கண்காட்சி: அரிய ஆடைகள்... அசையும் சிற்பங்கள்!
கோவை அவிநாசி சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அருகே அமைந்திருக்கும் கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் கலை மையம் -அனைவரும் கண்டு வியக்கத்தக்க புராதன, கலைப் படைப்புகளின் பொக்கிஷம். பிரபல ஜவுளித்


கோவை அவிநாசி சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அருகே அமைந்திருக்கும் கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் கலை மையம் -அனைவரும் கண்டு வியக்கத்தக்க புராதன, கலைப் படைப்புகளின் பொக்கிஷம்.
பிரபல ஜவுளித் துறை விஞ்ஞானியும், பத்மபூஷன் விருது பெற்றவருமான காலஞ்சென்ற கஸ்தூரி சீனிவாசனால் 1988-ல் ஆரம்பிக்கப்பட்டது, இந்தக் கலை மையம். ஓவியம், நாடகம், சிற்பக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கஸ்தூரி சீனிவாசன், ஜவுளித் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். இவரது மனைவி பார்பரா, மிகச் சிறந்த ஓவியர். கணவரைப் போலவே கலைகளின் மீது காதல் கொண்டவர். தம்பதிகள் இருவரும் உலகம் முழுவதிலும் தாங்கள் கண்டு வியந்த கலையம்சங்களை இந்தியர்களும் கண்டு ரசிக்க விரும்பி இந்தக் கலை மையத்தை கோவையில் துவக்கினர்.
ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்து கிடக்கும் இந்தக் கலை மையம், கலைக்கூடம் (ஆர்ட் கேலரி), ஜவுளி காட்சியகம் மற்றும் கலையரங்கம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
இதன் பிரதான நுழைவாயிலுக்கு வலதுபுறம் கலைக்கூடமும், இடதுபுறம் ஜவுளிக் காட்சியகமும் உள்ளன.
ஜவுளித் துறையின் பண்டைய வரலாறு, கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள், சமீபத்திய வளர்ச்சி என்று பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது ஜவுளிக் காட்சியகம். பண்டைய எகிப்து, மொஹஞ்சதாரோவில் பயன்படுத்தப்பட்ட நூற்புக் கருவிகள், நெசவு முறைகள் போன்றவை வரைபடங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது. கி.பி.1530-ம் ஆண்டைச் சேர்ந்த சாக்ஸனே நூற்புச் சக்கரத்தின் மாதிரி வடிவமும் இங்குள்ளது.
கோவையில் முதன்முதலில் அமைந்த நூற்பு ஆலையின் சட்ட திட்டமும், சமீபத்திய நவீன நூல் நூற்பு முறைகளின் மாதிரிகளும் தனித் தனி அறைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நைஜீரியா குகைகளில் கிடைத்த 1000 வருடத்திய துணிகள், விதவிதமான தக்ளிகள், ராட்டைகள், பஞ்சு அரவை முறை, ஐரோப்பிய நாடுகளில் நூற்பு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், காலால் இயக்கும் நூற்பு இயந்திரத்தின் மாதிரி, கம்பளி நூற்பு முறை, ஜீன்ஸ் துணிகளில் பயன்படுத்தப்படும் இன்டிகோ (கருநீல) சாயம் தயாரிக்கும் கருவிகள் என்று ஜவுளித் துறையின் பல அடுக்குகளைக் கண்முன் விவரிக்கிறது காட்சியகம்.
மொஹஞ்சதாரோ காலத்திலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை ஆடை, அணிகலன்களின் வரலாறுகள், பலதரப்பட்ட துணிகளின் மாதிரிகள், வாழைத்தண்டு, கற்றாழை இழை, அன்னாசிப் பழம், தாழம்பூ மட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட துணிகள், ஷாஜகான், ஜஹாங்கீர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகள், அணிகலன்கள் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானியர்களின் திருமண ஆடை, கண்கவரும் வண்ணத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பாகங்களில் பயன்படுத்தப்படும் கைத்தறிகளின் மாதிரிகளும் இங்குள்ளன.
அடுத்து நாம் நுழைந்தது -கலைக்கூடத்துக்குள். பாரம்பரிய ஓவியங்கள், சிற்பங்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பாக உள்ளது கலைக்கூடம்.
கண்களில் கருணைப் பொங்கக் காட்சியளிக்கும் சிவகாமி அம்மனின் திருவுருவச் சிலை, ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜர், குப்தர் காலத்திய சுட்ட மண் சிற்பங்கள், காந்தாரக் கலையை வெளிப்படுத்தும் கல் உருவங்கள், புத்தரின் மரச் சிற்பம், பழங்கால தஞ்சாவூர் ஓவியங்களின் கலை வண்ணப் படைப்புகள் என்று பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றன. இவற்றில் சில, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை.
சீன நாட்டின் பசுமை நிறம் கொண்ட ஜேடு சிற்பம், தாய்லாந்து, நேபாளம், பர்மா, நைஜீரியா, சீனா, ஜப்பான், எகிப்து நாட்டின் சிலைகள் மற்றும் கலைப் படைப்புகளும் இங்குள்ளன.
ஐரோப்பிய ஓவியங்கள், கலைப்படைப்புகளின் பிரதிகள் தனி அறைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சியின் "பாறைகளில் கன்னிகை' ஓவியமும், பிகாசோவின் "ஓல்காவின் படமும்' எளிதில் காணக் கிடைக்காத கலை அம்சங்கள்.
ஆங்கிலேய ஓவியக் கலைஞர்களின் பார்வையில் இந்தியா எப்படியிருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஓவியங்கள் நிறைந்த அறைக்குள் நுழைகிறோம். 18, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த ஓவியங்களில் சென்னை மெரினா கடற்கரையின் அப்போதைய தோற்றம், சென்னை நகரின் பண்டைய தோற்றம், தாஜ்மஹாலின் பேரழகு, கல்கத்தாவின் பரபரப்பு வாழ்க்கை என்று இந்தியக் கலையழகைத் தூரிகைகளால் மிளிரவைத்துள்ளனர் ஆங்கிலேயக் கலைஞர்கள்.
இந்த கலை மையத்தைத் துவக்கியவரான கஸ்தூரி சீனிவாசனின் மனைவி பார்பராவின் கைவண்ணத்தில் உருவான 36 ஓவியங்கள் ஓர் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எண்ணெய், நீர்க்கலவை மற்றும் துணியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே ராமேஸ்வரம் வரையிலான பிராந்தியக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன.
நவீன இந்தியக் கலைஞர்களின் கலைப்படைப்புகளுக்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தானராஜ், அல்போன்சோ, அந்தோணிதாஸ், தோட்டாதரணி, சேனாதிபதி ஆகியோரின் குறிப்பிடத்தக்க ஓவியங்கள் இங்குள்ளன.
கலைக்கூடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வருகையில் கண்களில் படுகிறது "மொபைல் ஸ்கல்ப்ச்சர்' எனப்படும் அசையும் சிற்பம். கிளைக்குக் கிளை தாவும் குரங்குகளின் அற்புதச் சிற்பம். அறையின் விட்டத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அந்த அசையும் சிற்பத்தின் நிழலை எதிரில் தெரியும் சுவரில் பார்த்தால், குரங்குகள் நிஜமாகவே கிளைவிட்டுக் கிளை தாவிக் குதித்து விளையாடுவதுபோல் இருக்கிறது. கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரி விரிவுரையாளர் வி.எஸ்.டி.அருளரசனின் கைத்திறத்தில் உருவானதாம்.
இதுகுறித்து இந்த மைய மேலாளர் எம்.குப்புராஜ் கூறியதாவது:
""பல மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள், மாணவ, மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து கலைப்படைப்புகளைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். வேலை நாட்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை கலை மையத்தைப் பார்க்கலாம். கட்டணம் இல்லை. ஞாயிறு மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
இங்குள்ள கலைக்கூடத்தில் இளம் ஓவியக் கலைஞர்கள், பிரபல ஓவியர்கள் தங்கள் படைப்புகளை இலவசமாக காட்சிக்கு வைக்கலாம்.
2003-ம் ஆண்டு முதல் ஓவியக் கலைக்கென இந்த மையம் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாதம் ஓர் ஓவியக் கண்காட்சி வீதம் அந்த ஆண்டில் 12 ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம்.
2004-ல் மூன்று பிரிவுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம். கோவை மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் விதமாக கோவை ஓவியர்கள் சங்கமம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இளம் ஓவியர்களின் படைப்புகள், பிரபல ஓவியர்களின் படைப்புக்காக சிறப்பு மெகா தொடர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓவியர்களுக்கும், ஓவியக் கலையை ரசிப்பவர்களுக்கும், இந்தக் கலையை கற்றுக் கொள்பவர்களுக்கும் இந்தக் கண்காட்சிகள் மிகுந்த உற்சாகத்தை அளித்தன. பல மாநிலங்களிலிருந்தும் ஓவியர்கள் கோவையை நோக்கி வர ஆரம்பித்தனர்.
இதையடுத்து தொடர்ந்து ஓவியக் கண்காட்சிகளை நடத்தத் தீர்மானித்தோம். 2008-ல் "கலைடாஸ்கோப்' என்ற பெயரில் 14 ஓவியக் கண்காட்சிகளை நடத்தினோம். தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், கோவா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
2009-ல் "ஸ்பெக்ட்ரம்' என்ற பெயரில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். இதுவரை 6 கண்காட்சிகள் நடந்துள்ளன.
ஓவியக் கலையில் திறமையும், தகுதியும் வாய்ந்தவர்களுக்கு கண்காட்சி வைக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம். இதற்கென கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. கண்காட்சி வைக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் குப்புராஜ்.
கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை கலை மையத்தின் தொலைபேசி எண்கள்: 0422-2574110, 9442160895.
படங்கள்: எம்.ஆனந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...