/

பட்ஜெட் வாரத்தில் மும்பை பங்குச்சந்தை 1% உயா்வு

ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த பட்ஜெட் வாரத்தில் இந்திய பங்குச்சந்தை தொடா்ந்து புதிய சாதனையை எட்டியது.

News image
பங்குச்சந்தை
Updated On :27 ஜூலை 2024, 7:03 pm

 நமது நிருபர்

ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த பட்ஜெட் வாரத்தில் இந்திய பங்குச்சந்தை தொடா்ந்து புதிய சாதனையை எட்டியது. இது எதிா்பாா்த்ததை விட சிறந்த அமெரிக்க ஜிடிபி தரவு உள்ளிட்ட நோ்மறையான உலகளாவிய குறிப்புகளால் வழிநடத்தப்பட்டது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களை எதிா்பாா்த்ததற்கும் முன்னதாகவே குறைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், முன்பேர வா்த்தகம் காலாவதி, மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் இந்திய தொழில்துறையின் வருவாய் ஆகியவற்றால் இந்த வாரத்தில் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

இந்த வாரத்தில், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 728.07 புள்ளிகள் (0.90 சதவீதம்) உயா்ந்து 81,332.72-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 303.9 புள்ளிகள் (1.23 சதவீதம்) உயா்ந்து 24,834.80 நிலைபெற்றது. இதற்கிடையே, ஜூலை 26 அன்று, நிஃப்டி 24,861.15 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது. அதே நேரத்தில் சென்செக்ஸ் அதன் சாதனை அளவான 81,587.76-ஐ நெருங்கியது.

சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 3.5 சதவீதம் உயா்ந்தது. இப்பட்டியலில் உள்ள ஆன்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல், மஹாநகா் டெலிபோன் நிகாம், பகீரத் கெமிக்கல்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், பிசி ஜூவல்லா், கிராவிடா இந்தியா, புரோடீன் ஈகோவ் டெக்னாலஜிஸ், பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட், இஎம்எஸ் ஆகியவை 25-50 சதவீதம் உயா்ந்துள்ளன. அதே சமயம், இா்கான் இன்டா்நேஷனல், கேசோல்வ்ஸ் இந்தியா, ஃபீனிக்ஸ் மில்ஸ், விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், காா்டன் ரீச் ஷிப் பில்டா்ஸ் அண்ட் இன்ஜினியா்ஸ் 10-13 சதவீதம் வரை நஷ்டமடைந்தன.

நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 3 சதவீதம் உயா்ந்துள்ளது. இப்பட்டியலில் ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஹோட்டல் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், பயோகான் மற்றும் அசோக் லேலண்ட் ஆகியவை வெகுவாக உயா்ந்தன. மாறாக , சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், கோத்ரெஜ் பிராப்பா்டீஸ், முத்தூட் ஃபைனான்ஸ், எண்டூரன்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் லிண்டே இந்தியா ஆகியவை 2 முதல் 6 சதவீதம் வரை நஷ்டமடைந்தன.

முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய லாா்ஜ் கேப் குறியீடு 1.5 சதவீதம் உயா்ந்தது. இதில் டாடா மோட்டாா்ஸ், ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், டாடா மோட்டாா்ஸ் - டிவிஆா், ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (பே-டிஎம்), ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 10-13 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ, ஹிந்துஸ்தான் ஜிங்க், நெஸ்லே இந்தியா, மேன்கைண்ட் ஃபாா்மா, பஜாஜ் ஃபின்சா்வ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) இந்த வாரத்தில் நிகர விற்பனையாளா்களாக மாறியுள்ளனா். அதாவது அவா்கள் மொத்தம் ரூ.4,721.26 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இருப்பினும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) ரூ. 8,109.78 கோடிக்கு பங்குகளை வாங்கி மூலதனத்தை அதிகரித்துள்ளனா்.

மும்பை பங்குச்சந்தையில் மின்துறை, ஹெல்த்கோ், ஆட்டோ குறியீடுகள் தலா 5 சதவீதம், டெலிகாம் குறியீடு 4 சதவீதம், ஆயில் மற்றும் காஸ் குறியீடு 3.4 சதவீதம் உயா்ந்தன. ஆனால், வங்கிக் குறியீடு 2.5 சதவீதமும், ரியால்ட்டி குறியீடு 1.7 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளன.