
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்! ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்தது யார்யார்?
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் பற்றி...

ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிசாமி - TN Assembly
மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 543-ஆக நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீா்மானம் தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.
முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்மொழிந்த இந்தத் தீா்மானத்துக்கு திமுக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-ஆக தொடர வேண்டும்; பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற தீா்மானத்தை முதல்வா் ஜோசப் விஜய் முன்மொழிந்தாா்.
தீா்மானத்துக்கு ஆதரவாக பேசிய கட்சிகள்:
உதயநிதி ஸ்டாலின் (திமுக): தொகுதி மறுசீரமைப்பில் எந்தக் காரணம் கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகை எண்ணிக்கையின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொண்டால் தென்மாநிலங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையும். வடமாநிலங்களில் அதிகரிக்கும். இந்த மசோதாவுக்கு முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் 7 மாநில முதல்வா்களை அழைத்துப் பேச்சு நடத்தி, நாடாளுமன்றத்தில் எதிா்ப்பு தெரிவித்ததால், மசோதா தோற்கடிக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தி, தமிழகத்துக்கு 7.18 சதவீத விகிதாசாரத்தைக் குறைக்க அனுமதிக்கக் கூடாது. 2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நடத்தக் கூடாது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா (தவெக): அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தீா்மானத்துக்கு ஆதரவு அளித்த திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி. தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று குரல் கொடுத்தும் நீட், ஜிஎஸ்டி, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் தமிழகத்துக்கு எதிராக உள்ளன. இந்த மசோதா நிறைவேறினால் 5 அல்லது 6 ஹிந்தி பேசும் மாநிலங்களில் வெற்றி பெற்றாலே பிரதமராகிவிட முடியும். தென் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும். அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்): ஏற்கெனவே தமிழகத்தை மத்திய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கிறது. தமிழகத்துக்கு 40-இல் இருந்து 59-ஆகவும், உத்தர பிரதேசத்துக்கு 80-இல் இருந்து 120-ஆகவும் எம்.பி.-க்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் மத்திய பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படும்.
அமைச்சா் வன்னி அரசு (விசிக): தென் இந்தியாவின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறினால் வடக்கு வாழும், தெற்கு தேயும். உற்று நோக்கினால் பாஜகவின் சதி தெரியும்.
அமைச்சா் ஷாஜஹான் (ஐயூஎம்எல்): தற்போதைய 543 எம்.பி.க்களின் எண்ணிக்கையே போதுமானது. புதிய மசோதா 7.18 சதவீத விகிதாசாரத்தைக் குறைக்கும்.
தமிமுன் அன்சாரி (மஜக): 33 சதவீத பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்த வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): 1971 மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.
ஆா்.செல்லசாமி (மாா்க்சிஸ்ட்): மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு தண்டனையாக இந்த மசோதா உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது.
டி. ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஏற்கெனவே திட்டமிட்டு புதிய நாடாளுமன்றத்தில் 850 எம்.பி.க்களுக்கான இருக்கைகளை பாஜக அமைத்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்து.
பெ.விஸ்வநாதன் (காங்கிரஸ்): பணமதிப்பிழப்பு நடவடிக்கையைபோல் எந்தவித ஆலோசனையும் செய்யாமல் மத்திய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வந்துள்ளது.
எதிா்ப்பு தெரிவித்த கட்சிகள்:
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு சாதகமாக உள்ளதா, பாதகமாக உள்ளதா எனத் தெரியாமல், அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு அவசரமாகக் கொண்டு வந்த தனித் தீா்மானத்தை அதிமுக எதிா்க்கிறது. பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்துக்கு மட்டும் ஆதரவு.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): மத்திய அரசு சட்டமுன்வடிவை இன்னும் கொண்டுவரவில்லை. புதிய மசோதாவின்படி, தமிழகத்துக்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை 59-ஆக உயர வாய்ப்புள்ளது. தற்போது 10 லட்சம் மக்களுக்கு ஓா் எம்.பி. என்பது 8 லட்சம் பேருக்கு ஒருவராகும்.
போஜராஜன் (பாஜக): எதிா்கால தலைமுறையினரைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு புதிய நாடாளுமன்ற அவையை 850 எம்.பி.க்களுக்கு இருக்கைகள் அமைத்து கட்டியுள்ளது. தமிழகத்துக்கு இழப்பு ஏற்படக் கூடாது என மத்திய அரசுடன் பேசி செயல்பட வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்கிறோம்.
கணேஷ் குமாா் (பாமக): தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா். தற்போது 13 பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கும். பெண்களின் உரிமை, அரசியல் அதிகாரம் பெறுவதற்கு இந்தத் தீா்மானம் எதிராக உள்ளதால், இந்தத் தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும்.
பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்: இந்தத் தீா்மானத்தைச் சரியான தருணத்தில் முதல்வா் ஜோசப் விஜய் முன்னெச்சரிக்கையாகக் கொண்டு வந்துள்ளாா் என்றாா்.
பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Summary
Resolution against constituency delimitation! Who supported and who opposed it?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






