தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக தலைமை தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “நடந்து முடிந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் '5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், “கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000-க்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு.
மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் சுளிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை த.வெ.க. அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
ஆட்சிக்கு வந்த குறுகிய நாள்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை த.வெ.க. அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, அதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டச் செயலர் இரா. பசுபதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
விவசாயப் பெருங்குடி மக்கள் நலனையும், பொதுமக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has announced that a massive protest demonstration will be held to urge the government to fulfill its election promises and to resolve the power outages on a war footing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










