திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசும் முதல்வர்: மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையை சினிமா செட்போல நினைத்து முதல்வர் விஜய் வசனங்கள் பேசி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தது குறித்து...

MK Stalin

மு.க. ஸ்டாலின் - DMK

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:54 pm IST

சட்டப்பேரவையை சினிமா செட்போல நினைத்து முதல்வர் விஜய் வசனங்கள் பேசி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் பாரக்காத தோல்வியும் இல்லை. தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. கழகத்தின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோட இருப்பதற்கான காரணம், நம் அமைப்புமுறைதான். “இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது. அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும்” இது தலைவர் கலைஞர் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையாலதான், நாம் நிற்கிறோம்.

நாம் தோல்வியடைய பல காரணங்கள் இருப்பினும் நிர்வாகிகளின் செயல்பாடுகளும் ஒன்று. அதையும் நாம் மறைக்கத் தேவையில்லை. நம் தவறுகளை முதலில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். எந்தத் தனிமனிதரின் தவறாக இருந்தாலும் - அதனால் பாதிக்கப்படுவது 75 ஆண்டுகாலக் கழகம்.

தோல்விக்கு பிறகு, எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியாக பார்த்து குறைகளைக் கண்டறிந்து ஆளை மாற்றுவதைவிட முழுமையான ஒரு சுய பரிசோதனை வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த வகையில் கழகத்தின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களைச் செய்யவிருக்கிறோம்.

ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம்.

இளைஞர்கள், பெண்கள் நம்பிக்கையை மீண்டும் நமக்கு பெற்றுத் தருவதுபோல நம் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இனிவரும் நிர்வாகிகளுக்கு, அந்தந்த பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பையும், பதவிக் காலத்தையும் அறிமுகப்படுத்த போகிறோம். புதுமுகங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் பொறுப்புகளை வழங்கப் போகிறோம்.

கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டும்தான், நாம் மீண்டும் அரசியல் வெற்றியை பெற முடியும். சிலர் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் மலரும் முகம், நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் மலர்வது இல்லை. எதிர்க்கட்சிக்காரர்களைப் பாத்தால் வணங்கும் கை, நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் வணங்குவது இல்லை. தனக்கு இணையாக யாரும் வளரக் கூடாது என நினைத்தால் அந்த மாவட்டத்தில அவர்கள் மட்டும்தான் இருப்பார்கள்.

ஒரு மாவட்டச் செயலாளரை மட்டும் வைத்து அந்த மாவட்டத்தில் கட்சியை வளர்த்துவிட முடியாது. ஒரு எம்எல்ஏ மட்டுமே வலிமையாக இருந்தால் அந்தத் தொகுதியில் வென்றுவிட முடியாது. ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாக செயல்படும்போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும். படைக்கு இளையோர் வரும்போது, அவர்களை மூத்தோர் வரவேற்று வழி நடத்துவதுதான் வலுவான படைக்கு அடையாளம்.

இப்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? மக்களுக்காக உழைக்காமல் - போராட்டம் நடத்தாமல் - கொள்கை இல்லாமல் - நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமல் - ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதை பார்த்து நாமும் அப்படி ஆக முடியாது - ஆகிடவும் கூடாது. அதுபோன்று நாமும் கட்சியை நடத்தலாம் என்று நினைக்கவே கூடாது. நாம் பொழுதுபோக்குக்காக அரசியலுக்கு வந்தவர்கள இல்லை; போராட வந்தவர்கள்.

வெற்றி - தோல்வியில் நம் இயக்கத்தின் வாழ்க்கை அடங்கி இருக்கப் போவது இல்லை. ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரும்வரை தூங்கி வழிவதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். மீண்டு எழுந்து வருவதில்தான் நாம் சிறப்பு வாய்ந்தவர்கள். சிறப்பாகக் கொடுப்போம்.

நமக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் போராட போகிறோம். அவர்களின் நலனுக்கும் துணைநிற்க போகிறோம்.

இப்போதைய முதல்வர், நாம் கொண்டு வந்த எல்லா திட்டங்களுக்கும் பெயர் மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார். சட்டப்பேரவையை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார்.

நம்மை பொருத்தவரை வெற்றியோ தோல்வியோ, மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவர்கள் நாம். இனமும் - மொழியும் - நாடும் இருக்கும் வரை கருப்பு - சிவப்புக் கொடி பறக்க வேண்டும் என்ற நினைப்புடன் நாம் உழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

CM Vijay treats the Legislative Assembly like a movie set, says DMK Chief M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.