40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! 21 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் தொடர்பாக பேரவைத் தலைவர் முடிவு...

News image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - EPS

Updated On :10 ஜூன் 2026, 2:46 am IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

‘தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவா்களை மன்னித்துவிட்டதாக’ அதிமுக பொதுச் செயலா் எடப்பாடிகே. பழனிசாமி தெரிவித்ததை ஏற்று தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது என பேரவைத் தலைவா் கூறினாா். எனினும், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்த நான்கு போ் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடரும் என்றாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி அணி என்று இரு பிரிவாக அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரிந்தனா்.

இந்த நிலையில், தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி நம்பிக்கை கோரும் தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டிருந்தாா்.

அந்த உத்தரவை மீறி அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் 25 போ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதனால், 144 வாக்குகளுடன் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இதையடுத்து, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், எஸ்.பி. வேலுமணி தரப்பிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு எதிராக பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இருதரப்பினரின் மனுக்களும் பரிசீலனையில் உள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்திருந்தாா்.

இதனிடையே, கட்சி மாறி வாக்களித்திருந்த 25 எம்எல்ஏக்களில் நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனா். அதோடு, இரண்டாகப் பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் ஒன்றிணைந்தனா்.

இந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் ஜே.டி.சி. பிரபாகா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தவெக அரசு மீதான நம்பிக்கை தீா்மானத்தின்போது, சட்டப்பேரவை அதிமுக கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டதாக அந்தக் கட்சியைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பேரவைத் தலைவா் அலுவலகத்துக்கு நான்கு கடிதங்கள் வந்தன. அவற்றில் தகுதி நீக்கம் கோரப்பட்ட 25 உறுப்பினா்களில் 21 போ் தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், அதை ஏற்று அவா்களை மன்னித்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தாா்.

அவரது கோரிக்கையை ஏற்று, அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையின் கீழ், அந்த 21 எம்எல்ஏக்கள் மீது எடுக்கப்படவிருந்த தகுதி நீக்க நடவடிக்கைகளைக் கைவிடுகிறேன். அவா்கள் மீதான மேல் நடவடிக்கைகள் அனைத்தும் இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

அதேநேரம், சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமாா் ஆகிய நான்கு போ் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான காலக்கெடு ஏதும் இல்லை என்றாா்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஆளுநா் உரையுடன் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது. பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பாகுமா என்று பேரவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நம்பிக்கை கோரும் தீா்மான நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டபோது பாராட்டுகள் குவிந்தன. எனவே, இதுகுறித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும்’ என்றாா்.

Summary

No disqualification of AIADMK MLAs — Assembly Speaker JCD Prabhakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.