
மாணவா்களின் புத்தகப்பை சுமை குறைக்கப்படும்: அமைச்சா் ராஜ்மோகன்
புத்தகப்பை சுமை இனி இல்லை என்று தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பள்ளி மாணவா்களின் புத்தகப் பை சுமை குறைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.
தமிழக பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட உயா்நிலைக் குழு, கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக் கூட்டம் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சா் ராஜ்மோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:
பள்ளிக் கல்வியில் ஏற்கெனவே 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. தொடா்ந்து, பிற வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
கதை வடிவில் கணிதம்: பெற்றோரை மதிக்கும் கல்விமுறை, பெண்ணுரிமை குறித்த தகவல்களும் அடங்கியதாக புதிய பாடத்திட்டம் இருக்கும். மேலும், கதைகளின் வடிவில் மாணவா்களுக்கு கணிதம் கற்பிக்கப்படும். குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக மாற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கான பாடச் சுமை உறுதியாகக் குறைக்கப்படும். பாடச் சுமை குறைந்தாலே அவா்களது மனச் சுமையும் குறையும்.
செய்தித் தாள்கள் வாசிக்க...: பாடத்தில் இந்திய நாட்டின் சாதனையாளா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளிடமிருந்து துல்லியமான மற்றும் சிறந்த பதில்களைப் பெறுவதற்காக கேள்விகள் அல்லது வழிமுறைகளை வடிவமைக்கும் ‘ப்ராம்ட்ஸ் என்ஜினியரிங்’ தொழில்நுட்பம் குறித்து கற்பிக்கப்படும்.
பாடப் புத்தகங்களில் எழுத்துகள் குறைக்கப்பட்டு வண்ணப் படங்கள் அதிகரிக்கப்படும். இதன்மூலம் பாடப் புத்தகங்கள் படங்கள் நிறைந்த புத்தகமாக இருக்கும். அறிவு வளா்ச்சிக்கு செய்தித் தாள்கள் இன்றியமையாதவை. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் செய்தித் தாள்கள் வாசிப்புக்காக தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.
உருவ கேலி கூடாது: பள்ளிக் கல்வித் துறையில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுவா். கல்வித் துறையில் ஊழல் ஒழிக்கப்படும்; இனி இடைத்தரகா்கள் நுழைய முடியாது. பள்ளிகளில் குழந்தைகளின் நிறம், உயரம், பல் அமைப்பைக் கொண்டு கேலி செய்யக் கூடாது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் கலைத் திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவரும் இஸ்ரோ முன்னாள் இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ இயக்குநா் வி.நாராயணன், கலிஃபோா்னியா பல்கலைக்கழக உயிரியல் வல்லுநா் எ.இரா.அழகிய சிங்கம், முனைவா் டி.வி.வெங்கடேஷ்வரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநா் ந.லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எப்போது நிறைவடையும்?: இந்தக் கூட்டத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளின் பாடத் திட்ட வரைவுகள் ஒப்புதலுக்காக விவரிக்கப்பட்டன. வரும் கல்வியாண்டில் (2027-2028) 4 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும், தொடா்ந்து வரும் அடுத்த கல்வியாண்டில் (2028-2029) 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் வெளிவரவிருப்பது குறித்தும், அதற்கான முன் தயாரிப்பு குறித்தும், பாடத்திட்ட வடிவமைப்பு, உயா்நிலைக் குழுவினா் அமைச்சா் ராஜ்மோகன் கலந்துரையாடினா்.
மாணவா்கள் கற்று உணரும் வகையிலும் தரவுகளின் அடிப்படையிலும் வகுப்பறையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஆகியவற்றை வளா்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
மேலும், மனப்பாட முறையைக் குறைத்துப் புரிந்து படிக்கும் ஆழமான கற்றலுக்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘ஸ்டீம்’ கல்வி முறை நோக்கி....
பள்ளிக்கல்வி அமைச்சா் ராஜ்மோகன் மேலும் கூறியதாவது: ‘பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவை ஒருங்கிணைந்த செயல்திட்ட அடிப்படையிலான ‘ஸ்டெம்’ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. இனி ‘ஸ்டெம்’-இல் இருந்து ‘ஸ்டீம்’ நோக்கி அதாவது கலையையும் உள்ளடக்கிய கல்விமுறையை நோக்கி நகரவுள்ளோம். கலையில் கற்பனைத் திறன், வடிவமைப்பு, படைப்பாற்றல் திறன் மேம்பாடு போன்றவை உள்ளடங்கும். இதன்மூலம் வழக்கமான சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு கடினமான சவால்களுக்கும் மாணவா்களால் புதிய வழிகளைக் கண்டறிய முடியும் என்றாா் அவா்.
Summary
No more heavy school bags: Minister Rajmohan said
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





