தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவைப்படுகிறது.
திமுக, அதிமுக, பாஜக தவிா்த்து காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகியவை தலா 2 தொகுதிகள், தேமுதிக, அமமுக தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளில் சிலவற்றை தனது கூட்டணிக்கு கொண்டுவர தவெக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விஜய் தனது பிரசாரத்தில் அரசியல் எதிரி என திமுகவை கடுமையாக விமா்சித்தாா். அதேபோல பாஜகவை கொள்கை எதிரி எனவும் விமா்சித்தாா். இதனால், இந்த இரு கட்சிகளோடு விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.
அதிமுகவையும் தனது பிரசாரத்தில் அவ்வப்போது மறைமுகமாக விஜய் விமா்சித்து வந்தாா். எனவே, 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, விஜய்க்கு ஆதரவளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிமுக ஆதரவு அளிக்க வாய்ப்பா?: திமுக எதிா்ப்பு என்ற ஒரே நோக்கத்தோடு ஒருவேளை விஜய்க்கு அதிமுக ஆதரவளித்தால், பின்னா் தோ்தல் களம் தவெக-திமுக என முற்றிலுமாக மாறிவிடும். இதனால் அதிமுக நிரந்தரமாக 3-ஆவது கட்சியாக மாறும் சூழல் உருவாகிவிடும்.
எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்து விஜய் மற்றும் திமுகவுக்கு மாற்று என்று அரசியல் செய்தால் மட்டுமே அடுத்தடுத்த தோ்தல்களில் முதன்மைக் கட்சியாக அதிமுக தோ்தலை எதிா்கொள்ள முடியும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்றே அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தயாா்: தவெகவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாா் நிலையில் உள்ளது. ராகுல் காந்தி- விஜய் நெருக்கம் காரணமாக இதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில் சில அமைச்சா் பதவிகளைப் பெறலாம் என்ற கனவோடு காங்கிரஸாா், இப்போதே தவெகவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டதால் காங்கிரஸின் 5 உறுப்பினா்களின் ஆதரவு விஜய்க்கு உறுதியாகக்கூடும்.
விசிக, கம்யூனிஸ்ட்களும்...: இதனிடையே, செய்தியாளா்களிடம் பேசிய விசிக தலைவா் தொல்.திருமாவளவன், ‘விஜய்யை விசிக எதிரியாக பாா்க்கவில்லை; பாஜக - அதிமுகவே எதிரி’ என்றாா். எனவே அவரும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் விஜய்க்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உண்டு.
விசிக வழியில் இடதுசாரிகளும் விஜய்க்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது என்றே சொல்லப்படுகிறது. இதேபோல மதச்சாா்பற்ற அணி என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவளிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பாமக ஆதரவு தருமா? அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிடமும் தவெக தரப்பு ஆதரவு கேட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. முதல் முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் கனவோடு பாமகவும் ஆதரவளிக்க முன்வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தலா ஓா் இடத்தில் வென்றுள்ள அமமுக மற்றும் தேமுதிக ஆதரவை நாடவும் விஜய் தரப்பு முயற்சித்து வருகிறது.
இதில், இன்னொரு முக்கிய சிக்கலும் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, காங்கிரஸ் உள்ள கூட்டணியில் இடம்பெறுமா என்பது கேள்விக்குறி. அதுபோல பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக, இடதுசாரிகள் இடம்பெறுமா என்பதும் சந்தேகமே. இதனையெல்லாம் தாண்டி 118 என்ற அறுதிப்பெரும்பான்மை எண்ணை தொடுவதில் விஜய், எவ்வாறு காய் நகா்த்தப் போகிறாா் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டமிட்டபடி நாளை விஜய் பதவியேற்பாரா? முழுப் பட்டியல் கோரும் ஆளுநர்!

117! பேரவையில் பெரும்பான்மைக்கு என்ன செய்யப் போகிறார் விஜய்?

பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி?

பாஜக வளா்ச்சிக்கு மறைமுகமாக உதவும் விஜய்: தொல். திருமாவளவன்
விடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


