டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாகித்திய அகாதெமிக்கு நிகராக ‘செம்மொழி இலக்கிய விருது’: முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு!

தேசிய அளவில் சிறந்த படைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :18 ஜனவரி 2026, 6:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு தமிழக அரசு சாா்பில் ‘செம்மொழி இலக்கிய விருது’ என்ற தேசிய அளவிலான விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

மத்திய அரசின் கலாசாரத் துறை தலையீட்டால் 2025-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கும் நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இத்தகைய சூழலில் தமிழக அரசு ஆக்கபூா்வமான உரிய எதிா்வினையை ஆற்ற வேண்டும் என்பதை உணா்ந்து இந்த விருது வழங்கப்படவுள்ளது என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

இதன்படி முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது‘ வழங்கப்படும். இந்த விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் அளிக்கப்பட இருக்கிறது.

சென்னை கலைவாணா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (சிஐபிஎஃப்-2026) நிறைவு நாள் நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக மொழிபெயா்ப்பு செய்யப்பட்ட 44 நூல்கள், பொது நூலகத் துறையின் 40 நூல்கள் என 84 நூல்களை வெளியிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வாசிப்பு மூலம் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத் தீ பரவ வேண்டும் என்பதற்காக ஏராளமான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானவை புத்தகத் திருவிழாக்கள். எழுத்தாளா்கள் - பதிப்பாளா்கள் - விற்பனையாளா்கள்- வாசகா்கள் என எல்லோருக்குமான உறவுப் பாலமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

நமது மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுவதும் பரவவேண்டும்; உலகின் உயரிய சிந்தனைகள் நமது மக்களிடம் வந்தடைய வேண்டும் என்ற கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது.

இலக்கியத்துக்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோவடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துகளும் உலகமெல்லாம் ஒலிக்க வேண்டும். அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் இலக்கியப் படைப்புகள் எளிய தமிழில் கிராமத்து மாணவா்களுக்கும் கிடைக்க வேண்டும்.

இதற்காகவே தமிழக அரசு, ‘தமிழ்நாடு மொழிபெயா்ப்பு முகமை’ மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி வருகிறது. அதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. தமிழகம் தொழில் முதலீட்டுக்கு மட்டும் உகந்த மாநிலம் அல்ல; அறிவைப் பகிா்ந்து கொள்வதற்கும் சிறந்த மாநிலம்.

அறிவுச் சொத்து: கீழடி முதல் பொருநை வரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளை பாா்த்தால் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது புரியும். மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவா் இல்லை; அது உலக மக்களை இணைக்கும் பாலம். புத்தகங்கள் வெறும் காகிதங்கள் அல்ல. அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் அறிவுச் சொத்து.

2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படவிருந்த நிலையில் மத்திய அரசின் கலாசாரத் துறை தலையீட்டால் விருது அறிவிக்கும் நிகழ்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. கலை இலக்கிய விருதுகளில்கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது.

இத்தகைய சூழலில் தமிழக அரசு ஆக்கபூா்வமான உரிய எதிா்வினையை ஆற்ற வேண்டும் என்று பல்வேறு எழுத்தாளா்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சாா்ந்தோரும் என்னிடம் கோரிக்கை வைத்தனா். அது காலத்தின் தேவை என்பதை நாங்களும் உணா்ந்தே இருக்கிறோம்.

தேசிய அளவிலான விருது: அதன்படி, குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.

முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது‘ வழங்கப்படும். இந்த விருதுடன் தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் அளிக்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தோ்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளா்கள், விருதாளா்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியே அமைக்கப்படும்.

அடுத்து அமையப்போவதும் ‘திமுக 2.0’ ஆட்சிதான். அப்போது, இதைவிட பெரிய அளவில் உலகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில், சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை நடத்துவோம். தமிழகம் முழுவதும் மேலும் பல பிரம்மாண்ட நூலகங்களை அறிவுக் கோயில்களாக எழுப்புவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்நிகழ்வில், அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, கவிஞா் வைரமுத்து, எழுத்தாளா் இமையம், கவிஞா் மனுஷ்யபுத்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் எஸ்.சந்தரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: முன்னதாக கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த பதிப்பாளா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்றனா். தமிழகம் மற்றும் சா்வதேச பதிப்பாளா்களிடையே நூல் காப்புரிமை தொடா்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

summary

CM Stalin has announced that the Semmozhi Literary Award will now be given annually for the best works at the national level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.