
அரசுப் பள்ளியில் வட மாநில ஆசிரியர்களா? மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு
சேலம் மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள் நியமன விவகாரம் குறித்து...

பிரதிப் படம்
சேலம் மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குப்பூரில் அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மேலும், இந்தப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற 5 மாணவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் மறுதேர்வில் 7.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வட மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ் தெரியாத வட மாநில ஆசிரியர்களால் எப்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என மாணவர்களின் பெற்றோர்களும் கல்வியாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால், மாணவர்களுக்கு கற்றலில் சிரமமும், உளவியல் ரீதியாக பாதிப்பும் ஏற்படக் கூடும் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், வட மாநில ஆசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஊதியம் வழங்கப்படுகிறதா? என்று விளக்கம் கேட்கப்பட்டதாகவும் கல்வி அலுவலர் கூறியுள்ளார்.
Summary
North Indian Teachers in TN government schools: Students' parents object
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







