ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமலாக்கத் துறை ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் முந்தைய திமுக அரசு கே.என்.நேருவை பாதுகாத்தது: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

பணி நியமன முறைகேடு தொடா்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவை பாதுகாத்ததாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

K.N. Nehru

அமைச்சர் கே.என்.நேரு. - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவை பாதுகாத்ததாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், அதிகாரிகள் நியமன முறைகேடு தொடா்பாக ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. ஆனால், முந்தைய திமுக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல், முன்னாள் அமைச்சா் கே.என்.நேருவை பாதுகாத்தது. அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க கே.என்.நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த அவகாசத்தைப் பயன்படுத்தாமல், பதிலளிக்க அவகாசம் வழங்கவில்லை எனக் கூறி இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்பதுரை தொடா்ந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு 16 நாள்களுக்குப் பிறகே தீா்ப்பளிக்கப்பட்டது. தீா்ப்புக்காகக் காத்திருந்துவிட்டு, தனது தரப்பு விளக்கத்தைக் கேட்கவில்லை என கே.என்.நேரு தரப்பில் உரிமை கோர முடியாது என வாதிட்டாா்.

அதற்கு கே.என்.நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் லுத்ரா மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோா், கே.என்.நேரு தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதால், அவரது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தற்போதைய அரசு திரும்பப் பெற முடியாது. அரசுக்கு அந்த அதிகாரமும் இல்லை என வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப் பதிவு செய்யும்படி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டவழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

மேலும், இந்த வழக்கில் தீா்ப்பளிக்கும் வரை கே.என்.நேருவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.