சென்னையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தினமும் பல பில்லியன் நுண் நெகிழிகள் (மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்) நீர்நிலைகளில் கலப்பதாக புதிய ஆய்வொன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை லயோலா கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ. ஸ்டான்லி ராஜ் மற்றும் நுண் நெகிழிகள் பிரிவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மாணவர் திரு. ரொனால்ட் வின் ராய் இ. ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த திடுக்கிடும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆய்வானது சென்னையின் முக்கிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களாக விளங்கும் கொடுங்கையூர் மற்றும் கோயம்பேடு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலைகளுக்கு வரும் கழிவுநீரில் ஒரு லிட்டருக்கு சுமார் 4800 (கொடுங்கையூர்) முதல் 5443 (கோயம்பேடு) நுண் நெகிழித் துகள்கள் வரை இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முறையே 93 சதவீதம் மற்றும் 96 சதவீதம் அளவுக்கு நுண் நெகிழிகளை அகற்றும் திறனைப் பெற்றிருந்தாலும், மீதமுள்ள துகள்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த 2 நிலையங்களில் இருந்து மட்டும் தினமும் சுமார் 28.2 பில்லியன் முதல் 28.4 பில்லியன் வரையிலான நுண் நெகிழித் துகள்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படாமல் சென்னையின் நீர் நிலைகளிலும் கால்வாய்களிலும் கலக்கின்றன என்பது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 25 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுடைய மிகச்சிறிய நுண் நெகிழிகளை வடிகட்டும் திறன் தற்போதைய சுத்திகரிப்பு முறைகளில் இல்லை என்பதே இந்த மாபெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் பாலிஎதிலீன், பாலிப்ரோப்பிலீன், பாலியூரிதீன் மற்றும் செல்லுலோஸ் அசிடேட் போன்ற பல்வேறு வகையான பிளாஸ்டிக் மூலக்கூறுகள் அதிக அளவில் காணப்பட்டன. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஆடைகளில் இருந்து வெளிவரும் நுண்ணிய இழைகளே பெரும்பாலும் இவ்வாறு கழிவுநீரில் கலக்கின்றன. இந்த நுண் நெகிழிகள் தொடர்ந்து நீர்நிலைகளைச் சென்றடைவதால் நீர்வாழ் உயிரினங்களுக்கும், நிலத்தடி நீருக்கும் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் பெருகிவிட்ட நிலையில் இந்த நிலையங்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் புகுத்துவது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நுண் நெகிழிகளை முழுமையாக அகற்றும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. இந்த கண்ணுக்குத் தெரியாத பிளாஸ்டிக் மாசுபாட்டிடம் இருந்து நமது நீர்நிலைகளைப் பாதுகாக்க, நவீன மற்றும் மேம்பட்ட வடிகட்டல் தொழில்நுட்பங்களை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உடனடியாக நிறுவ வேண்டியது அவசியமாகிறது. மேலும், நுண் நெகிழி மாசைக் கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைத்துள்ளனர்.
Summary
28 billion microplastics enter Chennai's water bodies every day! Shocking findings from a study!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

தண்ணீா் தெளிப்பான்களை வாங்க ரூ. 1.17 கோடி செலவிட்ட டிஎம்ஆா்சி: ஆா்டிஐ பதிலில் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் பணியிடமாற்றம்

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



