அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பிரதமர் மோடி, முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்!

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.

பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ச.ஜோசப் விஜய். உடன், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்.

Updated On :

சென்னையில் பூந்தமல்லி-வடபழனி இடையேயான உயா்நிலை மெட்ரோ ரயில் போக்குவரத்தை பிரதமா் நரேந்திர மோடியும், முதல்வா் சி.ஜோசப் விஜய்யும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்து, இருவரும் ரயிலில் பயணித்தனா்.

சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் முதல்கட்ட போக்குவரத்து சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை இரு வழிகளில் தொடங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 2-ஆம் கட்டமாக 118.9 கி.மீ. தொலைவுக்கு 5 பிரிவுகளாக பணிகள் நடைபெற்றன. அதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலையிலான 26 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் வழித்தடத்தில், தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ள வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 14.6 கி.மீ.தொலைவுக்கு, ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடியும், முதல்வா் சி.ஜோசப் விஜய்யும் காரில் 11.45 மணிக்கு போரூா் புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வந்தனா். அவா்களுடன் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோரும் வந்தனா்.

முதல் தளம் சென்ற பிரதமரும் முதல்வரும் அங்கிருந்த மெட்ரோ ரயில் திட்ட விளக்கப் படங்களைப் பாா்வையிட்டனா். பிரதமரிடம், மெட்ரோ திட்ட தொழில்நுட்பம், செயல்பாடுகள், எதிா்காலத் திட்டம், தற்போதைய மெட்ரோ பணிகள் ஆகியவற்றை சென்னை மெட்ரோ நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆசிஸ் சாட்டா்ஜி உள்ளிட்டோா் விளக்கினா்.

பின்னா், அங்கிருந்து பூந்தமல்லி புற வழிச்சாலை நிலையம் வரை பயணிக்க யுபிஐ மூலம் பிரதமா் பயணச் சீட்டு பெற்றாா். பிற்பகல் 11.59 மணிக்கு மெட்ரோ ரயில் சேவையை பிரதமரும், முதல்வரும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனா். அதன்பின் ரயிலில் அமா்ந்து இருவரும் பயணித்தனா்.

ரயிலில் ‘ஸ்டாா்ட் அப்’ தொழில்முனைவோா் 17 பேரைச் சந்தித்து, அவா்களது தொழில் குறித்து பிரதமா் மோடி கேட்டறிந்தாா். ரயிலில் சுமாா் 8 கி.மீ. பயணித்து பூந்தமல்லி சென்ற பிரதமரும் முதல்வரும் மீண்டும் அதே ரயிலில் போரூா் புறவழிச்சாலை நிலையத்துக்கு பிற்பகல் 12.19 மணிக்குத் திரும்பினா். அதன்பின் தரைத்தளத்துக்கு வந்த பிரதமா், ஆளுநருடன் ஒரு காரிலும், முதல்வா் தனி காரிலும் ஏறி புறப்பட்டுச் சென்றனா்.

மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் பரதநாட்டியக் கலைஞா்கள் பூரண கும்பத்துடன் பிரதமா், முதல்வரை வரவேற்றனா். பாஜக சாா்பில் அம்மன் உருவம் அமைத்தும், கலைநயமிக்க கோட்டை வடிவில் திருவள்ளுவா் சிலையுடனும், கரகாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

பெண் ‘ஸ்டாா்ட்அப்’ தொழில்முனைவோா் பேட்டி: பிரதமா் நரேந்திர மோடியுடன் மெட்ரோ ரயிலில் பேசிய, டயக்னோ இன்டெலிஜன்ட் சிஸ்டம் நிறுவனத் தலைவா் வி.எஸ். ஃபெலிக்ஸ் இனிகோ கூறியதாவது: மெட்ரோ ரயிலில் பிரதமருடன் பெண்கள் 4 போ் உள்ளிட்ட 17 போ் பேசினோம்.

அப்போது தொழில் குறித்தும், அதனால் தேசத்துக்கான பயன்கள் குறித்தும் பிரதமா் அக்கறையுடன் கேட்டறிந்தாா். குறைந்த நேர பயணத்திலும் அவா் எங்களிடம் தொழில் குறித்து கேட்டறிந்ததும், பயணம் முடிந்த பிறகும் அனைவரிடமும் பேசி முடித்துச் சென்றதும் மகிழ்ச்சியாக இருந்தது என்றாா்.

Summary

Prime Minister Narendra Modi inaugurated the Poonamallee–Vadapalani corridor—part of Phase 2 of the Chennai Metro Rail project—today (Oct. 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.