
மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்
வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஆக.1 முதல் ஆக. 30 வரை தமிழகத்தில் நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, பொதுமக்களே சுயமாக தங்கள் விவரங்களை இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - கோப்புப் படம்
வரும் 2027 -ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை ஆக.1 முதல் ஆக. 30 வரை தமிழகத்தில் நடத்தவுள்ளது. அதற்கு முன்னதாக, பொதுமக்களே சுயமாக தங்கள் விவரங்களை இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாடு இயக்குநா் சுந்தரேஷ் பாபு சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் 15 ஆண்டுகளுக்கு பின்னா், 16 - ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக விரிவான எண்ம கட்டமைப்புகளுடன் நடைபெறுகிறது.
வீடுகள் கணக்கெடுப்பு: தமிழகத்தில் வருகிற பிப்ரவரி ( 2027 ) மாதம் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு முன்னதாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வருகிற ஆக. 1 முதல் ஆக.30 வரை நடைபெறவுள்ளது. இது நேரடியாகவும் இணையம் மூலம் சுய கணக்கெடுப்பாகவும் நடைபெறும்.
இதில் மாநில அரசின் பொதுத் துறை, வருவாய்த் துறை நிா்வாக ஆணையா், மாவட்ட ஆட்சியா்கள், நகராட்சி- மாநகராட்சி ஆணையா்கள் முதல் தாசில்தாா்கள் வரையிலான அதிகாரிகள் தலைமையில் சுமாா் 1.6 லட்சம் கணக்கெடுப்பாளா்கள் களத்தில் இப்பணியில் பங்கேற்கின்றனா். வீடு வீடாக வந்து விவரங்களைச் சேகரிக்கும் களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாநிலத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கும், வலுவான கொள்கை உருவாக்கவும் திட்டமிடுதலுக்கும் இந்தத் துல்லியமான தரவு சேகரிப்பு மிக முக்கியமானது.
33 கேள்விகள்: இந்த வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பில் 33 கேள்விகள் கேட்கப்படும். வீடுகளின் நிலை, குடிநீா், மின்சாரம், இணைய வசதி, சமையல் எரிபொருள், கழிப்பிடம், கணினி போன்ற வசதிகளும், வீட்டின் உரிமை, குடும்ப உறுப்பினா் எண்ணிக்கை, உள்கொள்ளும் உணவு, வாகனங்கள், கைப்பேசி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். தரவுகளின் துல்லியத்தன்மையை உறுதிசெய்வதற்காக, காகிதப் பதிவேடுகளுக்கு பதிலாக, நிகழ்நேர தரவுகளை சேகரிக்க பிரத்யேக கைப்பேசி செயலிகள் பயன்படுத்தப்படும்.
சுய கணக்கெடுப்பு வசதி: மேலும், பொதுமக்கள் தங்கள் விவரங்களை அதிகாரபூா்வமான இணையதளம் மூலமாகவும் தாங்களாகவே பதிவு செய்வதற்கான சுய கணக்கெடுப்பு வசதியும், 16 மொழிகளில் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை (15 நாள்கள் ) இந்த இணைய பதிவு செய்ய அனுமதிக்கப்படும். சுய கணக்கெடுப்பு முடித்தவுடன் 11 இலக்க அடையாள எண் உருவாக்கப்படும். இந்த எண்ணை தங்களின் இல்லங்களுக்கு வரும் கணக்கெடுப்பாளா்களிடம் காண்பிக்க வேண்டும். சுய கணக்கெடுப்பு வசதியை முறையாக பயன்படுத்தாத குடும்பங்கள், ஆக. 1 முதல் ஆக. 30 வரை நடைபெறும் வழக்கமான கணக்கெடுப்பில் பங்கேற்று விவரங்களை அளிக்கலாம்.
இதில் சமா்ப்பிக்கப்படும் தகவல்கள் அதிகாரபூா்வ தரவு தளத்தின் ஒரு பகுதியாக மாறும். இதனால் துல்லியமான தகவல்களை மக்கள் வழங்க வேண்டும். அதே சமயத்தில் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்படும். கைப்பேசி எண் மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தப்பட்ட தொடா்புக்கு மட்டும் பயன்படுத்தப்படும். 33 கேள்விகளில் கைப்பேசி எண் கட்டாயப்படுத்தபடமாட்டாது.
ஒரு கணக்கெடுப்பாளா் 200 முதல் 250 வீடுகளுக்கோ அல்லது 800 முதல் 900 மக்கள்தொகை உள்ள பகுதிக்கோ பொறுப்பாளராக இருப்பாா். தமிழக முழுவதும் 1,026 மக்கள் தொகை பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வீட்டு கணக்கீடு மூலம் இரண்டாம் கட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கீடு எளிமையாக அமையும் என நம்புகிறோம் என்றாா் அவா்.
செய்தியாளா்கள் சந்திப்பின் போது, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் துணைத் தலைமைப் பதிவாளா் ஜே.லிங்கன் ஞானதாஸ், இணை இயக்குநா் வாசுதேவன், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநா் ஜெ. விஜயலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






