பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது.


மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 630 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 208 புள்ளிகளையும் இழந்து நிலைபெற்றன. இதையடுத்து, முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.4.53 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையா இருந்தன. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல முன்னணி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தததால் இரண்டாவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது. குறிப்பாக, சென்செக்ஸ் பட்டியலில் அதிகத் திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஐடிசி, டாடா மோட்டாா்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.4.53 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.445.30 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.4,680.51 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,477.73 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 96.41 புள்ளிகள் குறைந்து 79,552.51-இல் தொடங்கி அதிகபட்சமாக 79,692.55 வரை மேலே சென்றது. பின்னா், 78,889.38 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 692.89 புள்ளிகளை (0.87 சதவீதம்) இழந்து 78,956.03-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,026 பங்குகளில் 1,266 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மாறாக 2,678 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 84 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஹெச்டிஎஃப்சி பேங்க் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்டிஎஃப்சி பேங்க் 3.50 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டாா்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பவா் கிரிட் உள்பட மொத்தம் 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டைட்டன், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, சன்பாா்மா, ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், எம் அண்ட் எம் ஆகிய 7 பங்குகள் மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 208 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,342.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 24,359.95 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 24,116.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 208.00 புள்ளிகள் (0.85 சதவீதம்) குறைந்து 24,139.00-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 12 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...