ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளின் விளக்கங்களைக் கேட்டது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 12:21 am IST

வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளின் விளக்கங்களைக் கேட்டது ஏன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

2016 - 2021-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில், ரூ.98.25 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தது.

கடந்முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கந்தசாமி மற்றும் விஜய காா்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடா்பாக கடந்த பிப்.27-ஆம் தேதி விளக்கம் அளித்து பொதுத்துறை செயலருக்கு ஊழல் தடுப்புத் துறை கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த கோப்புகளை 5 மாதங்களாக நிலுவையில் வைத்தது ஏன்? என கேள்வி எழுப்பி முன்னாள், இந்நாள் பொதுச் செயலா்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காலதாமதத்துக்கான காரணங்களை விளக்கி, முன்னாள் பொதுத்துறை செயலா் ஹரீஷ் ரீட்டா தாக்கா் மற்றும் தற்போதைய செயலா் சுந்தரவள்ளி ஆகியோா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது ஊழல் தடுப்புத் துறை தரப்பில் ஆஜரான, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், ஐஏஎல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவது தொடா்பான கோப்புகள் கடந்த ஜூலை 22-ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது ஏன், இதுபோன்ற நடைமுறையை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினா். பின்னா் இந்த நடைமுறையை நிறுத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினாா். பின்னா், வழக்கின் விசாரணையை ஆக.24-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.