நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தவெக அரசின் முதல் கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்... !

தவெக அரசின் முதல் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து...

News image

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

Updated On :18 ஜூன் 2026, 11:14 am IST

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா பெயரை சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

மக்கள் தீர்ப்பு

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக. விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்; சட்டப்பேரவையில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புகிறேன்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

1967-இல் அண்ணா, 1977-இல் எம்ஜிஆர், அதற்கு பின் 2026 இல் தமிழக அரசியலில் புதிய வரலாற்று புரட்சி நடந்துள்ளது. 74 ஆண்டுகால வரலாற்று தமிழக அரசியலில் தவெக ஆட்சியின் முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கியுள்ளார்.

விசில் புரட்சி

பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளிவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் முதல்வர் விஜய்.

* மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும்.

* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டும் ஒடுக்கப்படும். கடுமையான தண்டனை வழங்கப்படும்.

* உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

* மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். மத்திய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

* போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

* அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.

* பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.

* தவெக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்.. பின்பற்றும். அதில் உறுதியாக உள்ளது. இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.

* மும்மொழிக் கொள்கையால் கல்விக்கான நிதி சுமார் ரூ. 4,000 கோடியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கப்படவில்லை.

* மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்து நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

* இந்து சமய அறநிலையத் துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை இந்த அரசு மேற்கொள்ள உள்ளது.

* கோயில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது இந்த அரசால் உறுதி செய்யப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

* தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

* முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தவெகஅரசு வெளியிட உள்ளது.

*தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* முதலீடுகளை ஈர்க்க, தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.

* இந்த ஆணையத்தின் மூலம், ரூ.200 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு விரைந்து தொழில் தொடங்க அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் தொடங்குவதற்கான அனுமதியை எளிமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு கால வளர்ச்சிக்கான வெற்றி தமிழகம் என்ற தொலைநோக்கு திட்டம் அறிவிக்கப்படும்.

* இயற்கை வள கொள்ளையை தடுத்து தமிழகத்தின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* டெண்டர்கள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கபப்டும்.

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் இதுதொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சமூக நீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

** ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. கர்நாடக அரசு மேகேதாட்டு அணைய கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க தவெக அரசு உறுதியான சட்டரீதியான நடவடிக்கைள் எடுக்கப்படும்.

* கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்று தர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

** நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கவும், அதனைத் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி, தென் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைக்க தவெக அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும்.

* கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை தடுக்கவும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அணையின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.

* சட்ட விரோத கனிவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

* தமிழகத்தில் மீனவர்கள் தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் மாறினாலும் பிரச்னை முடிவுக்கு வந்தபாடில்லை. இதுதொடர்பாக தவெக அரசு சார்பில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

** சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்மொழியை வழக்காடும் மொழியாக பயன்படுத்தவும், உச்ச நீதிமன்றைக் கிளையை சென்னையில் அமைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், கல்வியானது பொதுப்பட்டியில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு தேசியக் கல்விக் கொள்கை திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியை பொதுப்பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தவெக அரசு மேற்கொள்ளும்.

* மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ள தேவையான உதவிப்பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் நிரப்புவதற்கு தவெக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்.

* உயர்கல்வித் துறையில் பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்களை இந்த அரசு கொண்டு வரும். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த உயர்க்கல்வி தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்கப் பெறும்.

* காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதிலும், தமிழ்நாட்டின் வனப் பரப்பு மற்றும் பசுமைப் பரப்பினை உயர்த்துவதிலும், சதுப்புநிலக் காடுகள், ஈரநிலங்கள், கடலோர பகுதிகள் என அனைத்து வகையான சூழிலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளைப் பாதுகாப்பதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்படும்.

* நிலத்தடி நீர்மட்டை உயர்த்தவும், மழைக்காலங்களில் வரும் நீரை சேமிக்கவும் ஏதுவாக ஏரிகள் மற்றும் குளங்கள் பராமரிப்புத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும்.

* கடலுக்குச் செல்கின்ற நீரைத் தடுக்கும் வகையில் மழைநீரைச் சேமிக்கும் வகையிலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, அழகன்குளம், அரிக்கமேடு, சலுவன்குப்பம் மற்றும் பூம்புகார் ஆகிய தளங்களில் தொடர்ந்து தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

* கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகிய இரு தளங்களுக்கு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் கிடைக்கவும், இத்தளங்களுக்கு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் இந்த அரசு வழிவகை செய்யும்.

* ஆதிச்சநல்லூர், கொடுமணல், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய பண்பாட்டுத் தளங்களில் மிகை மெய்மை மற்றும் மெய்நிகர் தோற்றம் ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழர் நாகரிகம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, அதன் அனுபவம் வழங்கப்படும்.

* மாநிலத்தின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணிக்காக்கும் வகையில், ஒரு வரிவான நிலையான சுற்றுலா கொள்கை வகுக்கப்படும்.

* சுற்றுச்சூழல் பாதுகாப்போடு உள்கட்டமைப்பை மேம்படுத்தி, தமிழ்நாட்டை உலகளாவிய பாரம்பரிய மற்றும் சூழல்சார் சுற்றுலாத் தலமாக இந்த அரசு மாற்றும்.

* வரும் 2036-க்குள் தமிழ்நாட்டை 15 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்ற முதல்வர் விஜய் இலக்குடன், தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற கொள்கையில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

* வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே இந்த அரசின் முதன்மையான குறிக்கோள்.

* வறுமை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அரசின் நலத் திட்டங்களை சென்றடைவதை உறுதி செய்வதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் இந்த அரசு ஏற்படுத்தித் தரும்.

* 2031-க்குள் நகர்ப்புறச் சிறப்பிற்கான இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாடு திகழும்.

* மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியும் தங்களது குடிமக்களுக்கு உயர்தர வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையில் தூய்மையான குடிநீ்ர் விநியோகம், நவீன நகர்ப்புறக் கட்டமைப்பு, பசுமையான மற்றும் தூய்மையான சூழல், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்புகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கும்.

* செயற்கை நுண்ணறிவிற்கு(ஏஐ) தனி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் வரம்பை செயற்கை நுண்ணறிவையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது.

* அரசுத் துறைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களுக்குச் சிறந்த மின்-ஆளுமை சேவைகளை வழங்கவும், இந்த துறைய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தத் துணைபுரியும்.

* தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

* ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகநீதியினை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு திகழும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திடங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும்.

* அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த அரசு செயல்படுத்தும்.

* அரசின் நலத் திட்டங்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு செயலாற்றும்.

* தவெக அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்றார்போல அனைவருக்குமான அரசாக, மக்களுக்கான அரசாக, விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக, வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி இந்த அரசு செயல்படும்.

PDF
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை - முழு விவரம்...
பார்க்க

Summary

Regarding the key highlights of the Governor's address during the first session of the TVK government...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.