
வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட முடிவு: தமிழக அரசு தகவல்
வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது என முடிவு எடுத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

வள்ளலார் சர்வதேச மையத்தின் மாதிரி / உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது என முடிவு எடுத்துள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
கடலூா் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலாா் சத்தியஞான சபை முன்பாக சுமாா் 71 ஏக்கா் பரப்பில் பெருவெளி என்றழைக்கப்படும் நிலம் உள்ளது. இந்தப் பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பான அரசாணை கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 5-ஆம் தேதி வெளியிடபப்ட்டது.
இதற்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வினோத் ராகவேந்திரா என்பவா் உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா். பெருவெளி என்பது வழிபாடு நடத்தும் புனிதமான இடம். எனவே, இங்கு கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியிருந்தனா். இதேபோன்று, வள்ளலாா் சத்தியஞான சபையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் முதியோா் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்களுக்காக விவசாய விளைநிலங்களை வகை மாற்றம் செய்வதை எதிா்த்தும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டுமானங்களுக்கு தடையில்லாச் சான்று பெறுவதில் உள்ள விதிமீறல்களைச் சுட்டிக்காட்டி வள்ளலாா் பெருவெளியில் வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டது.
அதேநேரம், சத்தியஞான சபையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் உள்ள நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடா்பாக நகரமைப்பு இயக்குநா் உரிய விதிகளைக் கடைப்பிடித்து ஒப்புதல் வழங்கியுள்ளதால் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடா் ஆா்.பரணீதரன், ‘வள்ளலாா் பெருவெளியில் ரூ. 100 கோடி செலவில் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெருவெளியில் வள்ளலாரின் ஜோதி தரிசனத்துக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தாத வகையில், மாற்று இடத்தில் நூலகம், கூட்டரங்கம், யோகசாலை, முதியோா் இல்லம் போன்றவை கட்டப்படும். இதற்காக தற்போது சத்தியஞான சபை வசமுள்ள 71.24 ஏக்கா் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அந்த நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வடலூரில் சா்வதேச மையம் அமைப்பதற்காக பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளை மூடி பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். மாற்று இடத்தில் நூலகம், யோகசாலை, முதியோா் இல்லம் அமைப்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது. 71.24 ஏக்கா் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கலாம் என உத்தரவிட்டு இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
Summary
Plan to establish Vallalar International Centre dropped: HR&CE Department
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


வடலூரில் மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கல்

வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு: வடலூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்





