ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கர்நாடகத்தில் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனப் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்கள். (இடமிருந்து) அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

கர்நாடகத்தில் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனப் பாது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், ஷக்யா வனச்சரகத்துக்கு உள்பட்ட காட்டுப் பகுதியில் சனிக்கிழமை (ஆக. 15) அதிகாலை 6 மணி அளவில் வனப் பாதுகாவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டுக்குள் அத்துமீறி மான் வேட்டியாடி அதன் இறைச்சியை கொண்டுவந்த 4 பேரை பார்த்துள்ளனர்.

நால்வரும் நாட்டுத் துப்பாக்கியால் வனப் பாதுகாவலர்களை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கில் அந்த 4 பேர் மீதும் வனப் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஒருவர் படுகாயங்களுடன் பிடிபட்டுள்ளார். அவரை மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். கர்நாடகத்தின் ஹனூர் வட்டம், தோமையார்பாளையா கிராமத்தில் வசிந்து வந்தார்கள் என்று கண்டறிந்துள்ளனர். அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் சவரியப்பன் (35) ஆகியோர் உயிரிழந்துவிட்டதாகவும், ஜோசப் மகிமைதாஸ் (44) சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

மாடு தேடிச் சென்றவர்கள்: இந்த சம்பவம் தொடர்பாக அந்தோணிசாமியின் மனைவி மேரி அளித்த புகாரின்பேரில் ஹனூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேரி அளித்துள்ள புகாரில், "வெள்ளிக்கிழமை (ஆக.14) மாலை 6 மணி அளவில் தங்களது 2 மாடுகள் வீட்டுக்குத் திரும்பாததைத் தொடர்ந்து, அவற்றைத் தேடி 4 பேரும் காட்டுக்குள் சென்றுள்ளனர். வீட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவு சென்ற 4 பேரும், நள்ளிரவு ஆகியும் மாடுகள் கிடைக்காததால், அங்கேயே இரவு தங்கினர்.

இந்நிலையில், மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனப் பாதுகாவலர்கள், 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். அவர்கள் நாட்டுத் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கவில்லை. மாடுகளைத் தேடச்சென்றவர்களை வனப் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம்: இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தோமையார்பாளையா கிராம மக்கள் வெகுண்டெழுந்து ஹனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனத் துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஹனூர் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களைச் சந்தித்த ஹனூர் தொகுதி எம்எல்ஏ மஞ்சுநாத், போராட்டத்தைக் கைவிடுமாறும், அரசிடம் பேசி நியாயம் கிடைக்க வழி வகை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார் . மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசிடம் இருந்து தலா ரூ. 5 லட்சமும், தனது சொந்த பொறுப்பில் தலா ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் மைசூரில் உள்ள கே.ஆர்.மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன. அங்கு 3 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே உடல்கள் ஹனூருக்கு கொண்டு செல்லப்பட்டன.

விசாரிக்க கோரிக்கை: இதனிடையே, இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மனித உரிமை ஆர்வலர்கள், காட்டுக்குள் அத்துமீறி நுழைந்திருந்தாலும் அவர்களை சுட்டுக்கொலை செய்யும் அளவுக்கு வனப்பாதுகாவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால், 3 தமிழர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் கர்நாடகத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் கண்டனம்

கர்நாடகத்தில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, முதல்வர் ச.ஜோசப் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 பேர் காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது.

இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், இது குறித்து கர்நாடக வனத் துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு, நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்.

உயர்நிலை விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்: கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை வனத் துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத் துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதுடன், அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Summary

DMK President M.K. Stalin Condemns Shooting and Killing of 3 Tamils in Karnataka Forest Area

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.