டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையில் தமிழகம் முன்னோடி : மு.க. ஸ்டாலின்

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்- படம் - டிஐபிஆர்
Updated On :18 பிப்ரவரி 2026, 3:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 18) தெரிவித்தார்.

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு - ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை விழா இன்று (பிப். 18) நடைபெற்றது.

இதில், விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் இன்று (பிப். 18) வழங்கினார்.

பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்

பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''நாட்டில் இல்லாத அளவுக்கு 6,568 வீரர்களுக்கு ரூ. 211.39 கோடிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.

2023 ஆம் ஆண்டு 76 பயிற்றுநர்களை நியமித்தோம். கடந்த மாதம் புதிதாக 34 பயிற்றுநர் அறிவிப்பை வெளியிட்டோம். தேசிய போட்டிகளில் வென்ற வீரர்களுக்கான நிதி உதவி உள்பட அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று, சிறந்து விளங்குகின்ற 2 பெண் மற்றும் 2 ஆண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கிக் கொண்டு வருகிறோம். இதுவரை 22 பேர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.

முக்கியமான ஒரு திட்டம் - அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவிகிதம் விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற ஊக்குவிக்கும் எலிட் திட்டத் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற, விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதி உதவி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ரூ. 261 கோடி ரூபாய் மதிப்பிலான பன்முக விளையாட்டு உட்கட்டமைப்புத் திட்டம், சென்னை செம்மஞ்சேரியில் வர இருக்கிறது.

நம்முடைய சென்னையை பொறுத்தவரைக்கும், இப்போதே செஸ், கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் சர்வதேச அளவில் ஒரு முக்கிய மையமாக இருக்கிறது.

இந்தத் திட்டம் வந்ததும், மற்ற விளையாட்டுகளிலும் சென்னை முக்கிய இடத்தை நிச்சயமாக பெறும். ஒலிம்பிக் வீரர்களுக்கான பயிற்சியை ஊக்குவிப்பதோடு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் சர்வதேசப் போட்டிகளை நடத்தும் திறனையும் இது மேம்படுத்தும்

உலகம் செல்லும் வேகத்தில் ஒரு முறை மட்டும் வென்றால் போதாது, தொடர்ந்து வெல்ல வேண்டும். இந்த அறிவுரை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மட்டும் அல்ல, அரசியல் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க இளைஞர்கள் துணை நிற்க வேண்டும்'' எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.