பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

30. சித்திகளைத் தாண்டினால் முக்தி

உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைப்பதன் மூலம் நமக்குள்ளே உறைந்துகிடக்கும் அபாரமான ஆற்றலை வெளிக்கொணர்கிறது யோகம். இந்த ஆற்றல்களின் உச்சம்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

பத்மன்

உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைப்பதன் மூலம் நமக்குள்ளே உறைந்துகிடக்கும் அபாரமான ஆற்றலை வெளிக்கொணர்கிறது யோகம். இந்த ஆற்றல்களின் உச்சம், அட்டமா சித்திகள் எனப்படும் எண்பெரும் ஆற்றல்கள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம் மற்றும் இடைவிடாத யோகப் பயிற்சிகள் என்ற தவத்தின் மூலம் அதிசய ஆற்றல்கள் கிடைப்பதாக பதஞ்சலி கூறுகிறார். யோக சூத்திரத்தின் மூன்றாவது பாகமாகிய விபூதி பாதத்தில் இத்தகைய சித்திகளைப் பற்றி அவர் விவரிக்கிறார்.

நமது உடலுக்குள் அபான, உதான, விதான, சமான, பிராண ஆகிய 5 காற்றுகள் உலவுவதாக சாங்கியம் கூறுகிறது. உடலின் இயக்கத்துக்கு இந்த ஐந்துமே காரணமாக அமைகின்றன. அவற்றில் பிராண என்ற உயிர்க்காற்று மிகவும் முக்கியமானது. இதனைத் தமிழில் வாசி என்று சித்தர்கள் கூறுவர். இந்த வாசியைக் கட்டினால், அதாவது முறையாகக் கட்டுப்படுத்தினால், சிவம் ஆகலாம் என்று கூறுவர். உடலில் கண்ணுக்குத் தெரிகின்ற நரம்புகளைப்போல கண்ணுக்குத் தெரியாத நாடிகள் உள்ளன. இவற்றின் மூலமே உடலுக்குள் பிராண வாயு பயணிக்கிறது. இந்த நாடிகள் 72,000 என்று கூறுவர். இவற்றில் இட (இடகலை எனப்படும் இடதுபுற நாடி), பிங்கள (பிங்களை எனப்படும் வலதுபுறு நாடி), சுஷும்ண (சுழுமுனை எனப்படும் நடு நாடி) ஆகிய மூன்றும் முக்கியமானவை.

முதுகுத்தண்டின் இடப்புறத்தில் தோன்றும் இட நாடி, நாசியின் இடப்புறம் வழியே பிராண வாயுவை செலுத்துகிறது. இதேபோல் முதுகெலும்பின் வலப்புறம் தோன்றும் பிங்கள நாடி, நாசியின் வலப்புறம் வழியே பிராண வாயுவைச் செலுத்துகிறது. இட நாடி, குளுமையானது. மனத்தோடு தொடர்புடையது. இதற்கு உரிய தேவதை சந்திரன். பிங்கள நாடி, வெம்மையானது, உடலோடு தொடர்புடையது. இதற்கு உரிய தேவதை சூரியன். நமது உடலில் ஒரு மணி நேரம் வலது நாசி வழியாகச் சென்று இடது நாசி வழியாக வெளியேறும் பிராண வாயு, அடுத்த ஒரு மணி நேரத்துக்கு இடது நாசி வழியாகச் சென்று வலது நாசி வழியாக வெளியேறும். இவ்வாறு மாறி மாறி சூழல்கிறது. இந்த இரு நாடிகளும் உலகத்தோடு நம்மை தொடர்புபடுத்துகின்றன

Story image

அதேநேரத்தில் முதுகுத்தண்டின் நடுப்பாகத்தில் பாயும் சுஷும்ண நாடி, பிரும்ம நாடி எனப்படுகிறது. ஆத்மனோடு தொடர்புள்ள இதனுடைய தேவதை அக்னி. சுஷும்ண நாடி சத்வ குணம் கொண்டது. இட நாடி தமோ குணத்தையும், பிங்கள நாடி ரஜோ குணத்தையும் கொண்டுள்ளன. யோகி ஒருவன், சுஷும்ண எனப்படும் பிரும்ம நாடியைத் தூண்டி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும்போது, அவன் உலகியல் வாழ்க்கையோடு தொடர்பை அறுத்து, சமாதி நிலைக்குள் ஆழ்கிறான். அதாவது பிரும்மத்துள் ஆழ்கிறான்.

முதுகுத்தண்டின் அடிப்புறத்தில், ஆசனவாய்ப்புறத்தில் பாம்பின் வால்போல் சுருண்டுகிடக்கும் இந்தச் சுழுமுனை, யோக மார்க்க சாதனையால், அப்படியே மேலே எழும்பி, உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு சக்கரத்திலும் உந்தப்பட்டு, இறுதியில் தலையின் உச்சியில் பாம்பு படம் எடுப்பதுபோல் விரிந்து நிற்கும். இதற்கு, பத்மாஸனம் உள்ளிட்ட உரிய ஆசனங்களில் அமர்ந்து, நாடிகளை சுத்தம் செய்து (நாடி சுத்தி), முறையான மூச்சுப் பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தியை மேலே எழுப்பும் யோக சாதனையை சாதகன் மேற்கொள்ள வேண்டும்.

முதுகுத்தண்டின் அடிப்புறத்தில் ஆசனவாய் அருகே அமைந்திருக்கும் சக்கரம் மூலாதாரம். சுஷும்ண நாடியின் அஸ்திவாரம் இதுதான். அடுத்ததாக, அடிவயிற்றில் அமைந்துள்ள சுவாதிஸ்டானம். பிறகு, நாபி (தொப்பூள்) அருகே அமைந்துள்ள மணிபூரகம், இதயத்தில் அமைந்துள்ள அனாஹதம், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள விசுத்தி, புருவ மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞை, இறுதியாக உச்சந்தலையில் மூளைப் பகுதியில் அமைந்துள்ள சஹஸ்ராரம் என மொத்தம் ஏழு சக்கரங்கள் உள்ளன. சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் கால்கள் என்று பொருள். தேர்ச் சக்கரத்தில் எவ்வாறு பல ஆரங்கள் (கால்கள்) இருக்கின்றனவோ, அதேபோல இந்த சஹஸ்ரார சக்கரத்துக்கு ஆயிரம் கால்கள், அதாவது ஏராளமான கால்கள் உண்டு. இதுதான் நமது உடலின் நரம்புத் தொகுதியையும் மனத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துகிறது. குண்டலினி சக்தியை இந்த சக்கரத்தில் எழுப்புவதால் சித்திகள் கிட்டுகின்றன.

இந்த சித்திகள் (ஆற்றல்கள்) பல்வேறு வகைப்படும். திரிகாலக்ஞத்வம் (முக்காலங்களையும் அறிதல்), அத்வந்த்வம் (குளிர், வெப்பம் போன்றவற்றைப் பொறுத்துக்கொள்ளுதல்), பர சித்தாதி அபிக்ஞாத (பிறர் மனத்தில் நினைப்பதை அறிதல்), அக்னி அர்க்க அம்பு விஷ ஆதீனாம் பிரதிஸ்தம்ப (தீ, சூரியன், தண்ணீர், விஷம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல்), அபராஜய (பிறரால் வெல்லப்படாமல் இருத்தல்), அனூர்மிமத்வம் (பசி, தாகம் ஆகிய உடல் உபாதைகளால் பாதிக்கப்படாமல் இருத்தல்), தூரஸ்ரவண (தொலைவில் பேசுவதைக் கேட்டல்), தூரதர்ஸனம் (தொலைவில் நடப்பதைப் பார்த்தல்), மனோஜவ (நினைக்கும் இடத்துக்கு உடலைக் கொண்டுசெல்லுதல்), காமரூபம் (நினைத்த உருவத்தை எடுத்தல்), பரகாய பிரவேசனம் (பிறர் உடலுக்குள் புகுதல், அதாவது கூடுவிட்டு கூடு பாய்தல்), ஸ்வச்சந்த ம்ருத்யு (தான் நினைக்கும் நேரத்தில் மரித்தல்), தேவானாம் சஹ க்ரீட அனுதர்ஸனம் (தேவர்களோடு இணைந்து விளையாடல்களில் ஈடுபடுதல்), யதா சங்கல்ப சம்ஸித்தி (நினைத்ததை நடத்துதல்), ஆக்ஞப்ரதிஹதா கதி (ஆணைகளைத் தடையின்றிச் செயல்படுத்துதல்) என்று யோகம் மற்றும் தியானப் பயிற்சிகளின் மூலம் கிடைக்கும் ஆற்றல்களை வரிசைப்படுத்துவர்.

Story image

இவற்றையெல்லாம்விட உயர்வானதாக அஷ்டமகா சித்திகள் (அட்டமா சித்திகள்) மதிக்கப்படுகின்றன. சாங்கியமும், யோகமும் கூறும் அந்த அஷ்டமகா சித்திகளாவன:

1. அணிமா – உடலைச் சுருக்கி அணு அளவு ஆக்குதல். உதாரணத்துக்கு, பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து, சிவபெருமானைச் சுற்றிவந்து வணங்கியது.

2. மஹிமா – உடலை மிகப் பெரியதாக வளர்த்தல். உதாரணத்துக்கு, மகாபாரத போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் விஸ்வரூப தரிசனம் காட்டியது.

3. லகிமா – உடலின் பருமனை, அதாவது எடையை மிகவும் குறைத்து இலேசாக்குதல். உதாரணத்துக்கு, திருநாவுக்கரசரை எதிரிகள் கடலுக்குள் தூக்கி வீசியபோது, அவரது உடல் எடை குறைந்து கடல் நீரில் மிதந்தது.

4. கரிமா – உடலின் பருமனை, அதாவது எடையை அதிகரித்தல். உதாரணத்துக்கு, அமரநீதி நாயனாரோடு நடத்திய திருவிளையாடலின்போது, சிவனடியாராக வந்த சிவபெருமான், தனது கோவணத்தின் எடைக்கு நிகராக தராசுத் தட்டில், அமரநீதிச் சோழனின் அரசு கஜானா முழுவதும் மட்டுமின்றி, அவரையும் அவரது மனைவியாரையும் அமரச் செய்து ஏற்றது.

5. பிராப்தி – அனைத்துத் திசைகளிலும் அனைத்து நேரத்திலும் தங்கு தடையின்றி உலாவுதல்.

6. பிரகாம்யம் – நினைத்த உருவத்தை அடைதல். உதாரணத்துக்கு, ஔவையார் இளமைப் பருவத்திலேயே, தான் நினைத்த மாத்திரத்தில் மூதாட்டி உருவை அடைந்தது.

7. ஈசத்துவம் – இறைவனுக்குரிய ஆற்றல்களைப் பெறுதல். உதாரணத்துக்கு, இறந்துபோன பூம்பாவையை திருஞானசம்பந்தர் மீண்டும் பிழைக்கவைத்தது.

8. வசித்துவம் – உலக உயிரினங்கள் அனைத்தையும் தனது மன ஆற்றலால் வசியப்படுத்துதல்.

இதுபோன்ற சித்திகளையும், அட்டமகா சித்திகளையும் யோகம், தியானப் பயிற்சிகள் மூலம் பெறலாம் என்பதை யோக சூத்திரத்தின் ராஜயோகம் கோடிட்டுக் காட்டினாலும், இதுபோன்ற சித்திகளுக்கான கடுமையான யோகாசன, தியானப் பயிற்சிகளை வலியுறுத்தி, விவரிக்கிறது ஹடயோகம்.

பதஞ்சலியின் ராஜயோகம், முதலில் மனத்தையும் (இயமம்), ஆன்மாவையும் (நியமம்) கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக் கூறி, பிறகு உடல் மற்றும் மூச்சுப்பயிற்சிகளான ஆசனம், பிராணாயாமத்தை முன்னிறுத்துகிறது. இதற்கு மாறாக, ஹடயோகம் முதலில் கடுமையான உடற்பயிற்சிகளான ஆசனங்களைக் கூறி, உடலைத் தூய்மைப்படுத்தி ஒரு கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மனத்தையும் பிராணன் எனப்படும் உயிர்மூச்சையும் கட்டுப்படுத்தும் முறையைப் போதிக்கிறது.

திருமூலர் கூறுகின்ற ‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்ற சொற்றொடர், ஹடயோகத்துக்கு மிகவும் பொருந்தும். ஹடம் என்றால் முரட்டுத்தனம், அடம்பிடித்தல், உறுதியாகவும் கடுமையாகவும் இருத்தல் என்று பொருள். உடலை முரட்டுத்தனமான ஆசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தும் முறைகளை முதலாவதாகவும், முக்கியமானதாகவும் போதிப்பதால் இதற்கு ஹடயோகம் என்று பெயர் வந்தது எனக் கூறுவர். எனினும், ‘ஹ’ என்றால் மனம், ‘ட’ என்றால் உயிர்மூச்சு என்றும், இவை இரண்டையும் சிறப்பாகக் கட்டுப்படுத்துவதற்கான யோகாசனங்களை முன்னிறுத்துவதால் இதற்கு ஹடயோகம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவர்.

இன்றைய காலகட்டத்தில் பயிற்றுவிக்கப்படும் பெரும்பாலான யோகாசனப் பயிற்சிகள், இந்த ஹடயோகத்தின் பாற்பட்டவையே. ராஜயோகத்தைப் போலவே இதுவும் பழைமையானது என்றபோதிலும், இதற்கான இலக்கியப்பூர்வமான ஆதாரம் 15-ம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. அந்த நூற்றாண்டைச் சேர்ந்த யோகி ஸ்வாத்மராம எனப்படும் சுவாமி ஸ்வாத்மராமர் என்பவர் இயற்றிய ‘ஹடயோக பிரதீபிகா’ என்ற நூலே இதன் இலக்கிய ஆதாரமாகும்.

எனினும், யோக மார்க்கத்தின் இறுதி இலக்கு, இதுபோன்ற சித்திகளையோ, மகா சித்திகளையோ அடைந்து இளைப்பாறுவது அல்ல. சித்திகள், மகா சித்திகளைப் பெற்று மனிதனைவிட உயர்ந்த நிலையை, ஒரு தேவனாகவே உயர்கின்றபோதிலும், அதற்குரிய காலம் முடிவடைந்த பிறகு மீண்டும் சம்சார சாகரத்தில் ஓர் ஆத்மா சுழலத்தான் வேண்டும் என்கிறது யோகம். ஆகையால், ஒரு சிறந்த யோகியானவன், இந்த ஆற்றல்களின்பால் சித்தம் சலனப்படாமல் இறுதி நிலையான முக்தியை, விடுதலையை எய்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பதஞ்சலி. ஏனெனில், இந்த சித்திகள், இறுதி இலக்காகிய விடுதலையை எட்டவிடாமல் செய்துவிடுகின்றன.

இந்த இறுதி நிலையை கைவல்யம் (ஏகாந்தம், தனித்தநிலை) என்கிறார் பதஞ்சலி. இது குறித்து யோக சூத்திரத்தின் நான்காம் பாகமாகிய கைவல்ய பாதம் விவரிக்கிறது. அவித்யா (அவித்தை) எனப்படும் அஞ்ஞானத்தின் மூலமே புருஷனாகிய ஜீவன், பிரகிருதிக்குள் கட்டுண்டு கிடக்கிறது. இந்தக் கட்டுகளை உடைப்பதற்குத்தான் விவேகக்யாதி எனப்படும் பிரகிருதி, புருஷனைப் பகுத்துப் பார்க்கும் பகுத்தறிவு அவசியம் என்று யோகம் வலியுறுத்தியிருப்பதை முன்னரே கண்டோம். இவ்வாறான பகுத்தறிவு வந்த பிறகு, அஷ்டாங்க மார்க்கத்தின் மூலமான இடைவிடாத பயிற்சிகள் மூலம் கைவல்ய நிலைக்கு ஜீவன் முன்னேறுகிறது.

அதேநேரத்தில் அஷ்டாங்க மார்க்கத்தின் இறுதி நிலையாகிய சமாதி நிலை கைவரப் பெற்றாலும்கூட, உடனடியாக முக்தி கிடைத்துவிடாது. குறிப்பிட்ட ஜீவனின் கர்மவினைகள் முழுமையாக கழிந்த பிறகே ஜீவன் முக்தியை எட்டுகிறது. இந்தக் கர்மவினைகள், பிராரம்ப (முந்தைய செயல்களின் அல்லது பிறவிகளின் விளைவாக நிகழ்காலத்தில் அல்லது இந்தப் பிறவியில் அனுபவிப்பவை), சஞ்சித (முந்தைய செயல்களின் அல்லது பிறவிகளின் விளைவாக எதிர்காலத்தில் அல்லது அடுத்த பிறவிகளில் அனுபவிக்க இருப்பவை), அகாமி (நிகழ்காலச் செயல்களின் மூலம் எதிர்காலத்தில் அல்லது அடுத்த பிறவிகளில் அனுபவிக்க இருப்பவை) என மூன்று வகைப்படும். எனினும், யோகப் பயிற்சிகளின் மூலம் முக்திக்கான கைவல்ய நிலையை அடையப்பெற்ற ஜீவன், இந்தக் கர்மவினைகள் கழிந்த பிறகு முக்தியை எட்டுகிறது. அதேநேரத்தில், தனக்குக் கிடைத்த ஆற்றல்களைத் தவறாகப் பயன்படுத்தாமல், உலகின் நன்மைக்காக அந்த ஜீவன் பயன்படுத்த வேண்டும், இல்லையேல், முக்தி தவறிவிடும் என்று எச்சரிக்கிறார் பதஞ்சலி. ஆக, சித்திகளில் மயங்காமல் அவற்றைத் தாண்டிச் சென்றால்தான் முக்தி சாத்தியமாகும் என்கிறது யோக தரிசனம்.

இவ்வாறான யோக தரிசனம், உடலையும், மனத்தையும் கட்டுப்படுத்தி, தவத்தின் (இடைவிடாத பயிற்சிகளின்) மூலம் ஆசைகளால் எழும் சித்த விருத்திகளை நிறுத்தி, தனக்குள் உறையும் ஏக இறையை (பிரும்மத்தை) காணும் மார்க்கத்தைப் போதிக்கிறது என்றால், இதற்கு நேர்மாறாக, இயற்கையின் ஆற்றல்களை பல்வேறு தெய்வங்களாக (தேவ-தேவதைகளாக) கூறி, அவற்றுக்குப் பிரியமான சடங்குகளைச் செய்வதே ஜீவன் கடைத்தேறுவதற்கான வழி என்கிறது மீமாம்சை எனப்படும் பூர்வ மீமாம்சை.

இதுகுறித்து அடுத்த வாரம் காண்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.