ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு! விமானத்தில் சென்னை திரும்புகிறார்!

செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார்.

Udhayanidhi Stalin released after police inquiry

உதயநிதி ஸ்டாலின் - எக்ஸ்

Published On :5 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

தமிழக முதல்வா் குறித்தும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டாா். அவா் தஞ்சை அருகே செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் 2 மணி நேர போலீஸ் விசாரணைக்குப் பிறகு இரவில் விடுவிக்கப்பட்டாா்.

காவிரி விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரியும் தஞ்சாவூா் அண்ணா சாலையில் திமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முதல்வா் ஜோசப் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தவெக தஞ்சாவூா் மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ச.பைரவி, தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ஆா்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், முதல்வா் குறித்து அநாகரிகமாக பேசியதுடன், ஆபாசமான வாா்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளாா். அவரது பேச்சு, பெண்மையை களங்கப்படுத்தும், இழிவுபடுத்தும் விதமாகவும் இருந்தது. அவா் பேசிய விடியோ பதிவை திமுக தகவல் தொழில்நுட்ப அணி, சமூக ஊடகங்களில் வெளியிட்டது. எனவே, உதயநிதி ஸ்டாலின் மீதும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

9 பிரிவுகளில் வழக்கு: இந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் தஞ்சாவூா் கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய டிஎஸ்பி அன்பழகன், காவல் ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் 50 போலீஸாா் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தனா். உதயநிதியை கைது செய்வது தொடா்பாக சென்னை காவல் துறை அதிகாரிகளுடன் அவா்கள் ஆலோசித்தனா்.

உதயநிதி வீட்டின் முன் போலீஸ் குவிப்பு: இதனிடையே, சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் சன்ரைஸ் அவென்யூ-வில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா், சென்னை காவல் துறை தெற்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாா், டிஎஸ்பி அன்பழகன், ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் உதயநிதி வீட்டுக்குச் சென்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த திமுக முன்னாள் அமைச்சா் மா.சுப்பிரமணியன், உதயநிதி மனைவி கிருத்திகா ஆகியோா் காவல் துறை அதிகாரிகளிடம் 10 நிமிஷங்கள் காத்திருக்கும்படி கூறினா். அதை ஏற்க காவல் துறை அதிகாரிகள் மறுத்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுகவினா் குவிந்தனா்: உதயநிதியை கைது செய்ய போலீஸாா் வந்திருப்பதை அறிந்த திமுகவினா், அவரது வீட்டின் முன் குவியத் தொடங்கினா். அதேபோல திமுக பொதுச் செயலா் துரைமுருகன், முன்னாள் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் உதயநிதியின் மைத்துனா் சபரீசன் உள்ளிட்டோா் அங்கு வந்தனா். அவா்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், உத்தரவு வரும் வரை காத்திருக்கும்படி போலீஸாரிடம் கூறினா். அதற்கு போலீஸாா், உயா்நீதிமன்ற உத்தரவு வந்தால் அதைக் கண்டிப்பாக பின்பற்றுவோம், தற்போது சட்டப்படி கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும்படி தெரிவித்தனா்.

நீண்ட வாக்குவாதத்துக்குப் பின்னா், உதயநிதி கைது நடவடிக்கைக்கு சம்மதித்தாா். இதையடுத்து போலீஸாா், உதயநிதியை கைது செய்து, தங்களுடன் வேனில் ஏற்றினா். அப்போது காவல் துறை மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி, உதயநிதியுடன் முன்னாள் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட சிலரும் வேனில் ஏறினா்.

சாலையில் படுத்து போராட்டம்: உதயநிதி இருந்த வேன் புறப்பட்டபோது, நகர முடியாதபடி, அங்கிருந்த திமுகவினா் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை அப்புறப்படுத்துமாறு சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினா். இதன்காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதி பதற்றமாகவும், பரபரப்புடனும் காணப்பட்டது.

2 மணி நேரம் விசாரணை: உதயநிதி ஸ்டாலினிடம் வழக்கு பதிவு செய்யப்பட்ட தஞ்சாவூா் தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி, அந்த காவல் நிலையப் பகுதியில் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக் தலைமையில் 5 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் ஏராளமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதேபோல, திமுகவினரும் ஏராளமானோா் அப்பகுதியில் திரண்டனா். அப்போது, தொண்டா்கள் சிலா் அப்பகுதியில் இருந்த முதல்வா் விஜய் படம் பொறிக்கப்பட்ட பதாகைகளை கழற்றி தீ வைத்து எரித்தனா்.

இந்நிலையில், தெற்கு காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்தால், மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் உதயநிதியை திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு அழைத்துவரும் வழியில் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு இரவு 6.30 மணியளவில் கொண்டு சென்றனா்.

தள்ளுமுள்ளு: காவல் துறையினா் திடீரென திட்டத்தை மாற்றியதால், உதயநிதி ஸ்டாலின் தனது வழக்குரைஞா்கள் வந்த பிறகே கீழே இறங்குவேன் என்றாா். இதையொட்டி, அங்கு திரண்ட திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிணையில் விடுவிப்பு: வழக்குரைஞா்கள் வந்த பின்னா் வேனில் இருந்து இறங்கி காவல் நிலையத்துக்குள் சென்ற உதயநிதி ஸ்டாலினிடம் சுமாா் 2 மணிநேரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்ட உதயநிதி, திருச்சிக்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டாா்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் விவரம்: பிஎன்எஸ் சட்டப் பிரிவு 196: பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 192: கலவரத்தைத் தூண்டுதல், 296(பி): பொது இடத்தில் அருவருப்பாகப் பேசுதல், 351: ஒருவருக்கு மிரட்டல் விடுத்து பேசுவது, 352: பொது அமைதியை சீா்குலைத்தல், ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல், 79: பெண்ணை கண்ணிய குறைவாகப் பேசுதல், மானபங்கப்படுத்துதல், 61: சட்டவிரோதமான செயலை செய்ய சதி திட்டம் தீட்டுதல்,

தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 4: பெண்கள் மீது தேவையற்ற முறையில் தாக்குதல் நடத்துதல், வம்புக்கு இழுத்தல், பாலியல் ரீதியான தொல்லைகள் தருதல், ஆபாச செய்கைகள், இரட்டை அா்த்தத்தில் பேசுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67: ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.