ஆயிற்று, இப்போது அருவிக்கு நேர் கீழே வந்து நின்று கும்பலில் குளிக்க வாகான இடமும் பிடித்தாயிற்று. ஆனந்தத்திற்கு குறைவில்லை. முதலில் சிதறித் தெறிக்கும் அருவியில் முதல் பெருந்துளி நேராக தமது உச்சந்தலை தொடும் போதே கண் மூடிப் பரவசமாகி விடுகிறார்கள் பலர். சேலையிலும், நைட்டியிலும், தாவணியிலும், சுரிதாரிலும், முன் கொசுவக் கண்டாங்கிச் சேலையிலுமாக கலர் கலராக தலை முடி விரிந்து பரவி நீரோட்டத்தில் அலையாட அருவி நீர் உச்சந்தலையில் பாய்ந்திறங்கி முழுக்காட்ட கண் மூடி ரசித்து ஆனந்தமாக அனுபவிக்கும் பற்பல தபஸ்வினிகளை அங்கே காண முடிந்தது. கும்பலில் எல்லோரும் சாத்வீகிகளாக இருந்து விடுவதில்லை சில துர்வாசினிகளும் இருந்தார்கள். ‘ஏம்மா, எம்மா நேரந்தான் இப்படி அசையாம ஒரே இடத்துல நின்னு குளிப்ப, நகரும்மா மித்தவங்களும் குளிக்காண்டாமா?!’ என கோப முகம் காட்டி இடித்துத் தள்ளிக் கொண்டு அருவிக்கு தலை காட்டியவர்களையும் காண முடிந்தது. இடித்துத் தள்ளிக் கொண்டும், உரத்து முணுமுணுத்தவாறும் இருந்த போதும் பெண்கள் அருவிக் குளியலின் ஆனந்தமயோனுபவத்தை ஒரு துளி விடாமல் ரசித்துப் பருகினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதிரில் கம்பித் தடுப்பிற்கு அப்பால் ஆண்கள் குளிக்கும் பகுதி. அங்கே எல்லாம் சரக்கடித்து மட்டையானால் முகத்தில் ஒரு ஞான ஒளி தோன்றுமே அந்த ரேஞ்சில் ஆண்கள் அடித்த வெயிலுக்கு ஆனந்தமாக அருவிக் குளியலுக்கு தலையை மட்டுமல்ல மொத்த உடலையும் ஒப்புக் கொடுத்திருந்தனர். அவர்களுக்கென்ன சிற்றாடை தேவையில்லை உள்ளாடை போதுமே. பெண்களை விட ஆண்கள் அதிசுதந்திரமாக அருவிக் குளியலை பேரின்பத்துடன் அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். உள்ளே சென்ற எவருக்கும் அருவியின் தாலாட்டிலிருந்து தலையை மீட்டுக் கொள்ளும் விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.