ஒருமுறை நடவு செய்யப்படும் மிளகு கொடி, 4 ஆண்டுகளுக்கு பின் காய்ப்புக்கு வந்தாலும், நல்ல மகசூல் என்பது 7ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைக்கிறது. 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் மிளகு கொடிகளை, இயற்கை சீற்றத்திலிருந்து மட்டுமின்றி, நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும், கோடை காலத்தின்போது வில்ட் என்ற வைரஸ் தாக்குதல் மிளகு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே, கடின முயற்சிகளுக்குப் பின் அறுவடை செய்யப்படும் மிளகுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போதிய விலை கிடைக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியத்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு மிளகு இறக்குமதி செய்யப்படுவதே உள்ளூர் மகசூலுக்கான விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.