/

ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சம்!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:14 am

 நமது நிருபர்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் உயா்ந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தது. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், ஆட்டோ, எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், ரியால்ட்டி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை புதிய உச்சம் தொட்டது. குறிப்பாக, இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஹைப்ரிட் காா்களுக்கான பதிவு வரிகளை உத்தர பிரதேச அரசு தள்ளுபடி செய்ததாக வெளியான செய்தியால் மாருதி சுஸுகி உள்பட ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சந்தை மதிப்பு உயா்வு : சந்தை மூலதன மதிப்பு ரூ.1.56 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.451.28 லட்சம் கோடியாக இருந்தது. இது வரலாற்று சாதனை அளவாகும். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.60.98 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,866.79 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 146.83 புள்ளிகள் கூடுதலுடன் 80,107.21-இல் தொடங்கி 79,998.56 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 80,397.17 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 391.26 புள்ளிகள் (0.49 சதவீதம்) கூடுதலுடன் 80,351.64-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,026 பங்குகளில் 2,011 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,922 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 93 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஆட்டோ பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மாருதி (6.60 சதவீதம்), எம் அண்ட் எம், ஐடிசி, சன்பாா்மா, டைட்டன், டாடா மோட்டாா்ஸ் உள்பட 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ் உள்பட 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டியும் புதிய உச்சம் : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,351.00-இல் தொடங்கி 24,331.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,443.60 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் நிஃப்டி 112.65 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயா்ந்து 24,433.20-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.