‘6 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவரின் நடவடிக்கை செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் ராஜிநாமா கடிதத்தை வழங்கிய விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர். - (கோப்புப்படம்)
அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் நடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதனால், கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 4 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.
கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் - மரகரம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, இந்த 4 பேரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது சட்டவிரோதமானது எனக் கூறி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஜூன் 15-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் பேரவைத் தலைவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிநாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா? என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
ராஜிநாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால், இது சம்பந்தமாக பேரவைத் தலைவர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ராஜிநாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது பற்றி ஆளுநருக்கும் புகாரளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
பேரவைத் தலைவர் தரப்பில், ராஜிநாமா ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜிநாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். எம்.எல்.ஏ. ராஜிநாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜிநாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகிவிடும்.
சுய விருப்பப்படி ராஜிநாமா செய்தாரா என்பதை மட்டும் தான் விசாரிக்கமுடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜிநாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜிநாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜிநாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. பேரவைத் தலைவர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.
ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால்தான் ஊழல் நடவடிக்கை. எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல். எம்.எல்.ஏ.வின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா உண்மையானவை; சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை. நேரில் சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜிநாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும்” என்றும் வாதிடப்பட்டது.
சட்டப்பேரவை செயலர் தரப்பில், “உண்மையாக சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை பேரவைத் தலைவர் ஏற்காமல் இருக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், “ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது சரியே; தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் ராஜிநாமா ஏற்க தடையில்லை; ராஜிநாமா ஏற்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியானது என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தகுதி நீக்க நடவடிக்கை பற்றிய முடிவை பேரவைத் தலைவர் 2 மாதங்களில் எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Summary
Madras High Court Chief Justice Sushrut Arvind Dharmadhikari and Justice G. Arul Murugan uphold Tamil Nadu Assembly Speaker J.C.D. Prabhakar's decision to accept the resignations of six AIADMK MLAs between May 26, 2026 and June 29, 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

