அழிவின் விளிம்பில் ஐஸ் உற்பத்தி தொழில்
நவீனமயமாக்கல் சூழலில், பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல், தமிழகத்தில் உள்ள பல சிறு, குறு, தொழில்கள் நலிவடைந்து வருகின்றன.


நவீனமயமாக்கல் சூழலில், பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல், தமிழகத்தில் உள்ள பல சிறு, குறு, தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. அந்த வரிசையில், ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு தொழில், பெருநிறுவனங்களின் விளம்பர கவர்ச்சியை சமாளிக்க முடியாமலும், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாகவும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 40 சிறு ஐஸ் தயாரிப்பாளர்கள் உள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் பெரும் தயாரிப்பாளர்களாக 2 நிறுவனங்கள் ஐஸ் தயாரிப்பு தொழிலில் களம் இறங்கியது முதல், ஐஸ் சிறு உற்பத்தியாளர்கள் கடும் சவாலை சந்திக்க நேரிட்டது.
500-க்கும் மேற்பட்ட சிறு ஐஸ் தயாரிப்பாளர்கள் தமிழகம் முழுவதும் இருந்தாலும், இத்தொழில் பாதுகாப்புக்காக இதுவரை மாநில அளவிலான சங்கங்கள் உருவாக்கப்படவில்லை. எனவே, காலச் சூழலுக்கு ஏற்ப இத்தொழிலை மேம்படுத்துவது, பெரு நிறுவனங்களுக்கு இணையாக தரத்தை உயர்த்துவது போன்ற அடுத்தகட்டம் நோக்கி இத்தொழில் வளர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஐஸ் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் பொருளாளர் எஸ்.வி.அய்யனார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 40 ஐஸ் உற்பத்தியாளர்கள் சிறு தொழிலாக செய்து வருகின்றனர். ஐஸ் உற்பத்தியாளர்கள் நல சங்கம் திண்டுக்கல் மாவட்டத்தை தவிர வேறு மாவட்டங்களில் முனைப்புடன் செயல்பட வில்லை. பெரிய அளவில் வருமானம் இல்லாத தொழில் என்பதால், மாநில அளவில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை.
பால், சர்க்கரை, சேமியா, ஜவ்வரிசி ஆகிய பொருள்களே ஐஸ் தயாரிப்புத் தொழிலுக்கு மூலப் பொருள்கள். கடந்த 20 ஆண்டுகளாக பெரு நிறுவன ஐஸ் தயாரிப்பாளர்களின் விளம்பர உத்தி, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. கவர்ச்சிக்கும், விளம்பரத்துக்கும் மாறிவிட்ட சமூகத்தில், தரமான பொருள்களைத் தயாரித்து விற்பனைக்கு கொண்டு சென்றாலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை.
எசன்ஸ் பொருள்களுக்கு மாற்றாக, ஏலக்காய் போன்ற இயற்கைப் பொருள்களை பயன்படுத்தினால் உற்பத்தி செலவு மேலும் அதிகரிக்கும். கூலி ஆள்கள் கிடைக்காத சூழலில், அதுபோன்ற விஷப் பரீட்சையில் இறங்க சிறு உற்பத்தியாளர்கள் தயாராக இல்லை. இந்த சூழல், பெரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது.
ரூ.2 முதல் ரூ.20 வரையிலான ஐஸ் ரகங்களை உற்பத்தி செய்கிறோம். ரூ.2-க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அதனை ரூ.5-க்கு விற்பனை செய்கின்றனர்.
மூலப் பொருள்கள் மட்டுமின்றி, தண்ணீருக்கும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையில், தொழிலாளர்களுக்கும் அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே கூலியாக வழங்க முடிகிறது. இதனால், இந்த தொழிலுக்கு யாரும் வருவதில்லை.
இதனால் பெருநிறுவனங்களின் உற்பத்திகளை மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் முகவர்களாகப் பலர் மாறி விட்டனர் என்றார்.
ஐஸ் வியாபாரி ஆரோக்கியதாஸ் (51) கூறியது: கடந்த 36 ஆண்டுகளாக ஐஸ் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த காலங்களில் விற்பனை செய்த பால் ஐஸ், சேமியா ஐஸ், மேங்கோ உள்ளிட்ட ரகங்களை தற்போதுள்ள கிராம மக்கள் கூட வாங்கத் தயங்குகின்றனர். தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் ரகங்களைக் கேட்டுப் பெறும் நிலை உள்ளது. இதனிடையே பெரு நிறுவன தயாரிப்பு ஐஸ் மற்றும் ஐஸ் கிரீம்கள், ஆட்டோ மூலம் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களையும் சுற்றி வருகின்றன. நகர்ப்புறங்களில் இருப்பதுபோல கிராமங்களிலும் ஐஸ் கிரீம் பார்லர் விற்பனை தொடங்கிவிட்டனர்.
இதனால், வீடு தேடி வந்த ஐஸ் என்ற காலம் போய், ஐûஸ தேடி கடைகளுக்குச் செல்லும் நிலை வந்துவிட்டது. பெரு நிறுவனங்களின் வளர்ச்சியால், சைக்கிளில் பெட்டியை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றும் ஐஸ் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...