இதன் உட்பொருளைக் காண்போம். படைப்பு (உலகத் தோற்றம்) என்கின்ற வேள்விக்கு, ஆகாயம், வாயு, தீ, நீர், நிலம், சூரியன் என்று வர்ணிக்கப்படும் புத்தி (மஹத் என்கின்ற பேரறிவு), சந்திரன் என்று வர்ணிக்கப்படும் மனம் (அதாவது, தான் என்ற நினைப்பாகிய அகங்காரம்) ஆகிய ஏழும் சுற்று எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த எல்லைக்கு உட்பட்டு நடக்கும் வேள்வியில், இருபத்தோரு சமித்துகள் வேள்வியைத் தூண்டுபவைகளாக பயன்படுத்தப்படுகின்றன. பஞ்ச தன்மாத்திரைகள் (நிறம், ஒலி, வாசனை, ருசி, தொடு உணர்வு), பஞ்ச ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல் அதாவது, உடல்), பஞ்ச கர்மேந்திரியங்கள் (கை, கால், வாய், மலஜலம் கழிக்கும் உறுப்பு, பிறப்புறுப்பு), பஞ்ச மகாபூதங்கள் (பூமி, நீர், தீ, வாயு, ஆகாயம் எனப்படும் வெளி) ஆகிய இருபதுடன் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான அந்தகரணமும் சேர்த்து 21 விஷயங்களே அந்த சமித்துகள். இந்த சமித்துகளைக் கொண்டு, விராட் படைப்பு என்னும் வேள்வியைச் செய்யும்போது, எல்லையற்ற அந்த ஆதி ஆற்றலே (புருஷனே) தன்னை ஓர் எல்லைக்குள் சுருக்கிக்கொண்டு வேள்விக்கான அர்ப்பணிப்புப் பொருளாக, அதாவது வாழ்கின்ற உயிரினங்களாக (பசு) வருகிறது. இவ்வாறாக, படைப்பு என்னும் வேள்வி நடைபெறுகிறது என்கிறது புருஷ சூக்தம்.