீசல் மூலம் இயக்கும் இந்த இயத்திரத்தைக் கொண்டு ஒரு சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பைக்கூட வெட்ட முடியுமாம். சாதாரண டிராக்டர் இயந்திரத்தைப்போல இதை வயலுக்குள் ஓட்டிச் செல்வது எளிது. பவர் ஸ்டீயரிங், ஹைட்ராலிக் ஆடோமாட்டிக் கியர் பாக்ஸ், ஏசி கேபின் போன்ற வசதிகள் இருப்பதால் இதை இயக்குவதும் வெகு சுலபம். கரும்பு அறுவடை இயந்திரத்தின் முன்பகுதியை இயக்க ஒரு மணி நேரத்துக்கு 35 லிட்டர் டீசலும், கேன் கார்ட்டை இயக்க ஒரு மணி நேரத்துக்கு 5 லிட்டர் டீசலும் தேவை. எப்படிப் பார்த்தாலும், தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூலி, சம்பளத்தைவிட இதற்காகும் செலவு குறைவுதான். தவிர, நேரமும் மிச்சமாகும்'' என்கிறார் அனந்தசயனம்.
கரும்பு அறுவடை இயந்திரத்தின் செயல்பாடுகளை நேரடியாகப் பார்த்த தனியார் சர்க்கரை ஆலைகள் பலவும், இந்த இயந்திரம் வேண்டி ஆர்டர் கொடுத்துள்ளன.
ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தியில் தொய்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளுக்கும், விவசாயிகளுக்கும் இது ஓர் இனிக்கும் செய்தி என்றால் அது மிகையாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...