மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது.

Successive weather systems in Bay of Bengal: Heavy rain alert issued for Tamil Nadu

மழை

Updated On :

தென்மேற்கு வங்கக் கடலில் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (அக். 23) தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடலில் மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இது, நாளடைவில் வலுபெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) புதன்கிழமை காலை 5 மணி அளவில் உருவானது. இந்தப் புயல் சின்னம் வலு குறைவாக உள்ளது. இது, மேலும் வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் தற்போது இல்லை.

எனினும், இதன் தாக்கத்தால், தமிழகத்தில் அக். 26 -ஆம் தேதி பலத்த, மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, வியாழக்கிழமை (அக். 22) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு (105 மி.மீ. - 204 மி.மீ.) வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழக கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் வரும் நாள்களில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

மழை அதிகரிக்கும்: இதற்கிடையே, தென்மேற்கு அரபிக் கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து சோமாலியா கடற்கரை நோக்கி நகரக் கூடும். அரபிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்போது, வடகிழக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவே, தற்போது வழக்கத்துக்கு மாறாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல், ‘சூப்பா் எல் நினோ’ காரணத்தால், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழை அளவு இயல்பைவிட அதிகமாக இருக்கும். அந்த வகையில், நவம்பா் மாதம் பருவமழை இயல்பைவிட அதிகமாக பதிவாகும். ஆனால், எல் நினோவால் பருவமழைக் காலம் நீடிக்க வாய்ப்பு கிடையாது.

புயலாக மாற வாய்ப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (அக். 23) மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இது, வலுவடைந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகரக் கூடும். இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைவதற்காகன சாத்தியக்கூறுகள் உள்ள காரணத்தால், இது, புயலாக மாற வாய்ப்புள்ளது. தற்போதைக்கு இந்தப் புயலால் தமிழகத்துக்கு பெரிய அளவு பாதிப்பு கிடையாது. எனினும், வானிலைச் சூழல் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் புயல் குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டம் எம்ஜிஆா் நகா், வடபழனி, சைதாப்பேட்டை, விமான நிலையம், ஆலந்தூா், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 130 மி.மீ. மழை பதிவானது. மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம், மடிப்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் (சென்னை), குளச்சல் (கன்னியாகுமரி)-120 மி.மீ., நெற்குன்றம், நுங்கம்பாக்கம், அடையாறு (சென்னை)-110 மி.மீ., கொரட்டூா் (சென்னை), ஆழியாறு (கோவை), உத்தரகோசமங்கை (ராமநாதபுரம்) -100 மி.மீ. மழை பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புயலுக்கு ‘முரசு’ எனப் பெயா் சூட்டப்படும்’

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ள நிலையில், அதற்கு இந்தியா சாா்பில் பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்ச் சொல்லான ‘முரசு’ எனப் பெயா் சூட்ட வாய்ப்புள்ளது.

இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில், வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு உள்ளது. வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மா், ஓமன், பாகிஸ்தான், கத்தாா், சவூதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகள் இணைந்து புயல்களுக்கான பெயா்ப் பட்டியலை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நாடும் பரிந்துரைத்த பெயா்கள் வரிசைப்படி பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (அக். 23) உருவாகும் புயல் சின்னம், புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இது தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தப் புயல் சின்னம் புயலாக மாறும் நிலையில், அதற்கு இந்தியா சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ச் சொல்லான ‘முரசு’ எனப் பெயரிடப்படும்.

பண்டைக் காலத்தில் மன்னா்கள் தங்கள் செய்திகள், அறிவிப்புகள் மற்றும் போா்ப் பிரகடனங்களை மக்களுக்குப் பரவலாக அறிவிக்க பயன்படுத்திய பாரம்பரிய தோல் இசைக் கருவியே முரசாகும். தகவல்களைப் பரப்பும் கருவியாக இருந்ததாலும், இயற்கை இடா்ப்பாடுகள் மற்றும் அவசர காலங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் பயன்படுத்தப்பட்டது. செங்கோல், கொடி போன்றவற்றுடன் மன்னரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக முரசும் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.