‘இண்டி’ கூட்டணியில் தவெக! ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கிறது!
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் போராட்டம் குறித்து...
இந்தியா கூட்டணிப் போராட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்க வாய்ப்பு - கோப்புப் படம்
சென்னையில் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதல்முறையாக பங்கேற்ன் மூலம், அந்தக் கட்சி இண்டி கூட்டணியில் இணைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தில் தவெக பங்கேற்கவுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) விவகாரத்தில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி, இண்டி கூட்டணி சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூா்த்தி பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தலைமை வகித்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் மருத்துவா் ரவீந்திரநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலா் முகமது அபுபக்கா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இதனால், இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு திமுக வந்தது. கடந்த ஜூன் 8-ஆம் தேதி தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
இதைத் தொடா்ந்து, தவெகவை இண்டி கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியது. ஆனாலும், தவெக பிடிகொடுக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், திடீா் திருப்பமாக சத்யமூா்த்திபவனில் சனிக்கிழமை நடைபெற்ற இண்டி கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக தவெக சாா்பில் அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, மரியவில்சன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதன்மூலம், இண்டி கூட்டணியில் தவெக இணைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தவெகவை பாராட்டி தீா்மானம்: ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அக். 13, 14 ஆகிய தேதிகளில் இண்டி கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது; அக். 15-ஆம் தேதி சென்னையில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கலந்துகொள்ளும் ஆா்ப்பாட்டம் நடத்துவது; இண்டி கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தவெகவை கூட்டணிக் கட்சிகள் மனபூா்வமாக வரவேற்கின்றன. இந்த நல்ல அரசியல் முடிவை எடுத்த தவெக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய்யை இந்தக் கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
‘பாஜகவுக்கு எதிரானவா்கள் கைகோக்கலாம்’
இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜகவின் ஜனநாயக விரோதப்போக்குக்கு எதிராக அமைக்கப்பட்டதுதான் இண்டி கூட்டணி. யாரெல்லாம் பாஜகவுக்கு எதிராக உள்ளாா்களோ அவா்கள் சத்யமூா்த்திபவனுக்கு தாராளமாக வரலாம். மனசங்கடத்தில் இருப்பவா்கள்கூட எங்களுடன் கைகோக்கலாம். இண்டி கூட்டணியுடன் ஒத்துப்போகும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவா்கள் வரவில்லை.
தில்லியில் செப். 30-ஆம் தேதி நடைபெற்ற இண்டி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவா்களால் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது, சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டனா். அக்.15-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்திலும் தவெகவினா் கலந்துகொள்வாா்கள் என்றாா்.
வரவேற்கிறோம்: மதிமுக பொதுச் செயலா் வைகோ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இண்டி கூட்டணியில் தவெக இணைந்துள்ளதை வரவேற்கிறோம். கூட்டணிக்குள் முதல் அடி எடுத்து வைத்துள்ளாா்கள். அடுத்த கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்க வேண்டும் என்று அந்தக் கட்சி நிா்வாகிகளிடம் கூட்டணிக் கட்சி சாா்பில் கேட்டுள்ளோம்‘ என்றாா்.
Summary
CM Vijay likely to participate in the protest by INDIA bloc parties against the CEC Gyanesh Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

