பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

25. உயிர்ப்பின் உரை

இல்லாமைக்குள் உறைகின்ற இருப்பே உலகமாக விரிவடைகிறது. அதுவே ஒவ்வொரு முறையும் படைப்பாக வெளிப்படுகிறது என்பதே நாஸதீய சூக்தத்தின் உள்ளடக்கம்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

பத்மன்

இல்லாமைக்குள் உறைகின்ற இருப்பே உலகமாக விரிவடைகிறது. அதுவே ஒவ்வொரு முறையும் படைப்பாக வெளிப்படுகிறது என்பதே நாஸதீய சூக்தத்தின் உள்ளடக்கம். அவ்விதம், இருப்பாக விளங்குகின்ற இறவாத சக்திதான் புருஷன் என்பதை விளக்குகிறது புருஷ சூக்தம்.

நாஸதீய சூக்தத்தைப் போலவே புருஷ சூக்தமும் படைப்பு குறித்த ரிக் வேத இலக்கியம்தான். புருஷன் என்பது உயிர்ப்பாகும். புருஷன் என்பதற்கு மனிதன், மானுடன், ஆண் என்றும் பொருள் இருக்கிறது. மனிதன் என்பது குறிப்பாக ஆணைக் குறித்தாலும், பொதுவாக ஆண், பெண் ஆகிய இருபாலரையும் குறிக்கும் என்பதைப்போலத்தான் இங்கே புருஷன் என்ற சொல்லின் பயன்பாடும். மேலும், இந்தப் புருஷன் மானுடத்தை மட்டும் குறிக்கவில்லை; அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகளின் தோற்றத்துக்குக் காரணமான ஆதி இருப்பை, ஆற்றலை, அதன் உயிர்ப்பைக் குறிக்கிறது.

புருஷ சூக்தத்தின் முதல் செய்யுள் (ஸ்லோகம்) இவ்வாறு கூறுகிறது-

ஸஹஸ்ரஸீர்ஸோ புருஷஹ் ஸஹஸ்ராக்ஷஹ் ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விஸ்வதோ வ்ருத்வாத்யதிஷ்ட்த் தஸாங்குலம்

இதன் பொருள்–

புருஷனுக்கு ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் பாதங்கள். அவரே உலகின் அனைத்திலும் வியாபித்து பத்து அங்குலத்திலும் (திசைகளிலும்) விஸ்தரித்துள்ளார்.

இதன் உட்பொருள்–

புருஷன் எனப்படும் அந்தப் பேராற்றலுக்கு எண்ணிலடங்கா தலைகள் (இங்கே சஹஸ்ரம், அதாவது ஆயிரம் என்பது மிகச் சரியான எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. கணக்கிடமுடியாத அதிகம் என்பதைக் குறிக்கிறது). இதேபோல் அவருக்கு கணக்கிலடங்காத கண்கள், பாதங்கள். அதாவது, எண்ணற்ற சிந்தனைகள், நோக்கங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தமாகப் புருஷன் விளங்குகிறார் (விளங்குகிறது). அந்தப் பேராற்றலே உலகம் முழுவதிலும் பரவி உறைகிறது. 10 திசைகளிலும் - பக்கவாட்டிலான எட்டு திசைகளுடன் மேலே, கீழே ஆகிய திசைகளையும் சேர்த்து 10 திக்குகளிலும் - அதுவே விரிவடைகிறது.

2-வது செய்யுள், இந்தப் புருஷனே படைப்பின் சாரம் என்கிறது.

புருஷ ஏவேதம் ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம்
உத அம்ருதத்வஸ்யே ()ஸானோ யத் அன்னேன அதி ரோஹதி

புருஷ ஏவ இதம் சர்வம் – அதாவது, புருஷன் மாத்திரமே இங்குள்ள (உலகில் உள்ள) அனைத்தும் (அதாவது அனைத்தின் சாரமும்). அதுவே முற்காலத்தில் இருந்தது. அதுவே வருங்காலத்திலும் இருக்கப்போகிறது. இறவாத்தன்மை (அம்ருதம்) கொண்ட ஈசனாகிய அந்தப் புருஷனாலேயே உலகில் அனைத்தும் ஆக்கப்படுகிறது. அதுவே உணவாகவும் விளங்கி உயிர்களை வளர்க்கிறது. இறைவன் என்றால் எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள். ஈஸ்வரன் என்றால் அனைத்து ஐஸ்வர்யங்களையும் (பொருள்களையும்) தன்னகத்தே கொண்டவன் என்று பொருள்.

ஆகையால், இறவா ஆற்றல் கொண்ட அந்த ஒற்றை இறைசக்தியே எக்காலத்திலும் இருப்பது. அதன் சாரமே படைப்புகளாகப் பரிணமிக்கிறது. அவ்வாறு தோன்றிய படைப்புகளின் வாழ்வாதார அன்னமாகவும் (உணவாகவும்) அந்தப் பரம்பொருளே அமைகிறது. அந்தப் பரம்பொருளைச் சரியாக அறிவதன் மூலம் அதனைப் போலவே நாமும் இறவாத்தன்மையை அடைய முடியும். அதற்கு அவரையே உணவாகக் கொள்ள வேண்டும். அதாவது, நம்முள்ளே இருக்கும் இறைசக்தியை நாம் அறிய வேண்டும் என்று ஆன்மிக அறிஞர்கள் இதற்கு விளக்கங்கள் கொடுக்கின்றனர்.

அதுசரி, படைப்புக்கு புருஷன் எனப்படுகிற ஆணாக உருவகப்படுத்தப்படும் ஆற்றல் மாத்திரமே காரணமா, பிரகிருதி எனப்படும் பெண்ணாக உருவகப்படுத்தப்படும் 2-வது ஆற்றல் காரணம் இல்லையா என்ற கேள்வி எழுகிறதா? இதற்கு முன்னர் பார்த்த சாங்கிய தத்துவம் அப்படித்தானே சொல்கிறது என்று கேள்வி எழுப்பினால், பிரகிருதி தத்துவம் புருஷனில் இருந்து பின்னால் எழுகிறது என்றும், தொடக்கத்தில் பிரகிருதியையும் உள்ளடக்கிய ஒற்றை ஆற்றலாகவே அது விளங்குகிறது என்றும் விடை அளிக்கிறது புருஷ சூக்தம்.

புருஷ சூக்தத்தின் 3-வது செய்யுள்-

ஏதாவானஸ்ய மஹிமாதோ ஜ்யாயாம்ஸ்ச புருஷஹ்
பாதோ()ஸ்ய விஸ்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி

இதன் பொருள்–

இங்கே (உலகில்) நாம் காண்கின்ற அனைத்தும் அந்தப் புருஷனின் மகிமையால் (வல்லமையால்) உருவானவை. இவை அனைத்தையும்விட வல்லமையானவர் அந்தப் புருஷர். இந்த உலகில் உள்ள அனைத்தும் அவரது கால் பங்கு என்றால், மீதி முக்கால் பங்கு சொர்க்கத்தில் இறவாத் தன்மையாக (அம்ருதம்) உறைகிறது.

இதன் உட்பொருள்–

ஒவ்வொரு முறை உலகம் லயமடைந்து மீண்டும் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கின்ற ஆதி ஆற்றலின் (புருஷனின்) வல்லமையால் உலகில் உள்ள அனைத்தும் உருவாகியுள்ளன. உருவாகியுள்ள இந்த அனைத்தின் ஒட்டுமொத்தத்தையும்விட மேலானது, வல்லமை பொருந்தியது அந்த ஆற்றல். இந்த உலகில் உள்ள அனைத்தும் ஒரு கால் பங்கு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அந்த ஆதி ஆற்றலின் மீதி முக்கால் பங்கு, தெய்வீக உலகில் அதாவது இனிமேல் தோன்றக்கூடிய உலகத்தில் இருக்கின்றன. அந்த ஆற்றல் இறவாத்தன்மை கொண்டதாக விளங்குகிறது.

இதைத் தொடர்ந்து வரும் நான்காவது செய்யுளில், புருஷனின் முக்கால் பாகம் தெய்வீக உலகமான உயர் வானில் (காணவியலா வெளியில்) உறைவதாகவும், அவரது (அதனின்) கால் பாகம் உலகில் படைப்புகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மறைவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படைப்புகளில் உண்பவையாகவும் – அதாவது, உயிருள்ளவையாகவும் (ஜீவன்களாகவும்), உண்ணாதவையாகவும் – அதாவது, உயிரற்றவையாகவும் (பொருள்களாகவும்) அந்தப் புருஷனே விளங்குவதாகக் கூறப்படுகிறது.

இனி, 5-வது செய்யுள் கூறுவதைப் பார்ப்போம்.

தஸ்மாத் விராடஜாயத விராஜோ அதி பூருஷஹ்
ஸஜாதோ உத்யரிச்யத பஷ்சாத்பூமிம்மதோ புரஹ்

இதன் பொருள்–

அந்த மாபெரும் ஆற்றலான புருஷனிடமிருந்து ஒளிமயமான விராட் தோன்றினார் (தோன்றியது). அந்த விராட்டில் இருந்து பூமி உருவாகியது. அந்த பூமியிலும் அதன் மேலும் கீழுமாக புருஷனே (ஆதி ஆற்றலே) பல்வேறு படைப்புகளாக வெளிப்பட்டார்.

இதன் உட்பொருள்–

விராட் என்பவரே ஹிரண்யகர்ப்பர். அண்டவியலில் கோல்டன் எக் என்று சொல்வார்களே, அதுதான் இந்த ஹிரண்யகர்ப்பம். தங்கம் போன்று ஒளிரும் ஒரு கொதிவடிவக் கோளில் (நெபுளா) இருந்துதான் பூமி உள்பட உலகம் தோன்றியதாக அண்டவியல் அறிவியல் கூறுகிறது. அதுதான் இங்கே ஹிரண்யகர்ப்பமாகக் கூறப்பட்டு, அவர் ஒரு தேவராக – ஹிரண்யகர்ப்பராக உருவகிக்கப்படுகிறார்

Story image

தேவ என்ற சொல், திவ எனப்படும் பகல் அதாவது ஒளி என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. தீ என்ற தூய தமிழ்ச் சொல்லும் ஒளியைக் குறிக்கிறது. ஆக, ஹிரண்யகர்ப்பர் என்ற தேவர், அதாவது ஒளிபொருந்திய கடவுள் இந்த உலகில் படைப்புகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறார். இவர் புருஷர் எனப்படும் ஆதி ஆற்றலின் ஒரு பகுதி. அந்தப் புருஷரே, பரப்பிரும்மமாகவும் எல்லாம்வல்ல இறையாற்றலாகவும் வர்ணிக்கப்படுகிறது. இந்த பிரும்மத்தை சிவம் என்பாரும் உள்ளனர், விஷ்ணு என்பாரும் உள்ளனர், ஆதிபராசக்தி என்பாரும் உளர். வேறு பெயர்களில் அழைப்போரும் உள்ளனர்.

இந்த பிரும்மத்தில் இருந்து உருவான விராட் எனப்படும் ஹிரண்யகர்ப்பரே படைப்புக் கடவுளான பிரும்மாவாக உருவகப்படுத்தப்படுகிறார். இவருக்கு பிரஜாபதி என வேறொரு பெயரும் உண்டு. பிரஜை என்றால் குடிமக்கள். இங்கே அகண்ட பரிபூரண பிரும்மத்துக்கு உயிரினங்களும் இதர பொருள்களும் பிரஜைகளாக உள்ளன. இவற்றைப் படைத்த, படைத்துக்கொண்டிருக்கிற தலைவன், அதாவது ஆற்றல் பிரஜாபதி. இந்தப் பிரஜாபதியில் இருந்து படைப்புகளாக வெளிப்படுபவையும் புருஷரே. அதாவது, அந்த மூல ஆற்றலே பல்வேறு படைப்புகளாகப் பரிணமிக்கிறது. ஆகையால், நமக்குள் இருப்பதும் அந்த மூல இறை சக்தியே என்று உட்பொருள் விரிகிறது. ஆக, புருஷ சூக்தத்தில் புருஷன் என்று குறிப்பிடப்படும் ஒற்றை ஆற்றலே, பின்னர் சாங்கிய தத்துவத்தில் பிரகிருதி எனப்படும் பொருள் சார்ந்த இயற்கை ஆற்றலாகவும், புருஷன் எனப்படும் அறிவாற்றலாகவும் பிரித்துப் பொருள் கூறப்படுகிறது. அந்தவகையில் புருஷ சூக்தத்தில் குறிப்பிடப்படும் புருஷனானது, பிரகிருதி – புருஷன் ஆகிய இரண்டும் இணைந்த அர்த்தநாரீஸ்வரரைப்போல விளங்குகிறது.

உலகின் சாரமாக அமைந்த ஒற்றை ஆற்றலே (புருஷன் எனப்படும் பரப்பிரும்மம்), உலகைப் படைத்து இயக்குகின்ற ஆற்றலாகவும் (விராட் எனப்படும் பிரஜாபதி), அந்த உலகில் இயங்குகின்ற வஸ்துக்கள் மற்றும் உயிரினங்களாகவும் (பசுக்கள்) திகழ்கின்றன என்கிறது புருஷ சூக்தம். இதுவே பிற்காலத்தில் அத்வைத தத்துவத்தை நிறுவ அடிப்படையாக அமைந்தது.

புருஷன் எனப்படும் ஆதி ஆற்றலே அனைத்துமாக ஆகி இருக்கிறது என்பதை புருஷ சூக்தத்தின் 6-வது ஸ்லோகம் மிகக் கவித்துவமாக விண்டுரைக்கிறது.

அதுபற்றி அடுத்த வாரம் காண்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.